SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
7 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘கோல்டன் டோம்’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதனை ‘அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு’ என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு தனது தற்போதைய பதவிக்காலம் முடியும் போது செயல்படத் தொடங்கும் என்று கூறிய டிரம்ப், “அதிநவீன” வான்வழி அச்சுறுத்தல்களை அமெரிக்கா எதிர்த்துப் போராட உதவுவதே இதன் குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் குறிப்பிட்டுள்ள அச்சுறுத்தல்களில் பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் அச்சுறுத்தல்களைக் கையாள்வதும் அடங்கும்.
உலகின் பல்வேறு நாடுகள் தங்களுக்கென சொந்த வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. போர் ஏற்பட்டால் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் முக்கியமானவை.
வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும், உலகின் முக்கிய நாடுகள் எந்தெந்த வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன என்பதையும் காண்போம்.
வான் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாட்டின் வான்வெளியை எதிரி விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்புதான் வான் பாதுகாப்பு அமைப்பு எனப்படுகின்றது.
இந்த அமைப்பு ரேடார், சென்சார்கள், ஏவுகணை மற்றும் துப்பாக்கி அமைப்புகளைப் பயன்படுத்தி வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, கண்காணித்து, பதிலடி கொடுத்து அழிக்கிறது.
வான் பாதுகாப்பு அமைப்பை ஒரு இடத்தில் நிலைநிறுத்தலாம் அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தலாம்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் பொதுவாக சிறிய டிரோன்கள் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பெரிய ஆயுதங்கள் வரையிலான அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன் கொண்டவை.
வான் பாதுகாப்பு அமைப்பு நான்கு முக்கிய பகுதிகளாக செயல்படுகிறது.
ரேடார்கள் மற்றும் சென்சார்கள் எதிரி விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கண்டறியும்.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், தரவுகளின் அடிப்படையில் முன்னுரிமைகளை அமைக்கிறது.
அவற்றில் உள்ள ஆயுத அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுக்கின்றன.
அதே சமயம், அந்த அமைப்பில் உள்ள நகரும் பிரிவுகள் விரைவாக களத்திற்கு அனுப்பப்படுவதால், இவை போர்க்களத்தில் மிகுந்த பயனளிக்கின்றன.
அமெரிக்க வான் பாதுகாப்பு

பட மூலாதாரம், AFP
அமெரிக்கா அதன் கோல்டன் டோம் அமைப்புக்காக 175 பில்லியன் டாலரைச் செலவிடுகிறது.
கோல்டன் டோம் அமைப்புக்காக அமெரிக்க பட்ஜெட்டில் ஆரம்ப தொகையாக 25 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்பு அமைப்பு, அதன் எதிரிகள் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, நிலம், கடல் மற்றும் விண்வெளியில் நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த அமைப்பின் ஒரு பகுதியாக, வான்வழித் தாக்குதல்களின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், சென்சார்கள் மற்றும் இடைமறிப்பான்கள் விண்வெளியில் அமைக்கப்படும்.
இந்த அமைப்பு இஸ்ரேலின் இரும்பு டோம் அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது.
ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேல் 2011 முதல் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால், இந்த கோல்டன் டோம் அமைப்பு மிகப் பெரியதாக இருக்கும்.
கூடுதலாக, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உட்பட பரந்த அளவிலான அச்சுறுத்தல்களைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
அனைத்து அச்சுறுத்தல்களையும் நடுவானிலே அகற்ற முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதன் வெற்றி விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதமாக உள்ளது.
தற்போது, அமெரிக்கா பல நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக THAAD அதாவது டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது. இவற்றில் தென் கொரியா, குவாம் மற்றும் ஹைட்டி ஆகியவையும் அடங்கும்.
இந்த அமைப்பு நடுத்தர தூரத்தில் வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவை புறப்படும் தொடக்க நிலையிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.
இது “ஹிட்-டு-கில்” என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அதாவது எதிரே வரும் ஏவுகணையை வெறுமனே தடுப்பதோடு நின்றுவிடாமல், நேரடியாக தாக்கி அதை அழிக்கிறது.
மேலும் 200 கிலோமீட்டர் தூரம் மற்றும் 150 கிலோமீட்டர் உயரம் வரை தாக்கும் திறன் கொண்டுள்ளது இந்த அமைப்பு.
உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகள் வைத்திருக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து பிபிசி நிருபர் சந்தன் குமார் ஜஜ்வாரே பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவுடன் பேசினார்.
“THAAD தவிர, அமெரிக்கா எம்ஐஎம்- 104 (MIM- 104) பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பையும் கொண்டுள்ளது, அதன் செயல்பாட்டு வரம்பு 170 கிலோமீட்டர்” என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“எல்லா நாடுகளும் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்டிருக்க முயற்சி செய்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
இஸ்ரேலின் இரும்பு டோம்

பட மூலாதாரம், @IDF
கடந்த ஆண்டு, இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான ‘இரும்பு டோம்’ பெரும் கவனத்தை ஈர்த்தது.
ஹமாஸுடனான போரின் போது இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இரும்பு டோம் அமைப்பை விரிவாகப் பயன்படுத்தி வருகிறது. இரான் மேற்கொண்ட தாக்குதல்களின் போதும் இஸ்ரேல் அந்த அமைப்பைத் தான் பயன்படுத்தியது.
இரான் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு கவசத்தால் தரையை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டன.
‘இரும்பு டோம் எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு’ என்பது இந்தப் பாதுகாப்புக் கவசத்தின் பெயர்.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அமைப்பு 90 சதவீத தாக்குதல்களில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து அங்கே தாக்கத்தை ஏற்படுத்தும் முன், இந்த டோம் அமைப்பு ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துகிறது.

இஸ்ரேலால் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதிதான் இந்த இரும்பு டோம் அமைப்பு.
ஏவுகணை குடியிருப்பு பகுதிகளில் விழப் போகிறதா இல்லையா என்பதையும், ஏவுகணை அதன் இலக்கைத் தவறவிடுகிறதா என்பதையும் தானாகவே இந்த அமைப்பு கண்டறியும்.
இந்த அமைப்பு குடியிருப்பு பகுதிகளில் விழும் அபாயம் உள்ள ஏவுகணைகளை மட்டுமே வானில் சுட்டு வீழ்த்தும். இதனால் இந்த தொழில்நுட்பத்தை கையாளுவதற்கான செலவு அதிகம் இருக்காது.
பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவாவின் கூற்றுப்படி, இஸ்ரேலிடம் டேவிட் ஃபிளிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பும் உள்ளது. அதன் வரம்பு 70 முதல் 300 கிலோமீட்டர் வரை இருக்கும் என அறியப்படுகின்றது.
2006-ஆம் ஆண்டு இஸ்லாமியக் குழுவான ஹெஸ்பொலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இஸ்ரேல் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க தொடங்கியது.
பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த அமைப்பு 2011-ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது.
சோதனையின் போது, தெற்கு நகரமான பீர்செபாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதில் இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது.
குறுகிய தூர தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் விதமாக இரும்பு டோம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த வானிலையிலும் வேலை செய்யும் இந்த அமைப்பில், ஒரு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் அப்பகுதியை நோக்கி வரும் எந்த ராக்கெட் அல்லது ஏவுகணையையும் கண்காணிக்க முடியும்.
இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பின் அலகுகள் இஸ்ரேல் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 20 இடைமறிப்பு ஏவுகணைகளை ஏவக்கூடிய மூன்று முதல் நான்கு ஏவுகணை வாகனங்கள் உள்ளன.
இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பை ஒரே இடத்தில் நிரந்தரமாக நிறுவுவதன் மூலம் இயக்க முடியும், மேலும் அதனை எங்கும் எளிதாகக் கொண்டு செல்லவும் முடியும்.
ஆனால், இந்த அமைப்பால் முற்றிலும் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த தொழில்நுட்பம் தற்போது காஸாவிலிருந்து வரும் ராக்கெட்டுகளை அழிக்கிறது. ஆனால் எதிர்காலத்தில், வேறு எந்த நாட்டு ஏவுகணைகளுக்கும் எதிராக, இந்த அமைப்பு அதே அளவு விளைவுகளை ஏற்படுத்துமா என்றால் அது சற்று சந்தேகம்தான் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு – எஸ் 400

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு எஸ்- 400, இந்திய ராணுவத்தால் ‘சுதர்சன் சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அதன் பல அடுக்குகள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளுக்கு பெயர் பெற்றது.
இந்த அமைப்பு, ரஷ்ய, இஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் கலவையைக் கொண்டுள்ளதால், அண்டை நாடுகளில் உள்ள அமைப்புளை விட சிறப்பாக செயல்படும் ஒன்றாக நம்பப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து ஐந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது.
அமெரிக்காவின் முன்னணி பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒப்பிடத்தக்கதாகவும் இந்த அமைப்பு உள்ளது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே 5.43 பில்லியன் டாலர்களுக்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இது பெறப்பட்டது.
எஸ்-400 என்பது நகரும் அமைப்பு. அதாவது சாலை வழியாக இதனை எளிதில் இடமாற்றம் செய்யலாம். கட்டளை கிடைத்த ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக எஸ்-400 அழைக்கப்படலாம் என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“இதன் தாக்கம் 400 கிலோமீட்டர் வரை இருக்கும். ரஷ்யா இதைப் யுக்ரேனுக்கு எதிராகப் பயன்படுத்தியது மற்றும் அது மிகவும் சிறப்பாக செயல்பட்டது. பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடைபெற்ற மோதலிலும் இந்தியா இதைப் பயன்படுத்தியது. அப்போதும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது ” என்றும் அவர் கூறுகிறார்.
சீனா மற்றும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹச்க்யூ -9 (HQ-9) , ஹச்க்யூ- 16 (HQ-16) மற்றும் எப்என்- 16 (FN-16) போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.
இவற்றில், 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானால் ஹச்க்யூ -9 (HQ-9) அமைப்பு சேர்க்கப்பட்டது. இது ரஷ்யாவின் எஸ்-300 க்கு சமமானதாகக் கருதப்படுகிறது.
வெளிப்படையாக சீனாவும் அத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது.
இருப்பினும் சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது ”சீனாவிடமிருந்து பெறப்பட்ட ஹச்க்யூ -9 (HQ-9) அமைப்புகள் பயனற்றவையாக இருந்தன” என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“சீனாவிடம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் அல்லது ஆயுதங்கள் போர் மண்டலத்தில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. அதாவது, சீனா கடைசியாக 1978-79ல் வியட்நாமில் போர் நடத்தியது என்பதால், அது எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பது பற்றி எதுவும் கூற முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU