SOURCE :- BBC NEWS
29 நிமிடங்களுக்கு முன்னர்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டியில் உலக சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.
டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றபின் மாற்றி அமைக்கப்பட்ட இந்திய அணி இதுவரை ஒருடி20 தொடரைக் கூட இழக்கவில்லை. இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களை வென்று சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது.
உள்நாட்டில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் தோல்வி என தாயகம் திரும்பியுள்ள சீனியர் அணியைவிட முற்றிலும் மாறுபட்ட அணியாக, இளம் வீரர்கள் கொண்ட அணியாக களமிறங்குகிறது இந்திய அணி.
ஆஸ்திரேலியத் தொடரில் இடம் பெற்ற வீரர்களில் ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி தவிர மற்ற அனைவருமே டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டில் எந்த டி20 தொடரிலும் தோல்வி அடையாமல் வெற்றி நடை போடுகிறது, கடைசியாக 2019ம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரை இந்திய அணி இழந்தது, அதன்பின் நடந்த 16 டி20 தொடர்களில் 14 தொடர்களில் வென்றுள்ளது, 2 தொடர்களில் டிரா செய்துள்ளதே தவிர தோற்கவில்லை.
கவனிக்கப்பட வேண்டிய ஷமி, பெத்தெல்
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 14 மாதங்களுக்குப்பின் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய பலமாகும். சாம்பியன்ஸ் டிராபிக்குள் பும்ரா உடற்தகுதி பெறுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஷமியின் உடற்தகுதியும், பந்துவீச்சும் உற்றுநோக்கப்படுகிறது. 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஷமி சர்வதேச போட்டியில் விளையாடாமல் இப்போது பங்கேற்கிறார். உள்நாட்டுப் போட்டியில் ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, உடற்தகுதியும் சிறப்பாக இருந்ததால், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்.
இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் பலர் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளனர். அதில் இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தெல் முக்கியமானவர். பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன்ஸ் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடி பந்துவீச்சாலும், பேட்டிங்கிலும் பெத்தெல்அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இவரை வாங்கியுள்ளது. அவர் இந்த சீசனில்தான் முதல்முறையாகப் பங்கேற்கிறார். பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வலம் வரும் பெத்தெல், இங்கிலாந்து அணிக்கு நடுவரிசையில் பெரிய பலமாக திகழ்வார் எனத் தெரிகிறது.
வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் இரு வேகப்பந்துவீச்சாளர்கள் தவிர்த்து அட்கின்ஸன், ஜேமி ஓவர்டன் இருப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். சுழற்பந்துவீச்சில் லிவிங்ஸ்டோன், அதில் ரஷித், பெத்தெல் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
பேட்டிங்கில் பில் சால்ட், பென் டக்கெட், ஹேரி ப்ரூக், பட்லர், லிவிங்ஸ்டோன் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த 4 பேட்டர்களுமே இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருப்பதால், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து நன்கு அறிந்தவர்கள்.
இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவான சவாலை அளிக்கக் கூடிய அணியாகவே இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
இந்தியாவின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
இந்திய அணியைப் பொருத்தவரை ப்ளேயிங் லெவனை எவ்வாறு தீர்மானிக்கப் போகிறது என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சுப்மான் கில் இல்லாமல் இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது. தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் சாம்ஸன் களமிறங்க வாய்ப்புள்ளது. அதன்பின் ஒன்டவுனில் சூர்யகுமார் யாதவ், 2வது வரிசையில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என வீரர்கள் களமிறங்கக் கூடும். வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் தவிர்த்து ஹர்திக் பாண்டியா உள்ளதால், 3வது பந்துவீச்சாளர் தேவைப்படாது. அதனால், நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகம்தான்.
சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, துணைக் கேப்டன் அக்ஸர் படேல் தவிர்த்து ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக ரவி பிஸ்னோய் அல்லது ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை கையாள்வதில் பலவீனமானவர்கள். கடந்த 2024-ஆம் ஆண்டில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பேட்டிங் சராரசி 26.8 ஆகவும், இந்திய அணிக்கு எதிராக 13 சராசரியும், ரன்ரேட் 6.74 ஆக மட்டுமே இருக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. ஆதலால், ஆப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் அல்லது லெக் ஸ்பின்னர் பிஸ்னோய் இருவரில் யார் களமிறங்குவார் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும், பொறுமையாக பேட் செய்யும் பழக்கம் இல்லாதவர். பவர்ப்ளே ஓவருக்குள் ரன் ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்த வேண்டும் என்ற ரீதியில் பேட்டை சுழற்றக் கூடியவர். அவரது அதிரடி எடுபடுவதுடன், சாம்ஸனுஙட கடைசி வரை களத்தில் இருந்தால் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
ஸ்கை, ரிங்கு சிங், திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்டம் நடுவரிசைக்கு முதுகெலும்பாக இருக்கும். அக்ஸர் படேலுக்கு அடுத்தபடியாக 8-வது வரிசையில் இருந்து நன்றாக பேட் செய்யக் கூடிய பவுலர்கள் இல்லாதது பலவீனமே. இதை தவிர்க்க வாஷிங்டன் சுந்தர் அல்லது நிதிஷ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்படலாம்.
2024 டி20 உலகக் கோப்பைக்குப் பின் இந்திய அணி பவர் ப்ளேயில் ஓவருக்கு 9.2 ரன்கள் வீதம் ஸ்கோர் செய்து வருகிறது. கடைசி 5 ஓவர்களில் 10.9 ரன்களும், 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையே 10.3 ரன்களும் சேர்த்து வலுவாக இருக்கிறது. எந்த அணியும் இதுபோன்ற சிறந்த ரன்ரேட்டை இதுவரை வைக்கவில்லை என்பதால், இந்திய அணியின் பேட்டிங் இங்கிலாந்துக்கு பெரிய அச்சுறுத்தலாக, சவாலாக இருக்கும்.
பயிற்சியாளர்களுக்கான போட்டிக்களம்
இந்திய அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டம் மெக்கலம் இருவருமே களத்தில் ஆக்ரோஷமான அணுகுமுறையை செயல்படுத்தக் கூடியவர்கள். டெஸ்ட் போட்டியில்கூட பேஸ்பால் அணுகுமுறையை செயல்படுத்திய மெக்கலம், டி20 போட்டிக்கும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகினார்.
கம்பீர், மெக்கலம் இருவருமே கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கியவர்கள். ஐபிஎல் தொடரில் வெவ்வேறு காலகட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இருவருமே கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டவர்கள். இருவருமே ஆக்ரோஷமான ஆட்டத்தையும், அணுகுமுறையையும், போட்டி என வந்துவிட்டால் எவ்வாறு செயல்படுவது, எதிரணி எவ்வாறு செயல்படும் என்பதை ஒருவொருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள்.
இந்திய அணியில் சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித், ஜடேஜா ஓய்வுக்குப்பின் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டஅணியாக மாற்றப்பட்டு, 3 டி20 தொடர்களை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வென்றுவலிமையாக திகழ்கிறது.
2022-ஆம் ஆண்டுக்குப்பின் பேஸ்பால் அணுகுமுறையை இங்கிலாந்து அணி கையில் எடுத்த போதிலும், அந்த அணியின் அதிரடியான பேட்டிங், வியூகங்கள் சிறப்பாக இருந்தாலும், ஐசிசி நடத்தும் எந்த பெரிய போட்டியிலும் அந்த அணியால் ஜொலிக்க முடியாமல் இருந்துவருகிறது.
மெக்கலம் பயிற்சியாளரான பின் இங்கிலாந்தின் டி20 அணி முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கிறது. அதேசமயம், உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த தோல்வி ஆகியவற்றை மறைக்கவும், மறக்கவும் பயிற்சியாளர் கம்பீர் இந்தத் தொடரை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளன, 4 ஆட்டங்களில் வென்றுள்ளன. பிப்ரவரி மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இரு அணிகளுமே டி20 தொடரில் விளையாடிய நிலையில் அடுத்த 22 நாட்களுக்குள் தங்கள் அணுகுமுறையை ஒருநாள் போட்டிக்குஏற்றபடி மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
ஆடுகளம் யாருக்கு சாதகம்?
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பவுண்டரி எல்லை மிகவும் அருகே இருக்கும். இந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டர்களை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடிக்க முயலும்.
ஏனென்றால், இரவுநேர பனிப்பொழிவு ஆட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே பனிப்பொழிவு இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி வெற்றியை பெற்றுத்தர முடியும். ஆதலால், ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்தியா- இங்கிலாந்து இதுவரை
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வென்றுள்ளன.
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியஅணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. அதற்கு பதிலடியாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் தோற்கடித்து பழி தீர்த்தது இந்திய அணி.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 9 போட்டிகளில் வென்று, 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU