SOURCE :- BBC NEWS

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

அண்டை நாடான வங்கதேசத்தின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான அதன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தியா, வங்கதேசம் இடையிலான மிக நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதி என்பதில் இருந்தே அதன் நீளத்தை நம்மால் மதிப்பிட முடியும்.

சமீப காலமாக அந்த எல்லைப் பகுதியில் பல சம்பவங்கள் நடந்தன. அதன் காரணமாக, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் (பிஎஸ்எஃப்) வங்கதேச எல்லைக் காவல்படையினருக்கும் (பிஜிபி) இடையே அமைதியின்மையும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பொதுவாக அமைதியாக இருக்கும் இந்த எல்லையில் தற்போது பதற்றம் நிலவுவது தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பிறகு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் அதிகாரிகளும் (பிஎஸ்எஃப்) வங்கதேச எல்லைக் காவல்படை அதிகாரிகளும் ‘கொடிக் கூட்டம்’ நடத்த வேண்டியிருந்தது.

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

இந்திய எல்லையில் 5 ச.கி.மீ. பரப்பை வங்கதேசம் கைப்பற்றியதா?

ஊடுருவலை தடுத்து நிறுத்தும் பிரச்னையாக இருந்தாலும் சரி அல்லது இந்திய எல்லையில் முள் வேலிகளை நிறுவுவதாக இருந்தாலும் சரி, இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் வங்கதேச எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் பலமுறை சந்தித்துக் கொள்வது வழக்கம்.

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இரு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதில் மிக முக்கியமான பகுதி மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள போங்கான். மிகவும் பரபரப்பான எல்லை சோதனைச் சாவடியான பெட்ராபோல் இந்தப் பகுதியில்தான் உள்ளது. வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையும் இந்த எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் 58வது படையின் தளபதி கர்னல் ரபிக் இஸ்லாம், வங்கதேச ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வழங்கினார்.

“கோடாலியா ஆற்றின் கரையோரமாக 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியுள்ளதாக” அவர் கூறினார்.

இந்தப் பகுதி பாக்தா தொகுதிக்கு உட்பட்ட ரனாகாட் கிராமத்தின் கீழ் வருகிறது. பெட்ராபோல் எல்லையின் சோதனைச் சாவடியில் இருந்து சற்று தொலைவில் இப்பகுதி உள்ளது. எல்லையின் மறுபுறம் வங்கதேசத்தின் மகேஷ்பூர் பகுதி உள்ளது.

ரஃபீக் இஸ்லாம் கூற்றையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவானது. இந்த விவகாரம் மேலும் தொடர அனுமதிக்கவில்லை என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பதில் என்ன?

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

ரஃபீக் இஸ்லாம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பெட்ராபோல் எல்லை சோதனைச் சாவடியில், எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகளுக்கும் வங்கதேச எல்லைக் காவல்படையினருக்கும் இடையே ‘கொடிக் கூட்டம்’ நடத்தப்பட்டது.

‘கொடிக் கூட்டம்’ என்பது எல்லையில் தகராறு ஏற்படும் போது, இரு தரப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து, சர்ச்சையைத் தீர்க்க முயல்வதற்காக நடத்தும் கூட்டம்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), ரஃபீக் இஸ்லாமின் கூற்றுகளை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் அறிக்கை தவறாக வழிநடத்துவதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெளிவாகக் கூறியது.

“வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கம்பெனி கமாண்டர் கர்னல் ரஃபிக் இஸ்லாமின் இட்டுக்கட்டப்பட்ட மற்றும் பொய்யான கூற்றுகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். ஒரு அங்குல நிலம்கூட கைப்பற்றப்படவில்லை என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உறுதியளிக்க விரும்புகிறது. நாங்கள் அப்படி நடக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையானது போங்கான் வழியாகச் செல்லும் கோடாலியா ஆற்றின் நடுவில் இருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை கூறுகிறது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ஏற்கெனவே துல்லியமாக வரையப்பட்டுள்ளது என்றும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. ஆற்றின் இருபுறமும் தூண்கள் அல்லது கற்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் எல்லை முழுமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், வெளியிட்ட வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி சர்ச்சைக்குரிய அறிக்கையில் கூறியது என்ன?

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

“முன்பெல்லாம் வங்கதேச கிராம மக்கள் இந்த ஆற்றைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர். ஆனால் தற்போது கோடாலியா ஆற்றங்கரையில் வசிக்கும் எங்கள் கிராமத்தினர் அந்த ஆற்றுக்கு வந்து செல்கின்றனர். அதனை பயன்படுத்தி வருகின்றனர்” என்று அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், “ஆற்றின் இருபுறமும் உள்ள குடிமக்கள் அந்தந்தப் பகுதிகளில் ஆற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது வரை அந்தச் சூழலே நீடிக்கிறது. இந்தப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே கம்பி வேலி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின், தெற்கு வங்க எல்லையின் காவல்துறை துணை அதிகாரி நீலோத்பால் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசும்போது, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் அறிக்கை ‘நிச்சயமாக குழப்பத்தை உருவாக்கியுள்ளது’ ஆனால் தற்போது இந்த எல்லைப் பகுதியில் ‘நிலைமை முன்பு போன்று அப்படியே உள்ளது’ என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, “எல்லையின் இருபுறமும் அமைதி நிலவுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிராம மக்கள் எப்போது கோஷம் எழுப்பினர்?

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நேரத்தில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. மால்டா மாவட்டம் சுக்தேவ்பூரில் முள் கம்பி அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு நடந்த வேலையை நிறுத்த முயன்றனர்.

இதையடுத்து எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சுக்தேவ்பூர் கிராம மக்கள் அங்கு திரண்டனர். கிராம மக்கள், ‘பாரத் மாதா கி ஜெய்… ஜெய் ஸ்ரீராம்… வந்தே மாதரம்…’ என முழக்கங்களை எழுப்பினர்.

இந்தச் சம்பவத்தின் காணொளியை மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரியும் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, முள் கம்பி வேலி அமைக்கும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்திய எல்லையில் முள் கம்பிகள் பொருத்தப்பட்டு வருவதாக வங்கதேச எல்லைக் காவல்படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது செய்யப்படுகிறது என்று வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெளிவுபடுத்தியது.

செய்தியாளர்களிடம் பேசிய நீலோத்பால் பாண்டே, அவர்களின் தவறான புரிதலுக்குத் தெளிவு கிடைத்த பின்னர், கம்பி அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

சுக்தேவ்பூர் கிராம மக்களின் தேசியவாத உணர்வுகள் காரணமாக வங்கதேச எல்லைக் காவல்படை வீரர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என இந்த முழுப் பிரச்னை குறித்தும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுபேந்து அதிகாரி ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டார்.

அது மட்டுமின்றி, “தேசிய பாதுகாப்பில், வங்கதேச எல்லைக் காவல் படையினரின் இத்தகைய முயற்சிகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்பதை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து உள்ளூர் இந்திய குடிமக்கள், வங்கதேச எல்லைக் காவல்படையினருக்கு உணர்த்தினர். இது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் விளைவு” என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மற்றொரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காணொளி திரிபுராவின் கைலாஷாஹர் மகுருலி பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் காணொளியில், ‘சந்தேகத்திற்குரிய வங்கதேச கடத்தல்காரர்கள்’ இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவதைக் காணலாம்.

இந்தியா – வங்கதேசம் நட்புறவு ஏன் பதற்றமாக மாறியது?

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

1971ஆம் ஆண்டு வங்கதேசம் உருவானதில் இருந்து, அந்நாடு இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ளது. இந்திய – வங்கதேச எல்லையில் நிலைமை எப்போதும் மோசமடையாததற்கு இதுவே காரணம்.

இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் நடமாட்டம் மற்றும் வர்த்தகம் சீராகத் தொடர்ந்தது. ஆனால் இப்போது வங்கதேசத்தில் என்ன சம்பவம் நடந்தாலும், அதனால் பதற்றம் ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது.

எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எப்போதும் கவனமாக உள்ளனர். முள் கம்பிகள் இல்லாத பல முக்கியமான பகுதிகள் இங்கு உள்ளன. அப்படி உள்ள இடங்களில் குடிமக்களே தற்காப்பு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களால் இயன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மற்றும் இரவு நேரங்களில் காவல் பணி போன்ற பணிகளில் அம்மக்கள் ஈடுபடுகின்றனர்.

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

‘வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்’

வங்கதேசத்தில் இருந்து மக்கள் ஊடுருவியதாகக் கூறப்படும் பிரச்னை மிகப் பெரியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களிலும் அதன் தாக்கத்தைக் காணலாம்.

இந்த எல்லைப் பகுதியில் ஏற்படும் ஊடுருவல் விவகாரத்தில் அரசியல் கட்சிகளும் ஒருவரையொருவர் குறிவைத்து தாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், இந்த ஊடுருவல் குறித்தான விவகாரத்தை பெரியளவில் பிரச்னை ஆக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே இதுகுறித்து அடிக்கடி வாக்குவாதம் எழுவது வழக்கம்.

மாநில முதல்வர் மமதா பானர்ஜி, அதிகாரிகளுடனான வருடாந்திர கூட்டத்தில், ஊடுருவல் நடப்பதாகக் கூறப்படும் பகுதிகளின் பெயர்களை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாநில செயலகத்தில் பல்வேறு துறைகள் மீதான பரிசீலனையின் போது, “எல்லைப் பாதுகாப்புப் பொறுப்பு திரிணாமுல் காங்கிரஸுக்கோ அல்லது மாநில காவல்துறையினருக்கோ இல்லை. இது எல்லைப் பாதுகாப்புப் படையின் வேலை. அவர்கள் ஊடுருவல் மற்றும் குற்றவாளிகளுக்கு உதவுகிறார்கள், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்று பானர்ஜி குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகமாக நடக்கும் மூன்று எல்லைப் பகுதிகளின் பெயர்களையும் மமதா பானர்ஜி கூறினார். அவரைப் பொறுத்தவரை, இஸ்லாம்பூர், சோட்டாய் மற்றும் சோப்ரா ஆகிய இடங்களில் ஊடுருவல் அதிகம் நடக்கிறது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை என்ன சொன்னது?

இந்தியா - வங்கதேசம், எல்லையில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

மமதா பானர்ஜியின் இந்த அறிக்கைக்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படையின் தெற்கு வங்க எல்லைப் பகுதியின் காவல்துறை துணை அதிகாரி நீலோத்பால் குமார் பாண்டே, “இதுபோன்ற செயல்கள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மன உறுதியைக் குலைக்கின்றன” என்று அறிக்கை வெளியிட்டார்.

எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு ‘பொறுப்பான படை’ என்றும், அதன் பொறுப்புகளை நேர்மையாகச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மறுபுறம், மமதா பானர்ஜியின் அறிக்கைக்கு எதிராக பாரதிய ஜனதா ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் நாட்டுக்குச் சேவை செய்கிறார்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மோசமான சூழ்நிலையிலும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து எல்லையைக் காக்கின்றனர். ராணுவ வீரர்களை தரக்குறைவாகப் பேசியதற்காக உங்களை நாடு மன்னிக்காது” என்றும் சுபேந்து அதிகாரி கூறியுள்ளார்.

ஊடுருவல்காரர்கள் நாட்டின் எல்லையைத் தாண்டி ஒரு கிராமத்தில் தஞ்சம் புகுந்தால், அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் எப்படி ரேஷன் கார்டுகளையும் அடையாள அட்டைகளையும் வழங்குகிறார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் அதை எப்படி சரிபார்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முள்கம்பிகளைப் பொருத்தும் பணியில் மேற்கு வங்க அரசு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லையில் முள்வேலி அமைப்பதற்காக சுமார் 300 கிலோமீட்டர் பரப்பளவுக்கு மாநில அரசால் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU