SOURCE :- BBC NEWS

உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியா, ஏழை-பணக்காரர் இடைவெளி

பட மூலாதாரம், Getty Images

9 நிமிடங்களுக்கு முன்னர்

ஏழை – பணக்காரர் சமத்துவமின்மை வரிசையில் முன்னிலையில் இருக்கும் உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள ஒரு சர்வதேச அறிக்கை கூறுகிறது.

பொருளாதார வல்லுநர்களான லூகாஸ் சான்செல், ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிஃப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026‘ (World Inequality Report 2026) இல் வருமானம் மற்றும் சொத்து குறித்த தரவுகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் சமத்துவமின்மை, வருமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை, செல்வத்தில் உள்ள இடைவெளியும் இன்னும் ஆழமாகி இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்தியப் பணக்காரர்களில் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் தோராயமாக 65 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர்.

இந்த 10 சதவிகிதத்துக்குள், முதல் ஒரு சதவிகிதம் பேர் நாட்டின் மொத்தச் சொத்தில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஊதியத்தில் பாலின வேறுபாடுகள் தொடர்கின்றன.

அறிக்கையின்படி, பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் வேலை செய்தாலும், ஆண்களை விட குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.

2018 மற்றும் 2022 க்குப் பிறகு மூன்றாவது முறையாக உலக சமத்துவமின்மை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக சமத்துவமின்மை ஆய்வகத்துடன் (World Inequality Lab) தொடர்புடைய 200 க்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநரான தாமஸ் பிக்கெட்டி இந்த அறிக்கை பற்றி கூறும்போது, “இந்த அறிக்கை அரசியல் ரீதியாக சவாலான ஒரு நேரத்தில் வந்துள்ளது, ஆனால் இது முன் எப்போதையும் விட முக்கியமானது. வரலாற்று ரீதியாக சமத்துவத்திற்கு வழிவகுத்த இயக்கங்களைத் தொடர்வதன் மூலம் மட்டுமே, வரும் காலத்தில் சமூக மற்றும் காலநிலை சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் வருமான அடிப்படையில் முதல் 10% பேருக்கும், கீழ் அடுக்கில் இருக்கும் 50% பேருக்கும் இடையிலான இடைவெளி 2014 முதல் 2024 வரை ஒப்பீட்டளவில் நிலையாகவே இருந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு 6,200 யூரோ என்றும், இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.6.5 லட்சம் என்றும் அறிக்கை கூறுகிறது.

சமத்துவமின்மை அறிக்கையின்படி, இந்தியாவில் தனிநபர் செல்வம் சுமார் 28 ஆயிரம் யூரோ ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.29 லட்சத்திற்கும் அதிகமாகும்.

பாலின சமத்துவமின்மை

உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியா, ஏழை-பணக்காரர் இடைவெளி

பட மூலாதாரம், Getty Images

ஊதியம் வழங்குவதில் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வுகள் உலகளவில் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக அமைப்பு சாரா துறையில் இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

பெண்களால் வீட்டில் செய்யப்படும் ஊதியம் இல்லாத உழைப்பையும் சேர்த்தால், அவர்கள் வாரத்திற்குச் சராசரியாக 53 மணிநேரம் உழைக்கிறார்கள், அதேசமயம் ஆண்கள் 43 மணிநேரமே உழைக்கிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

பெண்களின் இந்த ஊதியம் இல்லாத உழைப்பை நீக்கினால் கூட, அவர்கள் ஆண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தில் 61% மட்டுமே பெறுகிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

ஊதியம் இல்லாத உழைப்பையும் சேர்த்தால், இந்த விகிதம் 32 சதவீதமாகக் குறைகிறது.

இந்தியாவில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உலகளவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான பொறுப்பு பகிர்வு பெண்களின் தொழில் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. அரசியலில் அவர்களின் பங்களிப்பைக் குறைக்கிறது மற்றும் செல்வம் சேர்க்கும் திறனைக் குறைக்கிறது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அறிக்கையின்படி, வருமானம், செல்வம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவை இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

உலக சமத்துவமின்மை அறிக்கை, இந்தியா, ஏழை-பணக்காரர் இடைவெளி

அறிக்கையில் உள்ள பிற முக்கிய அம்சங்கள்

உலகின் பல நாடுகளிலும் சமத்துவமின்மை பல்வேறு தளங்களில் நீடிப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத்தினர், மீதமுள்ள 90 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

செல்வத்தில் உள்ள இடைவெளி இன்னும் கடுமையாக உள்ளது.

உலகின் முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய செல்வத்தில் முக்கால் பகுதியை சொந்தமாகக் கொண்டுள்ளனர்.

குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் உலகச் செல்வத்தில் வெறும் இரண்டு சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.

சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

1990-களில் இருந்து, உலகில் கோடீஸ்வரர்களின் செல்வம் ஆண்டுக்கு எட்டு சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. இது மக்கள் தொகையின் கீழ் அடுக்கில் உள்ளவர்களின் வளர்ச்சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம்.

இந்தக் காலகட்டத்தில் ஏழைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளனர், ஆனால் கோடீஸ்வரர்கள் குவிக்கும் செல்வத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்று அறிக்கை கூறுகிறது.

சராசரி செல்வத்தைப் பற்றிப் பேசினால், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

உதாரணமாக, உலகில் கீழ் அடுக்கில் உள்ள 50% மக்களின் சராசரி செல்வம் சுமார் 6,500 யூரோ. அதேசமயம், மேல் அடுக்கில் உள்ள 10% பேரின் சராசரி செல்வம் சுமார் 10 லட்சம் யூரோ ஆகும்.

உலகில் உள்ள சுமார் 56,000 பேரின் சராசரி செல்வம் தோராயமாக 100 கோடி பவுண்டு.

இந்த சமத்துவமின்மையை கொள்கைகள் மூலம் குறைக்க முடியும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC