SOURCE :- BBC NEWS

டிரம்பின் அதிரடி வரி விதிப்பு : உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

3 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளார். சில நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10% முதல் சில நாடுகளுக்கு 40%-க்கும் மேல் வரை என வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது.

(டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது)

இந்த வரி விதிப்புகளுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர், சிலர் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், அமெரிக்கா வரி விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் ஆளே இல்லாத தீவுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது பெசுபொருளாகி வருகிறது. ஆனால், இந்த இடங்களில் இருந்து என்ன சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதில் தெளிவில்லை.

இந்த வரி விரிப்புகள் காரணமாக வர்த்தகப் போர் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது.

‘வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்’ – இத்தாலிய பிரதமர்

'இது வர்த்தகப் போரை கொண்டு வரும்' - டிரம்ப் அறிவிப்பால் கொந்தளிக்கும் உலகத் தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி புதிதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க வரிகளை “தவறானது” என்றும், இது வர்த்தகப் போருக்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

“உலகின் பிற நாடுகளுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளைத் தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தும் ஒரு வர்த்தகப் போரைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

‘விரைவில் முடிவெடுப்போம்’ – சுவிட்சர்லாந்து அதிபர்

டிரம்பின் அதிரடி வரி விதிப்பு : உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சுவிஸ் அதிபர் கரின் கெல்லர்-சட்டர் தனது எக்ஸ் பக்கதில், வரி விதிப்புகளுக்கான பதில் நடவடிக்கைகள் என்னவென்று “விரைவில் தீர்மானிக்கப்படும்” என்று எழுதினார்.

“நாட்டின் நீண்டகால பொருளாதார நலன்கள் முதன்மையானவை,” என்று குறிப்பிட்டுள்ள அவர் “சர்வதேச சட்டத்திற்கு இணங்குதல் மற்றும் சுதந்திர வர்த்தகம் ஆகியன முக்கியமானவை” எனவும் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது வர்த்தகப் பட்டியலின்படி சுவிட்சர்லாந்து “மோசமான குற்றவாளிகளில்” ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் பொருட்களுக்கு அமெரிக்க திட்டத்தின்கீழ் 31% வரி விதிக்கப்படும்.

அமெரிக்கா 2024ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்தது, ஆனால் அதைவிட இரு மடங்கு அதிகமாக, 63.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியை அமெரிக்கா செய்தது. இதுவொரு பெரிய வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

முன்னதாக, இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆண்டு வணிக அறிக்கையில், “அமெரிக்கா சுவிட்சர்லாந்தை பாதுகாப்புவாத நாடு என்று விவரித்து, அது அதிக மானியங்கள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி விலைகளைக் குறைவாக வைத்திருக்கவும் அதன் விவசாயத் துறையைக் கட்டமைக்கவும் பயன்படுத்தியது” என்று கூறியது.

வரி விதிப்புகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வேகமாக உயரும் வர்த்தக வரிகளின் தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பொருளாதார சேதத்தின் அளவு, அமெரிக்கா மற்றும் பிற வர்த்தகப் பங்காளிகள் மீது வரிகளைச் சுமத்துவதில் மற்ற நாடுகள் அமெரிக்காவை எவ்வளவு பின்பற்றுகின்றன என்பதைப் பொறுத்தது என்று பிபிசி வெரிஃபை செய்தியாளர் பென் சு கூறுகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், முக்கியமான பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பொருளாதார வல்லுநர்கள், தீவிர உலகளாவிய வர்த்தகப் போரின் சாத்தியமான தாக்கத்தை ஆராய்ந்தனர். இதில் நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் கட்டணங்களும் 25% வரை உயரும் என்று கணித்தனர்.

அமெரிக்கா, கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அதிக இழப்புகள் ஏற்படும் என்றும் உலகப் பொருளாதாரம் சுமார் 5.5% சிறியதாகும் என்றும் இந்த ஆராய்ச்சி தெரிவித்தது.

தொழில்துறை உற்பத்திக்குத் தேவையான இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் பிரிட்டன், கனடா ஆகியவை அவற்றின் பொருளாதார உற்பத்தியில் 10%க்கும் அதிகமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டது.

‘முற்றிலும் தேவையற்றவை’ – ஆஸ்திரேலிய பிரதமர்

டிரம்பின் அதிரடி வரி விதிப்பு : உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த வரி விதிப்புகள் “எதிர்பாராதவை அல்ல” ஆனால் அவை “முற்றிலும் தேவையற்றவை” என்று கூறியுள்ளார்.

“அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்புகளைக் குறிப்பிட்டார், ஒரு பரஸ்பர வரி விதிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கும், 10% அல்ல,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அவை எங்கள் இரு நாடுகளின் கூட்டாண்மையின் அடிப்படைக்கு எதிரானவை” என்றும் “இது ஒரு நண்பனின் செயல் அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.

கனடா பிரதமரின் எதிர்வினை என்ன?

டிரம்பின் அதிரடி வரி விதிப்பு : உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கனட பிரதமர் மார்க் கார்னே செய்தியாளர்களிடம் கூறுகையில், டிரம்பின் வரிகளுக்குத் தனது நாடு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

“ஒரு நோக்கத்துடனும் சக்தியுடனும் செயல்படுவது அவசியம், அதைத் தான் நாங்கள் செய்வோம்” என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் அவர் கூறினார்.

கனடாவின் கார் உற்பத்தி தொழில்துறையினர் என்ன நினைக்கிறார்கள்?

கனடாவின் கார் உற்பத்தி தொழில்துறையினர் என்ன நினைக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க வரி விதிப்புகள் காரணமாக கனடாவின் கார் உற்பத்தி தொழில் வெகுவாகப் பாதிக்கப்படும் என கனடாவின் வாகனத் தலைநகரம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் எல்லையில் உள்ள ஒன்டாரியோவின் வின்ட்சர் நகரில் இருந்து செய்தி சேகரித்து வரும் பிபிசி செய்தியாளர் அலி அப்பாஸ் அகமதி தெரிவிக்கிறார்.

வின்ட்சர் மற்றும் அதைச் சுற்றியுள்ள எசெக்ஸ் மாகாணத்தில் சுமார் 4,22,000 மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 42,300க்கும் அதிகமானோர் உற்பத்தித் துறையில் பணிபுரிகின்றனர். எனவே, எஃகு, அலுமினியம் மீது தற்போதுள்ள 25% தவிர, கார்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் இந்தப் பிராந்தியத்தில் தாக்கத்தை உள்ளது.

ஒன்டாரியோவில் இயங்கி வரும் பிரதான வாகன உற்பத்தி பாகங்களை வழங்கும் லினாமர் என்ற நிறுவனத்தின் ஒரு மூத்த நிர்வாகி, ஒரு வர்த்தகப் போரில் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வட அமெரிக்காவில் கார் தொழில்துறை ஸ்தம்பிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

அந்த அச்சுறுத்தல் வின்ட்சரில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ளது. ஏனெனில் 2000களின் முற்பகுதியில் டெட்ராய்டில் ஆட்டோமொபைல் தொழில் சரிந்தபோது, ஆற்றுக்கு அப்பால் உள்ள அந்த நகரின் பொருளாதார வீழ்ச்சியை வின்ட்சர் குடியிருப்பாளர்கள் நேரடியாகக் கண்டனர்.

பிரிட்டன் ஆறுதல் அடைகிறது

இந்த வரி விதிப்புகளைப் பார்க்கும்போது, பிரிட்டன் அரசு ஆறுதல் அடைந்துள்ளது என்றாலும் உற்சாகம் அடையவில்லை என்று தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசியின் அரசியல் பிரிவு செய்தி ஆசிரியர் கிறிஸ் மேசன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும், பிரிட்டனின் வர்த்தகக் கூட்டளிகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் வேலைவாய்ப்புகள், தொழில்கள், உலக வர்த்தகம் ஆகியவற்றின் மீது வரும் நாட்களில் குறிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கா உடனான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள நான்கு பிரிட்டன் மத்தியஸ்தர்கள் கொண்ட குழு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கிறிஸ் மேசன் கூறுகிறார்.

ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

'இது வர்த்தகப் போரை ஏற்படுத்தும்' - டிரம்ப் அறிவிப்பால் கொந்தளிக்கும் உலகத் தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆசியாவில், உலகளாவிய வர்த்தகப் போர் அச்சுறுத்தல் குறித்த கவலைகள் பெருகியுள்ள நிலையில், காலை வர்த்தகத்தில், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

சீனாவின் பங்குச் சந்தைகளின் ஷாங்காய் காம்போசைட் குறியீடு பெரும்பாலும் அதே நிலையில் இருந்தது. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹேங் செங் 1.2% குறைந்துள்ளது.

டோக்கியோவில் உள்ள நிக்கேய் 225, 2.9%, தென் கொரியாவின் கோஸ்பி 1.7% குறைந்துள்ளது, ஆஸ்திரேலியாவின் ASX 200 சுமார் 1.2% குறைந்துள்ளது.

டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியுடன் இணைக்கப்பட்ட எதிர்கால ஒப்பந்தங்கள் சுமார் 800 புள்ளிகள் அல்லது 1.8% குறைந்தன, அதே நேரத்தில் எஸ்&பி எதிர்கால ஒப்பந்தங்கள் 2.7% சரிந்தன, தொழில்நுட்ப-கனரக நாஸ்டாக் 100 எதிர்கால ஒப்பந்தங்கள் 3.3% குறைவாக இருந்தன.

எதிர்கால ஒப்பந்தங்கள் என்பது எதிர்கால தேதியில் ஒரு சொத்தை வாங்க அல்லது விற்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகும். இவை, வியாழக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கும் அது எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளாகும், இருப்பினும் எதிர்கால ஒப்பந்தங்களின் வர்த்தகம் நிலையற்றதாக இருக்கலாம்.

ஆளே இல்லாத தீவுகள் மீது வரி விதிப்பு

'இது வர்த்தகப் போரை ஏற்படுத்தும்' - டிரம்ப் அறிவிப்பால் கொந்தளிக்கும் உலகத் தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா வரி விதித்துள்ள நாடுகளின் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில் ஆளே இல்லாத தீவுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ஹெர்ட் மற்றும் மெக் டோனால்ட்ஸ் தீவுகள் மீது 10% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்களாகும். இவற்றுக்கு அருகில் இருக்கும் இடம் அண்டார்டிகா. இவற்றில் மனிதர்கள் வசிப்பதே இல்லை.

அதே போன்று ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மேயன் என்ற அணுகுவதற்கு கடினமான இரண்டு நார்வே நாட்டு பிரதேசங்கள் மீதும் அமெரிக்கா 10% வரி விதித்துள்ளது. இந்த தீவுகள் வட துருவத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு தீவுகளிலும் சேர்த்து 2500 பேர் வசிக்கின்றனர்.

இந்த இடங்களிலிருந்து என்ன சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படும் என்பதில் தெளிவு இல்லை.

‘நியாயமற்ற வரி விதிப்பு’ – அயர்லாந்து பிரதமர்

டிரம்பின் அதிரடி வரி விதிப்பு : உலக நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் வரி விதிப்புகளுக்கு “எந்த நியாயமும்” இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அயர்லாந்து “இதை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதை ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன்” சேர்ந்து யோசிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கை “விகிதாசாரமாக” இருக்க வேண்டும் “நமது வணிகங்கள், தொழிலாளர்கள், குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று மார்ட்டின் கூறுகிறார்.

அதேநேரம், “மோதல் போக்கு யாருடைய நலன்களுக்கும் உகந்ததல்ல,” என்றும் அவர் கூறினார். “தற்போதுள்ள வலுவான அட்லான்டிக் கடந்த வர்த்தக உறவை மேம்படுத்த அயர்லாந்து தீவிரமாக வலியுறுத்தும்” என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் மைக்கேல் ஓ’நீல், “தீவிலுள்ள தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை” என்று கூறினார்.

“சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ள பொருளாதாரம், அனைத்து மக்களுக்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்க ஏதுவாக தொடர்ந்து செழித்து வளர்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

நிச்சயமற்ற இந்தக் காலகட்டத்தில் அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும், “எங்கள் தீவைச் சேர்ந்த அனைவரின் செழிப்பான எதிர்காலத்திற்கு” முன்னுரிமை அளிப்பதாகவும் ஓ’நீல் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாகப் பேசிய பிரிட்டன் பிரதமர் கீய்ர் ஸ்டார்மர், வரி விதிப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்கக் கூடிய எந்தவொரு பதிலடி வரிகளின் சாத்தியக்கூறையும், வடக்கு அயர்லாந்தில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் பிரிட்டன் அரசு “கூர்ந்து கவனித்து வருவதாக” தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU