SOURCE :- BBC NEWS

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் அல்லது அதன் சாத்தியக்கூறு ஏற்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது இரு நாடுகளின் அணு ஆயுதங்கள்தான்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இந்த ஆயுதங்கள் தொடர்பாக இரு நாடுகளின் கொள்கைகளும் வேறுபட்டவை.

பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

மறுபுறம், பதிலடி நடவடிக்கையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா எப்போதும் பேசி வருகிறது. இது இந்தியாவின் நிலையான கொள்கையாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையை ‘அணு ஆயுத மிரட்டல்’ என்று இந்தியா கூறுகிறது.

பிரதமர் மோதி என்ன கூறுகிறார்?

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்கள், பாகிஸ்தானுடனான ராணுவ மோதல், பின்னர் சண்டை நிறுத்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி திங்கள்கிழமை மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, ‘அணுஆயுத மிரட்டலை’ இந்தியா சகித்துக்கொள்ளாது என்று கூறினார்.

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோதி எச்சரித்துள்ளார். “நாங்கள் எங்கள் சொந்த வழியில் மற்றும் எங்கள் சொந்த விதிமுறைகளில் பதிலளிப்போம். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிப்படும் ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். எந்த அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அணு ஆயுத மிரட்டலின் போர்வையில் செழித்து வளரும் பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும், பயங்கரவாதத்தின் எஜமானர்களையும் தனித்தனி நிறுவனங்களாக நாங்கள் பார்க்க மாட்டோம்.” என்றார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல.

2016-ம் ஆண்டு உரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது. 2019 ஆம் ஆண்டில், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் தாக்கப்பட்ட போது, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ‘தீவிரவாத முகாம்கள்’ மீது இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தானின் எச்சரிக்கை பயனுள்ளதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

அச்சுறுத்தல் ஏற்பட்டால் முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கை கேள்விக்குள்ளாகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் முனீர் அகமது கூறுகையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோதி சொல்ல வந்தது என்னவென்றால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதம் போன்ற மரபுசாரா தாக்குதல்களை நடத்துகிறது, பின்னர் இந்தியாவின் வழக்கமான (ராணுவ) தாக்குதல்களை நிறுத்த அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் ‘அச்சுறுத்துகிறது’. இப்போது இந்த வகையான அணுஆயுத மிரட்டல் மிகவும் பயனுள்ளதாக இல்லை. பாலகோட் மற்றும் இப்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவற்றுக்குப் பிறகு பாகிஸ்தானின் இந்த வரம்பை இந்தியா சோதித்துள்ளது” என்கிறார்.

மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த அசோசியேட் ஆய்வாளர் டாக்டர் ராஜீவ் நயன் கூறுகையில், “உரி தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் துல்லியத் தாக்குதல்கள், பின்னர் 2019 -ல் பாலகோட் மற்றும் இப்போது இந்தியாவின் ஏவுகணை தாக்குதல் ஆகியவை நடந்தன.”

“எனவே கேள்வி என்னவென்றால், பாகிஸ்தான் எந்த சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்? பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் பல நாடுகள் தங்கள் இருப்பு ஆபத்துக்குள்ளானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று கூறுகின்றன. ஆனால் கேள்வி என்னவென்றால், எந்த சூழ்நிலையை நீங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாக கருதுகிறீர்கள்?”

இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதப் போட்டி

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

அணு ஆயுதங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ 1965 -ம் ஆண்டில், “இந்தியா ஒரு அணுகுண்டைத் தயாரித்தால், நாங்கள் புல் அல்லது இலைகளைத் தின்றாலும் அல்லது பசியுடன் இருந்தாலும் கூட எங்கள் சொந்த அணுகுண்டைத் தயாரிப்போம்” என்று கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1950 களில், “நாங்கள் அணு ஆயுதங்களைக் கண்டித்தோம், அவற்றைத் தயாரிக்க மறுத்துவிட்டோம். ஆனால் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால், எங்களை தற்காத்துக் கொள்ள எங்கள் அறிவியல் அறிவைப் பயன்படுத்துவோம்.” என்று பேசினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 1970 களில் இருந்து அணுசக்தியைப் பெற முயன்று வருகின்றன. இந்தியா 1974 இல் ‘சிரிக்கும் புத்தர்’ சோதனையை நடத்தி தன்னால் அணு ஆயுதங்களை பெற முடியும் என்று காட்டியது.

பின்னர், இந்தியா 1998 மே 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் ‘ஆபரேஷன் சக்தி’ மூலம் அணுகுண்டுகளை சோதித்தது.

சில நாட்களுக்குப் பிறகு, மே 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில், பாகிஸ்தான் ‘சாகாய் -1’ மற்றும் ‘சாகாய் -2’ சோதனைகளை நடத்தி தன்னிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை தெரிவித்தது.

அதாவது, இரு நாடுகளும் கடந்த 27 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்த காலக்கட்டத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் விவாதப் பொருளாக மாறின.

அணு ஆயுதங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் கூறியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

1998 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்திய பிறகு, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐக்கிய நாடுகள் சபையில், “பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனைகளின் நோக்கம் தற்போதுள்ள அணு ஆயுத பரவல் அமைப்பை சவால் செய்வதோ அல்லது வல்லரசாகும் லட்சியத்தை நிறைவேற்றுவதோ அல்ல. பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதையும் அச்சுறுத்தல் செய்வதையும் தடுக்க இந்த சோதனைகளை நடத்தினோம். இந்தியாவுக்கு பதிலளிக்கும் விதமாக நாங்கள் நடத்திய சோதனைகள் எங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளன.” என்று குறிப்பிட்டார்.

நாட்டைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து நவாஸ் ஷெரீப் பேசியிருக்கலாம், ஆனால் பாகிஸ்தானின் தலைமை அவ்வப்போது அதன் அணுகுண்டுகளைப் பயன்படுத்தப் போவதாக ‘அச்சுறுத்தியுள்ளது’.

2000 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஷம்ஷாத் அகமது, “பாகிஸ்தான் எப்போதாவது படையெடுத்தால் அல்லது தாக்கப்பட்டால், பாகிஸ்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன்னிடம் உள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் பயன்படுத்தும்” என்று கூறினார்.

பாகிஸ்தானின் ராணுவத் தலைமையும் அதன் அணு ஆயுதங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலும், பாகிஸ்தானின் மூலோபாய திட்டங்கள் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான காலித் கித்வாய் இஸ்லாமாபாத்தில் உள்ள மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் அணு ஆயுதங்களை முழுமையாக மூன்று பிரிவுகளில் கொண்டுள்ளது: மூலோபாயம், செயல்பாடு மற்றும் தந்திரோபாயம். பாகிஸ்தானின் இந்த ஆயுதங்கள் இந்தியாவின் பரந்த நிலப்பரப்பையும் அதன் வெளிப்புற பகுதிகளையும் முழுமையாக உள்ளடக்கியது, இந்தியாவின் மூலோபாய ஆயுதங்களை மறைக்க இடமில்லை.” என்று பேசினார்.

மற்றொரு தருணத்தில், ஜெனரல் காலித் கித்வாய், “பாகிஸ்தானின் அணுசக்தி திறன் உண்மையானது, வலுவானது மற்றும் பாதுகாப்பானது. இது ஆண்டின் ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நாளும், முழுமையாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அப்படியே உள்ளது, அதாவது ஆக்கிரமிப்பைத் தடுப்பது” என்றார்.

ஜெனரல் காலித் தான் 2013 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முழு அளவிலான பாதுகாப்புக் கோட்பாட்டை வழங்கினார். இதன் கீழ், பாகிஸ்தான் மூலோபாய, செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. 60 கிலோமீட்டர் முதல் 3000 கிலோமீட்டர் வரை தாக்க முடியும் என்று கூறுகிறது.

அதாவது இந்தியாவின் எந்தப் பகுதியின் மீதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த முடியும் என்று பாகிஸ்தான் கூறுகிறது என்று அர்த்தம்.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு பேட்டியில் பாகிஸ்தானின் அணுசக்தி திறனைக் குறிப்பிடும்போது, “பாகிஸ்தான் அதன் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அதன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்” என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் அமைச்சர் முகமது ஹனிஃப் அப்பாஸி, “பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அலங்காரத்திற்காக இல்லை. அவை இந்தியாவுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை. கௌரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறோம்.” என்று பேசினார்.

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், RAVI RAVEENDRAN/AFP via Getty Images

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான “மிரட்டல்” பாகிஸ்தானிய தலைமையின் அறிக்கைகளில் பிரதிபலிக்கிறது. இந்தியத் தலைவர்களும் அவ்வப்போது அணு ஆயுதங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

1974 மே மாதம் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, இந்திரா காந்தி, “பொக்ரான் சோதனை ஒரு அமைதியான அணுகுண்டு வெடிப்பு. அணுசக்தியை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவியல் சோதனை அது.” என்று பேசினார்.

1998 மே மாதம் பொக்ரான் -2 சோதனைக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, “இந்தியா இப்போது ஒரு அணு ஆயுத நாடு. நமது அணு ஆயுதங்கள் தற்காப்புக்கானவை. அணு ஆயுதங்கள் அல்லது வேறு எந்த வகையிலும் இந்தியாவை ‘அச்சுறுத்த’ முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றார்.

இதற்குப் பிறகு, அதே ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அடல் பிஹாரி வாஜ்பேயி, இந்தியாவின் அணுசக்தி, ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவே என்றும், இந்தியா ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற கொள்கையைப் பின்பற்றும் என்றும் கூறினார்.

அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை இந்தியா விரும்புகிறது என்றும் ஆனால் ஆக்கிரமிப்பைத் தடுக்க, நாங்கள் அணு ஆயுதங்களை குறைந்தபட்சமாக வைத்திருப்போம் என்றும் பிரதமர் வாஜ்பேயி கூறியிருந்தார்.

இந்தியா-பாகிஸ்தானின் அணு ஆயுத கொள்கைகள்

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தனது முதல் அணு ஆயுதக் கொள்கையை 1999 இல் உருவாக்கியது. இது முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

2011 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதை மீண்டும் வலியுறுத்தி, “இந்தியாவின் அணுசக்தி கொள்கை முதலில் பயன்படுத்தக்கூடாது மற்றும் அணுசக்தி தாக்குதல் ஏற்பட்டால் முழு சக்தியுடன் பதிலடி கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது.”

அதே நேரத்தில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையில், “இந்தியாவின் அணுசக்தி கொள்கை தெளிவாக உள்ளது. அதன்படி, அணுஆயுதங்களை முதல் பயன்படுத்துவது இல்லை. ஆனால் அணு ஆயுதங்களால் நம்மைத் தாக்குபவர்கள் தப்ப முடியாது. நமது அணுசக்தி திறன் நமது இறையாண்மையை உறுதி செய்கிறது” என்றார்.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமைக்கு ஏற்ப இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார், “முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதிபூண்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது” என்று கூறினார்.

மறுபுறம், பாகிஸ்தானிடம் எழுத்துப்பூர்வமான, தெளிவான அணுசக்தி கொள்கை எதுவும் இல்லை. இந்தியாவின் ‘பாரம்பரிய ராணுவ மேலாதிக்கத்தை’ அல்லது வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்த விரும்புவதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்களில் நிபுணரும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான ராஜீவ் நயன், பாகிஸ்தானின் கொள்கையில் நிறைய தெளிவின்மை உள்ளது என்று கூறுகிறார்.

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

“பாகிஸ்தானின் கொள்கையில் உள்ள மிகப்பெரிய தெளிவின்மை என்னவென்றால், எந்த சூழ்நிலையில் அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்பதுதான். அணுகுண்டை பயன்படுத்துவதற்கான தருணம் அல்லது வரம்பு என்ன என்பதை பாகிஸ்தான் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை. தொடக்கத்தில் எந்த வகையான ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. போர்க்கள ஆயுதம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய ஆயுதம் பயன்படுத்தப்படுமா அல்லது ஒரு மூலோபாய ஆயுதம் பயன்படுத்தப்படுமா?” என்கிறார் ராஜீவ் நயன்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தற்போது உலகில் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆனால் அணு ஆயுதங்கள் குறித்த பயமும், அவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கமும் உள்ளது.

1945-ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசிய பின்னர் உலகில் எங்கும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.

ராஜீவ் நயன் பேசுகையில், “அணு ஆயுதங்களை நிறுத்த சட்டம் இல்லாவிட்டாலும், அணு ஆயுத நாடுகளுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்தப்படாத போது, அது தனது முதல் அணுகுண்டைப் பயன்படுத்துவதை எவ்வாறு நியாயப்படுத்தும் என்ற கேள்வி எழும்.

இந்த காரணத்திற்காக, பாகிஸ்தான் அணுசக்தி அச்சுறுத்தல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஏனென்றால் இந்தியா ஒருபோதும் அணுகுண்டைப் பயன்படுத்துவதற்கான ‘அச்சுறுத்தலை’ கொடுக்கவில்லை, ஆனால் பாகிஸ்தான் இதுபோன்ற ‘அச்சுறுத்தல்களை’ கொடுத்து வருகிறது.

இந்தியா – பாகிஸ்தானிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?

பாகிஸ்தானிடமோ அல்லது இந்தியாவிடமோ எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பதற்கான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதுவும் இல்லை. இருப்பினும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு ஆகியவை அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுகின்றன.

SIPRI இன் 2024 மதிப்பீட்டின்படி, இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் உள்ளன.

அதே நேரத்தில், இந்த புள்ளிவிவரங்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை மற்றும் அணு ஆயுதங்கள் விஷயத்தில் இந்த எண்ணிக்கை ஏதேனும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டாக்டர் முனீர் அகமது கூறுகையில், “அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தனது சமீபத்திய மதிப்பீட்டில், இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில், அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. அவை பயன்பாட்டிற்கு வந்தால், மிகச் சில ஆயுதங்கள் மட்டுமே பெரும் அழிவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

ராஜீவ் நயனும் அதையே நம்புகிறார். அவர், “அணு ஆயுதங்கள் மிகவும் அழிவுகரமானவை, எண்ணிக்கைகள் இங்கு முக்கியமானவை அல்ல, ஏனென்றால் ஒரு சிறிய அணு ஆயுதம் கூட பெரும் அழிவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

அணு ஆயுத பயன்பாட்டுக்கான உத்தரவுகளை யார் வழங்குவார்?

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Images

அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான உத்தரவுகளை வழங்குவது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன,

டாக்டர் ராஜீவ் நயனின் கூற்றுப்படி, இந்தியாவில் அணுசக்தி கட்டளை ஆணையம் (NCA) உள்ளது. இது பிரதமர் தலைமையில் ஒரு அரசியல் கவுன்சிலைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை உள்ளடக்கிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதில் உள்ளது.

பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) தலைமையில் ஒரு நிர்வாக கவுன்சில் உள்ளது. இதில் அனைத்து ஆயுதப்படைகளின் தளபதிகள், முப்படைகளின் தலைவர், பாதுகாப்பு புலனாய்வு இயக்குநர் ஜெனரல், அணுசக்தி முகமையின் உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் உள்ளனர்.

அணு ஆயுதங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு வரிசைப்படுத்தலுக்கான மூலோபாய படைகள் கட்டளை (SFC) உள்ளது, இது பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவருக்கு அறிக்கை அளிக்கிறது.

டாக்டர் ராஜீவ் நயன் கூறுகையில், “இந்தியாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவு அரசியல் சார்ந்தது, இறுதி முடிவு நாட்டின் சிவில் தலைமையால் எடுக்கப்படும். ராணுவப் படைகள் மற்றும் அணு விஞ்ஞானிகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற என்.சி.ஏ நிபுணத்துவ ஆலோசகர்களைக் கொண்டுள்ளது.” என்றார்.

பாகிஸ்தானில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பில் தேசிய கட்டளை ஆணையம் (என்.சி.ஏ) முதன்மையானதாக உள்ளது. அதன் அமைப்பும் கிட்டத்தட்ட இந்தியாவைப் போலவே உள்ளது.

பிரதமரின் தலைமையில் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், கூட்டுப் படைகளின் தலைவர் (சி.ஜே.சி.எஸ்.சி), தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் மற்றும் மூலோபாய திட்டப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இதில் அடங்குவர்.

NCA இன் கீழ் ஒரு மூலோபாய திட்டங்கள் பிரிவு உள்ளது, அதன் முக்கிய வேலை அணுஆயுதங்களை நிர்வகிப்பது மற்றும் NCA க்கு தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குவதாகும்.

மூலோபாய படைகள் கட்டளை சி.ஜே.சி.எஸ்.சி-யின் கீழ் செயல்படுகிறது மற்றும் அதன் வேலை அணு ஆயுதங்களை ஏவுவதாகும்.

இது ஷாஹீன் மற்றும் நாசர் ஏவுகணைகள் போன்றவற்றை நிர்வகிக்கிறது மற்றும் என்.சி.ஏ கட்டளையின் பேரில் அணு ஆயுதங்களை ஏவவும் செய்யும்.

அண்மையில் இந்தியாவுடனான பதற்றத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் தேசிய கட்டளை ஆணையத்தின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியாவுடன் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அத்தகைய கூட்டத்தை நடத்தவில்லை என்று கூறப்பட்டது.

ராஜீவ் நயன் கூறுகையில், “பாகிஸ்தானில் ராணுவத்தின் செல்வாக்கைப் பார்க்கும்போது, பாகிஸ்தானில் ராணுவம் மட்டுமே இந்த முடிவை எடுக்கும் என்று கூறலாம்.”என்றார்.

அணு ஆயுத தாக்குதலை வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்க முடியுமா?

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுதங்களை பாதுகாப்பான இடங்களில் தயார் நிலையில் வைத்துள்ளன. அணு ஆயுதம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று வெடிபொருள், மற்றொன்று வெடிபொருளை இலக்கிற்கு கொண்டு செல்வது அதாவது ஏவுகணை.

அமைதியான சூழ்நிலையில், இந்தியா தனது பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தனித்தனியாக வைத்திருக்கிறது. சில தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் கொள்கையும் இதேபோன்றதுதான்.

இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் மிகவும் சிறியது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, ஆயுதங்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல.

டாக்டர் ராஜீவ் நயன் கூறுகையில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் மிகவும் குறைவாக உள்ளது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதிலிருந்து பின்வாங்குவது அல்லது வான் பாதுகாப்பு மூலம் வானில் ஆயுதத்தை அழிப்பது மிகவும் கடினம்.” என்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

மேலும், “மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் கோட்பாட்டளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியும், ஆனால் நடைமுறையில் அது கடினமாக இருக்கும். ஒரு சிறிய தவறு கூட பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் யோசனை பேரழிவுகரமானதாக இருக்கிறது,” என்றார்.

அதே நேரத்தில், டாக்டர் முனீர் அகமது , “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலை எப்போதாவது வந்தால் இரு நாடுகளும் பரஸ்பர அழிவை நோக்கி நகர்ந்துவிட்டன என்று அர்த்தம்.” என்கிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC