SOURCE :- BBC NEWS

வக்ஃப் சட்டத்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

புதிய வக்ஃப் சட்டத் திருத்தம், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்ரல் 16) விசாரித்தது.

இந்த விசாரணையில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் பிற பதில் மனுதாரர்களின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப இடைக்கால உத்தரவு பிறக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாகவும், இன்று (ஏப்ரல் 17) மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களின் சொத்துகளைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதேநேரம் இந்தச் சட்டம் வக்ஃபில் சீர்திருத்தத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என்று பாஜக அரசு கூறுகிறது. அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?

வக்ஃப் என்றால் என்ன?

வக்ஃப் சட்டத் திருத்தம் - சீர்திருத்தமா? உரிமை பறிப்பா?

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் என்பது ஒருவர் தனது சொத்தை அல்லாவின் பெயரால் அளிக்கும் கொடை. அவை இஸ்லாத்தில் புனிதமாகக் கருதப்படும் செயல். இந்தச் சொத்துகள் மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் பல சொத்துகள் வக்ஃப் சொத்துகளாக உள்ளன. அந்த இடங்களில் மசூதிகள், கபர்ஸ்தான், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் உள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் சொத்துகளை நிர்வகிக்க ஒரு வக்ஃப் வாரியம் உள்ளது. இந்திய அளவில் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் வக்ஃப் கவுன்சில் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே வக்ஃப் இயங்கி வந்தாலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் வக்ஃப் சட்டம் 1954ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் 1995ஆம் ஆண்டு அமலுக்கு வந்த வக்ஃப் சட்டம் 1954ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டத்தை ரத்து செய்து, வக்ஃப் சொத்து மற்றும் நிர்வாகம் தொடர்பாகப் பல புதிய விதிகளைக் கொண்டு வந்தது.

பின்னர் 2013ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. தற்போது அதில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுதல், நிர்வாகம் மற்றும் உரிமைகள் தொடர்பான சர்ச்சைகள் என 1995 வக்ஃப் சட்டம் மற்றும் 2013ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தில் சில குறைகள் இருப்பதாக அரசாங்கம் கூறி வந்தது.

கோவில் நிலம் மற்றும் ஆக்கிரமிப்புகள்

வக்ஃப் சட்டத்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

வக்ஃப் சொத்துகள் குறித்துப் பல கூற்றுகள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, ரயில்வே மற்றும் ராணுவத்தைவிட வக்ஃப் வாரியத்திடம் அதிக நிலம் உள்ளதாகக் கூறப்பட்டது. எந்த மாநிலத்தில் வக்ஃப் வாரியத்திடம் எவ்வளவு சொத்து உள்ளது என்பதற்கான முழுமையான பட்டியலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, வக்ஃப் வாரியத்திடம் இந்தியா முழுமைக்கும் மொத்தமாக 38 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் வக்ஃப் வாரியத்திடம் 6 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கோவில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம், தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால் பல கோவில் நிலங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். இவை தவிர 47,000 ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.

ஒடிசா வக்ஃப் வாரியத்திடம் 28,714 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் அதே ஒடிசாவில், புரி ஜெகந்நாதர் பெயரில் இதைவிட இரு மடங்கு நிலம் உள்ளது. ஒடிசாவின் 24 மாவட்டங்களில் 60,426 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றில், 974 சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் 2023ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தில் வழங்கப்பட்டது. இவை தவிர மற்ற கோவில் நிலங்களும் ஒடிசாவில் உள்ளன.

ஆந்திர பிரதேச வக்ஃப் வாரியத்திடம் 78,229 ஏக்கர் நிலம் உள்ளது. ஆந்திர பிரதேச கோவில்களுக்கு 4 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 87,000 ஏக்கர் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. துணை முதல்வர் பவன் கல்யாண் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றக் கோருகிறார்.

எனவே, இந்த நாட்டில் கோவில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் வக்ஃப் வாரியத்திடம் கணிசமான அளவு நிலம் உள்ளது. இந்த நிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வக்ஃப் சட்டத்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

சில நேரங்களில் அரசே சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்கிறது. உதாரணமாக, 2023ஆம் ஆண்டில் அலகாபாத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பாருங்கள். 1970ஆம் ஆண்டில், உத்தர பிரதேச வருவாய்த் துறை மதுராவில் உள்ள ஒரு நிலத்தை கிராம சபை நிலமாக அறிவித்தது.

பின்னர் 1991ஆம் ஆண்டில் அதுவொரு குளமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலம் மதுராவின் பிஹாரி ஜி விராஜ்மான் கோவிலுக்குச் சொந்தமானது என்பதால் வருவாய்த் துறையின் இந்த முடிவை நீதிமன்றம் நிராகரித்தது. கோவில் நிலத்திற்கும் அரசுக்கும் இடையே பிரச்னை இருக்கும் வழக்கு இதுமட்டுமல்ல.

அதே போல, கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா என்ற பெயரில் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது நடக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றமே 2009ஆம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது.

வக்ஃப் என்பது மதத்துடன் தொடர்புடையதா?

புதிய சட்டம் வக்ஃப் வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் இருப்பது அவசியம் என்று கூறுகிறது. முஸ்லிம்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்ஃபுக்கு நன்கொடையாக வழங்க முடியும் என்றும் கூறுகிறது.

வக்ஃப் மதம் சார்ந்தது இல்லை என்றால், சமூக சேவை மட்டுமே. பிறகு ஏன் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது என்ற கேள்வியும், இது மதத்துடன் தொடர்புடையது என்றால், அதன் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பது ஏன் கட்டாயமாக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றன.

மறுபுறம், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் 15 உறுப்பினர்களும் இந்து மதத்தைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் ராமர் கோவிலை கடவுளின் சொத்தாகக் கருதுகிறார்கள். முஸ்லிம்கள் வக்ஃப் நிலத்தை அல்லாவின் சொத்தாகக் கருதுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அவற்றின் நிர்வாகங்களில் வேறுபாடு ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

வக்ஃப் தீர்ப்பாயம் என்றால் என்ன?

வக்ஃப் சட்டத் திருத்தம் - சீர்திருத்தமா? உரிமை பறிப்பா?

பட மூலாதாரம், Getty Images

தீர்ப்பாயம் என்பது ஒரு புதிய அமைப்பு அல்ல, இந்த நாட்டில் பல தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் இந்தத் தீர்ப்பாயங்கள், சிவில் நீதிமன்றங்களைப் போலவே செயல்படுகின்றன. நீதிமன்றத்தின் மீதான சுமையைக் குறைக்கவும், வழக்குகளை விரைவாகத் தீர்க்கவும் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா தொண்டு மற்றும் இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டம், 1987க்கு எனத் தீர்ப்பாயம் இருப்பது போலவே வக்ஃபுக்கும் தீர்ப்பாயம் உள்ளது. மாநில அரசே தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களை நியமிக்கிறது. தீர்ப்பாயங்கள் நீதித்துறையைப் போலவே சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு வாதிடுகிறது. ஆனால் 1995 வக்ஃப் சட்டத்தில், தீர்ப்பாயம் ஒரு சிவில் நீதிமன்றம் போலச் செயல்படும் என்றும் அதன் முடிவு இறுதியானது என்றும், இரு தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரத்தில், வக்ஃப் வாரியம் அல்லது எந்தவொரு தரப்பினரின் மனுவையும் உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பாயத்தின் முடிவை மாற்றலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்தப் பிரிவில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை. அப்போதைய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் 2013 திருத்தத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “வருவாய்த் துறை பதிவுகளுக்கும் வக்ஃப் வாரியத்தின் கணக்கெடுப்புப் பதிவுகளுக்கும் இடையில் பல இடங்களில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, நாங்கள் தீர்ப்பாயத்தை வலுப்படுத்தியுள்ளோம். மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்திற்குப் பிறகு, உயர்நீதிமன்றம் உள்ளது. உயர்நீதிமன்றத்திற்கும் செல்லலாம்” என்று கூறினார்.

ஆனால், ‘இறுதியானது’ என்ற வார்த்தை இதற்குப் பிறகு எந்தத் தீர்வும் இல்லை என்பது போலப் பயன்படுத்தப்படுகிறது. தெலங்கானா அறக்கட்டளை மற்றும் இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை சட்டம், 1987ஐ எடுத்துக் கொள்ளுங்கள், அதிலும் தீர்ப்பாய முடிவு இறுதியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பே இறுதியானது எனக் கூறும் சட்டங்கள் உள்ளன. வக்ஃப், மேரியட் ஹோட்டல் மீது உரிமை கோரியது. ஆனால் அதை தெலங்கானா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தை அணுக முடியாது என்றால் இந்த முடிவு எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நில சர்ச்சைகள்

வக்ஃப் சட்டத்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய உயர்நீதிமன்றங்களில் 62 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், சுமார் 42 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகள்.

பெரும்பாலான சிவில் வழக்குகள் நிலம் தொடர்பானவை. ஓர் ஆய்வின்படி, நிலம் தொடர்பான வழக்குகள் சராசரியாக 20 ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன. இதை ஊரக வளர்ச்சி அமைச்சகமே குறிப்பிட்டுள்ளது.

எனவே, அனைத்து மதம், சாதி மற்றும் வர்க்க மக்களுக்கும் பயனளிக்கும் இந்தச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

முந்தைய வக்ஃப் சட்டத்தில் பிரிவு 40-இன்படி, எந்தவொரு சொத்தையும் வக்ஃப் சொத்தாக அறிவிக்க வக்ஃப் வாரியத்திற்கு அதிகாரம் இருந்தது. சில இடங்களில் இந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது புதிய சட்டத்தில், இந்தப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய சட்டத்திலும் ஒரு சிக்கல் உள்ளது. பழைய சட்டத்தில், ஒரு சொத்தை அளவிடும் பொறுப்பு சர்வே ஆணையரிடம் இருந்தது. ஆனால் புதிய சட்டத்தில், இந்தப் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி ஒரு குறிப்பிட்ட சொத்து வக்ஃபுக்கு சொந்தமா இல்லையா என்பதை மாவட்ட ஆட்சியர் கூறுவார். ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு சொத்தை அளவிடுவதில் நிபுணத்துவம் இருக்குமா என்றும் வக்ஃபுக்கும் அரசுக்கும் இடையே நிலம் தொடர்பான விவகாரம் எழும்போது என்ன நடக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது.

ஏனெனில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓர் அரசு அதிகாரி அரசுக்கு எதிராக முடிவெடிப்பாரா என்பது கேள்விக்குரியது.

எனவே, இந்தப் பிரிவுகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். அதே நேரம், புதிய திருத்தச் சட்டத்தில் சில மேம்படுத்தப்பட்ட விஷயங்களும் உள்ளன. உதாரணமாக, தீர்ப்பாயம் தற்போது 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். வக்ஃபை நிர்வகிக்கும் முத்தவல்லி எந்தக் காரணமும் இல்லாமல் ஓர் ஆண்டு முழுக்க சொத்தின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், அவர் நீக்கப்படுவார். இது தவிர, மத்திய அரசு வக்ஃப் வாரியத்தின் கணக்குகளை CAG-ஆல் தணிக்கை செய்ய முடியும்.

புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராகp பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் புதிய சட்டம் உச்சநீதிமன்றத்தின் சட்ட சவால்களையும் கடக்க வேண்டியிருக்கும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC