SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு - டிரம்ப் அரசின் நிலைப்பாடு குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

புதன்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம், ‘இந்த பதற்றங்களைக் குறைக்க இந்தியா பாகிஸ்தானுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடனும் தொலைபேசியில் பேசி, ‘பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும், பாகிஸ்தான் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

தீவிரவாதிகளை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளதுடன், ராஜ்ஜீய உறவுகளைக் குறைப்பது உள்பட பல முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதிலிருந்து, தெற்காசியா மீது அமெரிக்காவின் ஆர்வம் குறைந்துள்ளது என்றும் அதன் வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைகள் மாறியுள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கவனம் அதிக வரிகள் மற்றும் தென் சீனக் கடல் மீதுதான் அதிகமாக உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

சமீபத்திய முடிவொன்றில், இந்தியா பாகிஸ்தானிய விமானங்களுக்காக தனது வான்வெளியை மூட முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நிலவி வரும் பதற்றமான சூழலை குறைக்க அமெரிக்கா இரு நாடுகளுடனும் ஒரே நாளில் இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்தியது இதுவே முதல் முறை.

இந்த அழைப்பு தொடர்பான தகவல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மீண்டும் ஓரிரு நாட்களில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார்

மேலும், இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்க, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தாரை பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நடாலி பேக்கர் புதன்கிழமையன்று சந்தித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை என்ன சொன்னது?

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ

பட மூலாதாரம், Getty Images

ரூபியோவின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த தாக்குதலை “தீவிரவாத மற்றும் மனசாட்சியற்ற தாக்குதல்” என்று விவரித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.

பாகிஸ்தான் இந்த தாக்குதலை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இந்த கொடூரமான தாக்குதல் குறித்த விசாரணையில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மார்கோ ரூபியோ, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் மார்கோ ரூபியோ பேசுகையில்,” தெற்காசியாவில் பதற்றங்களைக் குறைத்து அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிக்க பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவை கேட்டுக்கொண்டார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு அணு ஆயுத நாடுகளையும் ” பதற்றத்தை குறைக்கவும், நேரடி பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், அமைதியைப் பேணவும்” மற்றும் “பொறுப்பான தீர்வுக்காக” ஒன்றிணைந்து செயல்படவும் மார்க்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி வரும் நேரத்தில் பாகிஸ்தானை விமர்சிக்காமல் அமெரிக்கா இத்தாக்குதலைக் கண்டித்துள்ளது.

மறுபுறம், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஷாபாஸ் ஷெரீப் மார்கோ ரூபியோவிடம் என்ன சொன்னார்?

 ஷாபாஸ் ஷெரீப்

பட மூலாதாரம், Getty Images

இந்த உரையாடலின் போது பாகிஸ்தான் ​​பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ‘கோபமூட்டும் வகையில் கருத்துகளை தெரிவிப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தார் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுடன் பாகிஸ்தானை தொடர்புபடுத்தும் இந்தியாவின் கூற்றை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நிராகரித்தார்.

மேலும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மார்கோ ரூபியோவுடனான உரையாடலில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பிரச்னை குறித்து பேசிய பிரதமர் ஷெரீப், ‘இந்த ஒப்பந்தம் 24 கோடி மக்களின் உயிர்நாடியாகும். இதில் எந்தவொரு தரப்பினரும் தன்னிச்சையாக விலகுவதற்கு எந்த வழிமுறையும் இல்லை’ என்று தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீர் பகிர்வு தொடர்பான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. அதே நேரத்தில் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் உள்பட அனைத்து இருதரப்பு உறவுகளையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்து.

தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு “கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை” வழங்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து ராணுவ நடவடிக்கை விரைவில் வரும் என்று பாகிஸ்தான் கூறுகிறது. செவ்வாயன்று நடந்த உயர்நிலை கூட்டத்துக்கு பிறகு, இந்திய ராணுவத்துக்கு எந்த வித ராணுவ நடவடிக்கை எடுக்க முழு சுதந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமையன்று, பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார், அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

அப்போதிருந்து, சர்வதேச நாடுகளின் ராஜ்ஜீய முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு என்ன?

 டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் எதிர்வினையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பது பற்றிப் பேசினார் .

இந்தநிலையில் ரோம் நகருக்குச் செல்லும் போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ‘நிச்சயமாக இந்தப் பதற்றத்திற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்கள்’ என்று கூறினார்.

“நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் , பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், காஷ்மீரில் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு வழியில் அதற்கு தீர்வு கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இரு தலைவர்களையும் நான் அறிவேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகளவில் நிலவி வரும் பதற்றம், எப்போதும் இருந்து வருகிறது” என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா தற்போது தனது வெளியுறவுக் கொள்கை குறித்து குழப்பத்தில் இருப்பதாகவும், தெற்காசியாவை விட இந்தோ-பசிபிக் பிராந்திய அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து இந்தப் பிரச்னை குறித்து இன்னும் எந்த தீவிரமான நிலைப்பாடும் வெளிவரவில்லை.


இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு - டிரம்ப் அரசின் நிலைப்பாடு குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடந்த சில ஆண்டுகளில் தெற்காசியா தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணரும் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் மனன் திவேதி கூறுகையில், “பிரச்னைகளில் நேரடியாகத் தலையிடுவதை அமெரிக்கா தவிர்த்து வருகிறது. இதனுடன், இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அதிகரித்துள்ளது.”

“டிரம்பும் , வான்ஸும் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் நோக்கங்களையும் செயல்களையும் விமர்சித்திருந்தாலும், மார்கோ ரூபியோவின் சமீபத்திய கருத்துகள், இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நிலைப்பாட்டில் பார்ப்பதாகவே உள்ளது. இது பனிப்போர் காலக் கொள்கை. இந்த விஷயத்தின் தீவிரத்தை அமெரிக்க அதிபர் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

சர்வதேச விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் ஹர்ஷ் பந்த், அமெரிக்கத் தரப்பிலிருந்து இன்னும் எந்தவொரு உறுதியான முன் முயற்சியும் வெளிப்படவில்லை என்று கூறுகிறார்.

“முன்னுரிமை அளிக்கும் விதமாக, இது அமெரிக்காவிற்கு ஒரு தீவிரமான பிரச்னையாக இல்லை.”


இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு - டிரம்ப் அரசின் நிலைப்பாடு குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து அமெரிக்காவின் நீண்டகால வர்த்தக கூட்டாளிகள் மீது மோதல்களை தொடங்கியுள்ளார்.

சீனாவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா 90 நாள் வரித் தடையை விதித்துள்ளது.

“அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தெற்காசியாவிற்கு இனி இடமில்லை. சீனாவை மனதில் கொண்டு, இந்தோ-பசிபிக் பகுதி அதற்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது”என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

“பைடனின் காலத்திலிருந்தே, அமெரிக்கா பாகிஸ்தானுடன் குறைந்தபட்ச உறவை மட்டுமே பராமரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறிய பிறகு, அமெரிக்காவின் உத்தி கட்டமைப்பில் பாகிஸ்தானுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.”

கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தி கூட்டாண்மை அதிகரித்துள்ளது. சமீப காலங்களில் இரு நாடுகளின் அறிக்கைகளிலும் இது மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாலகோட் தாக்குதலுக்கு முன்பு இந்தியா அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தி கூட்டாண்மையைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு இந்தியா நிச்சயமாக அமெரிக்காவை கருத்தில் கொள்ளும்” என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU