SOURCE :- BBC NEWS
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் ஆலோசிக்கப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா (ETCA) உடன்படிக்கை தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையின் புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு கடந்த 15-ஆம் தேதி பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய பின்னணியிலேயே, எட்கா சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையே எட்கா உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தத் தருணம், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து இந்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில், அநுர குமார திஸாநாயக்க ஆட்சி பீடம் ஏறிய பிறகு, இந்தியாவுடன் இந்த உடன்படிக்கை குறித்து கலந்துரையாடியமையே இந்த சர்ச்சைக்கான காரணமாக அமைந்துள்ளது.
”இரு தரப்புகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைச்சாத்திட முயற்சிக்கின்றோம்,” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கூட்டாக நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கருத்தானது, எட்கா உடன்படிக்கை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடல் நடத்தியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
எட்கா உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து கலந்துரையாடியுள்ளதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எட்கா உடன்படிக்கையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கைச்சாத்திடுவாராயின், இலங்கையை அவர் பாரிய அழிவு பாதையை நோக்கி தள்ளுகின்றார் என, பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில விமர்சித்துள்ளார்.
”இந்தியாவுடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள எட்கா உடன்படிக்கை 2015-ஆம் ஆண்டு பேசுபொருளாக மாறியது. இந்த எட்கா உடன்படிக்கைக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதியும், அவரது மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய போராட்டங்களை நடாத்தியது. அந்த போராட்டத்தில் நாங்களும் இருந்தோம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள எட்காவின் உள்ளடக்கத்தில் பிரச்னை உள்ளது.” என்று அவர் கூறுகிறார்.
இந்த உடன்படிக்கையில் உள்நாட்டு (இலங்கை) உற்பத்தியாளர்களை பாதிக்கும் வகையிலான விடயங்கள், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள், ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் கடந்த 10 வருட காலமாக இந்த நாட்டில் பாரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் கூறுகிறார்.
“இந்த விடயங்களை தவிர்த்து, எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட ஜனாதிபதி தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பாராயின், திரும்பி பார்க்க முடியாத பாரிய அழிவிற்கு இந்த நாட்டை அவர் தள்ளுகின்றார் என்பதை நாங்கள் மிகுந்த கவலையுடன் நினைவுபடுத்துகின்றோம். ” என்று உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் விளக்கம்
இலங்கையில் எட்கா குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.
”இரு தரப்பிற்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதில் முதலாவது புரிந்துணர்வு உடன்படிக்கையானது, எமது நாட்டிலுள்ள அரச சேவையாளர்களுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்காக இரண்டு வார பயிற்சி காலம் கிடைக்கும் வகையில் 1,500 அரச சேவையாளர்களுக்கு இந்தியாவினால் பயிற்சி பாடநெறி வேலைத்திட்டமொன்று வழங்கப்பட்டது. இரண்டாவது புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வரி நடைமுறைகளில் இரு தரப்பு வரிகளை இல்லாது செய்யும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவை தவிர, வேறு எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவில்லை.” என விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
கலந்துரையாடல்களை நடத்தியது என்பதை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக கருதப்படக் கூடாது என்றும் கூறிய அவர், எட்கா உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த பல காலமாக காணப்படுகின்றது என்றார்.
“இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோமே தவிர, இந்திய விஜயத்தின் போது எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பது போலியானது” என விஜித்த ஹேரத் மேலும் கூறுகின்றார்.
“எட்கா கைச்சாத்திடுவதில் கவனம் தேவை”
எட்கா போன்ற உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.
“இந்தியாவிலிருந்து இலங்கைக்குள்ளே அதிகளவு ஊழியர்கள் வரக்கூடிய அல்லது நிபுணர்கள் வரக்கூடிய வகையிலான ஒழுங்குப்பாடு உடன்பாட்டில் இருப்பதாக இலங்கையில் இருப்பவர்கள் அது சம்பந்தமாக அச்சம் வெளியிடுகின்றார்கள். பிராந்தியத்தில் இருக்கின்ற வளர்ச்சியடைந்த நாடு என்று வருகின்ற போது இந்தியாவுக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன” என்கிறார் கணேசமூர்த்தி.
மேலும், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கின்ற நிபுணர்கள் இலங்கைக்குள் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் தொழிலாளர் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் அவர், இலங்கைக்குள் இதனால் இந்திய தொழிலாளர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்றும் இதனாலேயே பலர் இந்த உடன்படிக்கையை பலர் பீதியுடன் பார்க்கின்றார்கள் என்றும் கூறினார்.
“அது தவிர, உடன்படிக்கையில் உள்ள தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை இலங்கைக்கு அனுகூலமாக மாற்றியமைக்கக் கூடிய வல்லமை உண்டு. உடன்படிக்கைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் தங்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்களை தான் பார்க்கும். சில வேளைகளில் அச்ச நிலைமைகளும் இருக்கும். இதுபோன்ற உடன்படிக்கைகளை செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும்.” என எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.
எட்கா தொடர்பிலான தீர்மானம் குறித்து செய்தியாளரின் பார்வை
முந்தைய காலங்களில் எட்கா உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த அநுர குமார திஸாநாயக்க, எட்கா தொடர்பில் பிரதமர் மோதி கருத்துரைக்கும் போது எந்தவித பதிலையும் வழங்கவில்லை என ,மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
”ஜனாதிபதி மிகவும் கவனமாக இருந்திருப்பார், ஏனென்றால், அடுத்த மாதம் சீனா போகும் போது அங்கேயும் இவருக்கு பேச வேண்டிய நிலைமை இருக்கும். இலங்கையை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என அநுர குமார சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஒருவர் அந்த வார்த்தையை சொல்லத் தேவையில்லை” என்றார்.
இறைமையாண்மை கொண்ட நாடான இலங்கை, இன்னொரு நாட்டிற்கு எதிராக தன்னை பயன்படுத்த இடமளிக்காது எனக்கூறும் சிவராஜா, அநுரவின் கருத்தால், வேறு நாடுகளின் ஆதிக்கம் இங்கு இருக்கின்றது என்பது போன்ற தோற்றப்பாடு வருகின்றது என கூறுகின்றார்.
எட்கா உடன்படிக்கையை இந்த அரசாங்கம் இந்தியாவுடன் கைச்சாத்திடாது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
”மோதி எட்கா உடன்படிக்கை தொடர்பில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், அவர் ஏன் சொன்னார் என்றால், தங்களின் நிலைப்பாட்டிலிருந்து தாங்கள் மாறவில்லை. தாங்கள் இன்னும் உறுதியாக இருக்கின்றோம் என்று சொல்கின்றார். அதேபோன்று, இலங்கைக்கு, கஷ்ட காலத்தில் நாங்கள் உங்களுடன் இருந்திருக்கின்றோம் என்று ஞாபகப்படுத்துகின்றார்.”
”எட்கா உடன்படிக்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சாதகமாக பேசுகின்றார். இந்த உடன்படிக்கை நாட்டிற்கு நல்லது. இந்தியா பொருளாதாரத்தில் சிறந்த நாடு. எனவே அது நல்லது என அவர் சொல்கின்றார். அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொல்கின்றார். எனினும், சிங்கள கட்சிகள் அதனை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் எட்கா தொடர்பில் பேசும் போது, அது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பானது என்று பேசியவர் தான் இப்போதைய ஜனாதிபதி.”
“அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் சிறு விசனத்தில் இருக்கின்றார்கள். கோட்டாபய காலத்தில் இப்படியான சிறு விசனங்கள் தான் பின்னர் பெரிய பிரச்னையாக மாறின. இந்த நிலையில், செய்தியாளராக நான் அறிந்த விதத்தில் எட்கா உடன்படிக்கையை இந்த அரசாங்கம் கைச்சாத்திடாது” என ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU