SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்பான ‘Iron Dome’ அல்லது ‘David’s Sling’ பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இது, மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பாக கருதப்படுகிறது.
ஏவுகணைத் தாக்குதல் இரானில் இருந்து வந்தாலும் சரி, ஹமாஸ் ஏவிய ராக்கெட் தாக்குதலாக இருந்தாலும் சரி அவை இஸ்ரேலிய வான்வெளியில் நுழைந்தவுடன், தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் நடுவானிலேயே அழிக்கப்படுகின்றன.
போரின்போது ஒரு நாட்டுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் பாதுகாப்பு அமைப்பில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், தாக்குதல் விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்க ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்கள் இருக்கும்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் பல இடங்களை குறிவைத்தது.
‘பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்’ இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் 26 பேரை கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நீடித்த இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள மசூதிகள் மற்றும் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.
ஆனால், ‘பயங்கரவாத கட்டமைப்புகளை’ மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது. இருந்தபோதிலும், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி, ஆறு இடங்களில் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தம் 24 தாக்குதல்களை இந்தியா நிகழ்த்தியதாகக் கூறினார்.
இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை போர் விமானங்கள் ஐந்தையும், 25 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது
பாகிஸ்தானின் கூற்றுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தக் கூற்றை பிபிசி சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்துவது முதல்முறையல்ல. 2022 மார்ச் மாதத்தில், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு நகருக்கு அருகில் விழுந்தது. அதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறியிருந்தது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விரிவான தகவல்களை வழங்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பாபர் இப்திகார், தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ‘இந்திய ஏவுகணை’ தரையிலிருந்து ஏவப்படும் சூப்பர்சோனிக் ஏவுகணை என்று கூறியிருந்தார்.
மேலும், அந்த ஏவுகணை ஒரு சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என்றும், ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பாகிஸ்தான் கூறியது.
இந்த ஏவுகணையானது, பாகிஸ்தான் எல்லைக்குள் மூன்று நிமிடங்கள் 44 வினாடிகள் இருந்ததாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணித்த பிறகு செயலிழந்ததாக கூறப்பட்டது.
இந்தியாவின் சிர்சா நகரத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பிற்குள் அது வந்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த ஏவுகணை ஏவப்பட்டது முதல் செயலிழந்தது வரையிலான செயல்பாடு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு..
2019 முதல், இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளன. இந்திய விமானப்படையிடம் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன.
இந்தியாவின் அண்மைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. ஆனால் இதற்கு இந்தியா எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து குறைந்தது 20 நவீன J-10 போர் விமானங்களை வாங்கியுள்ளது என்றும், அவை PL-15 ஏவுகணைகளைக் கொண்டவை என்றும் லண்டனை தளமாகக் கொண்ட International Institute of Strategic Studies தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2019ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 எனப்படும் விமானங்களை அழிக்கும் ஏவுகணை அமைப்பை வாங்கியது. பாகிஸ்தான் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது.
ரேடியோ பாகிஸ்தானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் விமானப்படையின் வான் பாதுகாப்பு திறன்களில் ‘மேம்பட்ட வான்வழி தளங்கள், அதிக உயரம் முதல் நடுத்தர உயரம் வரையிலான வான் பாதுகாப்பு அமைப்பு, ஆளில்லா போர் விமானம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், விண்வெளி, சைபர், மின்னணு போர் உபகரணங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உபகரணங்களும் உள்ளதாக பாகிஸ்தான் விமானப்படையின் அண்மை அறிக்கை கூறுகிறது.
ஆனால் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு, சில முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை குறிப்பிடத்தக்க அளவில் இடைமறிக்கும் திறன் கொண்டவையா? இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளை பாகிஸ்தானால் ஏன் நடுவானில் அழிக்க முடியவில்லை?

பட மூலாதாரம், Getty Images
ஏவுகணைகளை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியுமா?
தரையிலிருந்து ஏவப்படும் குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனை பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-16FE உட்பட பாகிஸ்தான் தனது பாதுகாப்பு அமைப்பில் பல ஏவுகணை அமைப்புகளை இணைத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு நவீன பாதுகாப்பு ஏவுகணை அமைப்புத் திறனை வழங்குகிறது. தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் போர் கப்பல்களைத் தாக்க இவை பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும், வானிலிருந்து தரையை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையிலான பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லை.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்தியா, தனது ஏவுகணைகளை வானிலிருந்து ஏவியதா அல்லது தரையிலிருந்து ஏவியதா என்பது தெரியவில்லை.
உலகில் இதுவரை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை என்று பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் மூத்த அதிகாரி அதில் சுல்தான் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான், இந்தியா போல் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் நாடுகள் எப்படி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
அதிலும் வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை 100 சதவீதம் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று அவர் கூறுகிறார்.
ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் ஏவுகணைகளைத் தடுக்க எந்தவொரு பாதுகாப்பு அமைப்பின் திறனுக்கும் வரம்பு இருக்கும் என அதில் சுல்தான் கூறுகிறார்
நவீன பாதுகாப்பு அமைப்புகள் பயனுள்ளவைகளாக இருந்தாலும், 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள கிழக்கு எல்லையில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவது சாத்தியமில்லை என்கிறார் அவர்.
”உண்மையில் முழுமையான பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படவேண்டும் என்றால், பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும். அவ்வளவு செலவு செய்து பாதுகாப்பு அமைப்பை நிறுவினாலும், எல்லைகள் அருகாமையில் இருப்பதால் அவை மிகவும் பயனளிக்காது” என்று அதில் சுல்தான் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் அண்மைத் தாக்குதல்களில், ஏவுகணைகள் வானில் இருந்து தரைக்கு ஏவப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது ஏவுகணைகள் மிகவும் நவீனமாகிவிட்டன என்றும் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை ஏர் மார்ஷல் இக்ரமுல்லா பாஹ்டி கூறினார்.
“ஏவுகணைகளின் வேகம் மிகவும் அதிகமாகிவிட்டது. மிக் 3 மணிக்கு 3,675 கிமீ செல்கிறது என்றால், மிக் 9 மணிக்கு 11,025 கிமீ வரை செல்லக்கூடியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட எந்த நாடும் அத்தகைய அதிவேக ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
வான்வழி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் மற்றொரு சிரமமும் உள்ளது. அவை பறக்கும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால், எதிர்வினையாற்றுவதற்கான நேரமும் அதைவிடக் குறைவாகவே இருக்கும். மாறாக, தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளின் பறக்கும் காலம் அதிகமாக இருப்பதால் அவற்றை இடைமறிக்க முடியும் என்று இக்ரமுல்லா பாஹ்டி கூறுகிறார்.
நிலம் வழியாக இணைந்துள்ள நாடுகளிடம் இருந்து வரும் தாக்குதல்களை உலகில் உள்ள எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் 100 சதவீதம் தடுக்க முடியாது என்று அதில் சுல்தான் கூறினார்.
இருப்பினும், பாதுகாப்பு அமைப்புகளால் இழப்புகளைக் குறைக்க முடியும் என்று சொல்லும் அவர், தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம் என்றும் சொல்கிறார் அவர்
” ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் ஏவப்பட்டால், அவற்றை ரேடாரில் அடையாளம் கண்டு உடனடியாக செயல்படுவது கடினமாகிவிடும். அதேசமயம், தரையிலிருந்து ஏவும் ஏவுகணைகள் அல்லது கப்பல் ஏவுகணைகளை கண்காணிப்பதும், எதிர்ப்பதும் எளிதானது. வான்வெளியில் போர் விமானங்கள் மோதிக் கொண்டால் அது மிகவும் மாறுபட்ட சூழ்நிலையாக இருக்கும்” என்று அதில் சுல்தான் கூறினார்.
“தரையிலிருந்து வரும் ஏவுகணைகளை பொறுத்தவரை ஏவுகணைகளின் திறன், சாத்தியமான பாதைகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் வான்வழிப் தாக்குதலில், எங்கிருந்து தாக்குதல் வரும், எதுபோன்ற தாக்குதல் வரும் என்பது நமக்குத் தெரியாது. எல்லா பக்கங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC