SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் “எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லை” என்று கூறினார்.
டிரம்ப் கூறிய கருத்துக்கு முரண்பாடாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்து உள்ளது.
”எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும், இரு தரப்புக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதுவே அந்த ஒப்பந்தத்திலிருந்து எங்கள் எதிர்பார்ப்பு. ஒப்பந்தம் இறுதியாகும்வரை அதுபற்றிய எந்த முடிவும் சரியானதாக இருக்காது” என்கிறார் ஜெய்சங்கர்.
இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அமெரிக்கத் தரப்பில் இருந்து அதுவும் அந்நாட்டு அதிபரே இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தோகாவில் டொனால்ட் டிரம்ப்
போயிங் ஜெட் விமானங்கள் உட்பட அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையே ஒப்பந்தங்கள் பலவற்றை அறிவித்த டிரம்ப், தோகாவில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவின் வரிவிதிப்பு குறித்தும் குறிப்பிட்டார்
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பேசும் போது இக்கருத்தை கூறிய டிரம்ப், “உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று” என்பதால் அங்கு ஆப்பிள் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தனக்கு விருப்பமில்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் தான் கூறியதாகத் தெரிவித்தார்.
“அவர்கள் [இந்தியா] எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதன்படி அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கப் போவதில்லை. ‘டிம், நீங்கள் சீனாவில் பல தொழிற்சாலைகளை அமைத்தபோதிலும் நாங்கள் உங்களை ஆதரித்தோம். இப்போது நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. இந்தியா தானாகவே எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளும் என கூறினேன்’ ” என்றார் டிரம்ப்.
இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், பெருமளவிலான ஐபோன்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதாகக் கூறியது. அதே நேரத்தில், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தி மையமாக வியட்நாம் இருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் மாதத்தில் இந்திய பொருட்களுக்கு 27% வரை வரிகளை விதித்தார். இந்த கூடுதல் வரிகளை விதிப்பதை 90 நாட்கள் அதாவது ஜூலை 9 ஆம் தேதி வரை அமெரிக்கா இடைநிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த வாரம்தான் அமெரிக்காவும் சீனாவும் வரிகளை குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை எட்டின. சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகள் 145% இலிருந்து 30% ஆகக் குறைகிறது. அதே நேரத்தில் சில அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீனாவின் வரிகள் 125% இலிருந்து 10% ஆகக் குறையும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள்
அண்மைக்காலம் வரை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்து வருவதும், இருதரப்பு வர்த்தகம் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஏற்கனவே போர்பன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு சில அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைத்துள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்கா இந்தியாவுடன் 45 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க டிரம்ப் விரும்புகிறார்.
“இந்தியாவின் வரிகள் அதிகமாக இருப்பதே வர்த்தக பற்றாக்குறைக்கு காரணம் என்று டிரம்ப் எப்போதும் குற்றம் சாட்டிவருகிறார். “பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம்” அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியா ஆட்டோமொபைல் மற்றும் விவசாயம் தவிர அமெரிக்க பொருட்களில் 90 சதவிகிதத்தை வரி இல்லாததாக மாற்ற முன்வரலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் பரஸ்பரமானதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும், இரு தரப்பினரும் சமமாக வரிகளை நீக்க வேண்டும்” என்று டெல்லியைச் சேர்ந்த வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இருவருமே இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க அதாவது 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானதாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
ஆனால் ஆழமான அரசியலை கொண்டுள்ள விவசாயம் போன்ற துறைகளில் இந்தியா சலுகைகளை வழங்க வாய்ப்பில்லை.
பல வருட தயக்கங்களுக்குப் பிறகு அண்மையில் தான், வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் இந்தியா வெளிப்படைத்தன்மையைக் காட்டியுள்ளது.
கடந்த வாரம், விஸ்கி மற்றும் ஆட்டோமொபைல்கள் உட்பட பல முக்கியமானத் துறைகளில் வரிகளை கணிசமாகக் குறைக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU