SOURCE :- BBC NEWS

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் சுமார் ஒன்பது இடங்களில் ஏவுகணை மற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி (மே 7) நள்ளிரவு 1:05இல் இருந்து 1:30 வரை சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற அந்தத் தாக்குதல், அந்தப் பகுதி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பின் பெரும் சத்தம் அங்கு வசிப்பவர்களை தூக்கத்தில் இருந்து அலறி எழ வைத்தது.

பாகிஸ்தானோ, ஆறு இடங்கள் மட்டுமே தாக்கப்பட்டது எனவும், இந்திய போர் விமானங்கள் ஐந்தையும், ட்ரோன் ஒன்றையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது. இந்தக் கூற்றை இந்தியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான எல்லையாக இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்தியா வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 46 பேர் காயமடைந்தனர் எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

அதேநேரம் இந்திய பகுதியில் எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் பத்து பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகு, அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் ஆபத்தான அளவில் அதிகரித்து இந்த நிலையை அடைந்துள்ளது.

‘பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் மற்றும் பிற வெளிநாட்டு சக்திகள் சேர்ந்துதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்பதற்குத் தங்களிடம் தெளிவான ஆதாரம் இருப்பதாக’ இந்தியா தெரிவித்தது. இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அதோடு இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் இந்தியா சமர்ப்பிக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல், பதற்றம் அதிகரித்துள்ளதைக் குறிக்கிறதா?

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2016இல் உரியில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியா, ‘துல்லியத் தாக்குதல்களை’ நடத்தியது.

புல்வாமா வெடிகுண்டுத் தாக்குதலில் 2019ஆம் ஆண்டு 40 இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு பாலகோட் பகுதியின் உள்ளே சென்று வான்வெளித் தாக்குதல் நடத்தி வந்தது இந்தியா. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியா தாக்கியது அதுவே முதல் முறை. இது அடுத்தடுத்த பழிவாங்கும் தாக்குதல்களுக்கும், வான்வழியில் போர் விமானங்களுக்கு இடையிலான சண்டைகளுக்கும் வழிவகுத்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக, ஒரே நேரத்தில் பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்ட மூன்று தீவிரவாதக் குழுக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தியது. இதன் அடிப்படையில், இந்தத் தாக்குதல் தனித்துத் தெரிவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் நுழைந்து லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் முக்கிய மையங்கள் உள்ளிட்ட ஒன்பது தீவிரவாத இலக்குகளைத் தாக்கியதாக இந்தியா குறிப்பிடுகிறது.

இவற்றில் சியால்கோட்டில் இருந்த இரண்டு முகாம்கள், மிக அருகில், அதாவது இந்திய எல்லைக் கோட்டில் இருந்து 6 – 18 கி.மீ தொலைவிலேயே இருந்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மிக அதிக தூரம் சென்று தாக்கியது என்றால், பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கி.மீ தூரம் தள்ளி இருந்த பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-மொஹமது தலைமையகத்தின் மேல் நடத்திய தாக்குதல்தான் என்று கூறியுள்ளது இந்தியா.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாம், பஹல்காமில் நடந்த தாக்குதலோடு சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறினார் அந்த செய்தித் தொடர்பாளர்.

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

ஆறு இடங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் பாகிஸ்தான், ஆனால் அந்த இடங்களில் தீவிரவாத முகாம்கள் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

“கடந்த கால வகைமைகளுக்கு அப்பால் இந்தியாவின் இலக்குகள் விரிவடைந்துள்ளதுதான் இந்த முறை குறிப்பிடத்தகுந்த விஷயம். இதற்கு முன்னால் தாக்குதல் நடத்தப்பட்ட பாலகோட் போன்றவை எல்லைக் கோட்டைத் தாண்டி, ராணுவமயமாக்கப்பட்ட எல்லையில் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டவை,” என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் டெல்லியை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

மேலும், “ஆனால் இந்த முறை, சர்வதேச எல்லைப் பகுதியைத் தாண்டி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வரை சென்று, அங்கு தீவிரவாத முகாம்களின் தலைமையகங்கள், உள்கட்டமைப்புகள் போன்றவற்றையும் அங்கு லஷ்கர்–இ-தொய்பாவுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட இடங்களான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பகுதிகள் வரை சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.”

“அதோடு ஜெய்ஷ்-இ-மொஹமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீனின் சொத்துகளையும் தாக்கியுள்ளனர். இது நிலவியல் அரசியல் ரீதியாக விரிவான பதிலைக் குறிக்கிறது. இந்தியாவுக்குப் பல குழுக்கள் பிரச்னை கொடுத்து வருகின்றன என்று குறிப்பிடும் அதே வேளையில் ஒரு விரிவான தகவலையும் சொல்வதைப் போல் உள்ளது,” என்று ராகவன் குறிப்பிட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை என்பது, குஜராத்தில் இருந்து ஜம்மு வரை நீண்டிருக்கும், இரு நாடுகளையும் பிரிக்கும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எல்லை.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பிஸரியா பிபிசியிடம் பேசியபோது “இந்தியா செய்தது பாலகோட்டில் செய்த நடவடிக்கையைப் போலவும் அதோடு சேர்த்து தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தவும், அறியப்பட்ட தீவிரவாத மையங்களைக் குறிவைப்பதோடு, பதற்றத்தைக் குறைக்கும் செய்தியையும் தெரிவிப்பதாகும்” என்றார்.

“இவை கடந்த காலத்தைவிட மிகத் துல்லியமாகக் குறிவைத்து, வெளிப்படையாக நடந்துள்ளன. இதை பாகிஸ்தானால் மறுக்க முடியாது,” என்று கூறினார் பிஸரியா.

“தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில்” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்தியா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. “2019இல் நடந்த தடுப்பு நடவடிக்கைகளின் வலிமை குறைந்து விட்டதாகவும், அவற்றை மறு உருவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் நினைக்கிறது”, என்கிறார் பேராசியர் ராகவன்.

“தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற இஸ்ரேலின் கொள்கையைப் பிரதிபலிப்பதாக இது இருக்கிறது. ஆனால் திருப்பி அடித்தால் மட்டும்தான் தீவிரவாதத்தைத் தடுக்க முடியும் என்று நாம் முடிவு செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுப்பதற்கான ஆபத்து இதில் இருக்கிறது. பிறகு நிலைமை கையிலடங்காமல் போய்விடும்” என்கிறார்.

இது இன்னும் பெரிய மோதலாக மாறுமா?

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானிடம் இருந்து பதில் தாக்குதல் நடப்பது தவிர்க்க முடியாதது என்றும் அதன் பிறகு ராஜ்ஜீய வழிமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

“பாகிஸ்தானிடம் இருந்து கண்டிப்பாக எதிர்வினை வரும். பதற்றம் அடுத்த நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவதுதான் நம் முன்பாக இருக்கும் சவால். அப்போது ராஜ்ஜீய நடவடிக்கைகள்தான் கைகொடுக்கும்” என்கிறார் பிஸரியா.

“பொறுமை காக்கும்படி பாகிஸ்தானுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் ராஜ்ஜீய நடவடிக்கையின் முக்கியக் குறிக்கோள் பாகிஸ்தானின் எதிர்வினைக்குப் பிறகு இந்தப் பிரச்னை அதிகரிக்காமல் இரு நாடுகளும் பார்த்துக்கொள்வதுதான்” என்றும் அவர் கூறுகிறார்.

லாகூரை சேர்ந்த ராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளரான இஜாஸ் ஹுசைன் போன்ற பாகிஸ்தானை சேர்ந்த நிபுணர்கள், முரிட்கே, பஹாவல்பூர் போன்ற பகுதிகளில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல், “நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்கிறார்கள்.

பதில் தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறார் டாக்டர் ஹுசைன்.

“பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பேச்சுத்திறன் மற்றும் உடனடியாக பதிலடி கொடுக்கும் எண்ணம் ஆகியவற்றைப் பார்த்தால் எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்கள் வரும் நாட்களில் நடக்கலாம் என்றுதான் தோன்றுகிறது,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

ஆனால் இப்படி இரு தரப்பும் மாறி மாறி துல்லியத் தாக்குதல்கள் நடத்தி ‘இதை ஒரு வழக்கமான போராக” மாற்றிவிடக்கூடாது என்று கவலைப்படுகிறார் டாக்டர் ஹூசைன்.

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் இருக்கும் அல்பெனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டோபர் க்ளாரி, இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கும் அளவையும், ‘தாக்குதல் நடந்த இடங்களில் கண்ணுக்குத் தெரியும் பாதிப்பையும்’, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்த்தால் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்துவது உறுதி என்றே தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.

“அப்படிச் செய்யாமல் இருந்தால் இந்திய அரசுக்குக் கோபம் வரும் போதெல்லாம் தன் மீது தாக்குதல் நடந்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுமதி கொடுத்ததைப் போல் ஆகிவிடும். அதோடு ‘பதிலுக்கு பதில்’ கொடுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகளோடும் பொருந்தாமல் போய்விடும்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் தெற்காசிய அரசியலை உற்று கவனிக்கும் க்ளாரி.

“இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் அவற்றின் தளங்கள் மீது மட்டும் இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடுவதால், பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ தளங்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதை உறுதியாகச் சொல்ல முடியாது,” என்றார் அவர்.

பதற்றம் அதிகரித்து வந்தாலும், நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையில் சில நிபுணர்கள் இருக்கிறார்கள்.

“இன்னொரு பதில் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே சில காலம் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுடன் இந்தப் பிரச்னையில் இருந்து நாம் தப்பிக்கும் வாய்ப்பும் இருக்கிறது,” என்று சொன்னார் க்ளாரி.

இருந்தாலும், இந்தப் பிரச்னை அதிகரிப்பதற்கான ஆபத்து நிறையவே இருப்பதாகவும், 2002க்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே, 2016, 2019 பிரச்னைகளை விடவும் ‘அதிக ஆபத்தைக்’ கொடுக்கக்கூடிய பிரச்னையாக இது இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதைத் தவிர்க்க முடியாதா?

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்தியாவின் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தானில் போர் குறித்த அதீத ஆர்வம் இல்லை என்றாலும், நிலைமை விரைவில் மாறக்கூடும் என்று அந்நாட்டில் உள்ள நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

“நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அரசியல் சமூகம் என்பது பிளவுபட்டுள்ளது. இம்ரான் கானின் சிறைவாசம் ராணுவத்திற்கு எதிரான வலுவான எதிர்ப்பை பொது மக்களிடையே தூண்டியது,” என்று இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஆய்வாளரும் ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி இதழின் முன்னாள் பத்திரிகையாளருமான உமர் ஃபரூக் கூறுகிறார்.

“கடந்த 2016 அல்லது 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்று பாகிஸ்தான் பொதுமக்கள் ராணுவத்தை ஆதரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. போர் குறித்த அதீத ஆர்வம் என்பது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அதிகமாக இருக்கும் மத்திய பஞ்சாபில் பொதுமக்களின் எண்ணம் மாறினால், ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான பொதுமக்களின் அழுத்தம் அதிகரிப்பதை நாம் காணக்கூடும். மேலும் இந்த மோதலால் ராணுவம் மீண்டும் பிரபலமடையும்” என்கிறார்.

டாக்டர் ஹுசைனும் இதே போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார்.

“இந்தியாவுடனான தற்போதைய மோதல், பாகிஸ்தான் ராணுவம் பொது மக்களின் ஆதரவை, குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து மீண்டும் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக நான் நம்புகிறேன். அவர்கள்தான் சமீபத்தில் அரசியல் தலையீட்டிற்காக பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் ஹுசைன், “ராணுவத்தின் தீவிரமான பாதுகாப்பு நிலைப்பாடு என்பது ஏற்கெனவே பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதுபடுத்தப்படுகிறது. சில ஊடகங்கள் ஆறு அல்லது ஏழு இந்திய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறுகின்றன.”

“இந்தக் கூற்றுகளைச் சரி பார்க்க வேண்டிய அவசியம் இருந்தாலும், அந்நிய அச்சுறுத்தல் நிலவும் காலங்களில் தேசிய பாதுகாப்பு குறித்த விவரிப்புகளை ஆதரிக்கும் பிரிவினரிடையே ராணுவத்தின் பிம்பத்தை வலுப்படுத்த அவை உதவுகின்றன” என்கிறார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது பின்வாங்க முடியுமா?

இந்திய வான்வெளித் தாக்குதல், பாகிஸ்தானின் எதிர்வினை, ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

இந்தியா மீண்டும் ஒருமுறை பதற்றம் அதிகரிப்பதற்கும் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும் இடையிலான ஒரு குறுகலான பாதையில் பயணிக்கிறது.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது பிரதான எல்லையை மூடி, நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி, தூதர்களை வெளியேற்றி, பாகிஸ்தானியர்களுக்கான பெரும்பாலான விசாக்களை நிறுத்தி வைத்து, விரைவாக பதிலடி கொடுத்தது.

இரு தரப்பு துருப்புகளுக்கும் இடையே சிறிய ஆயுதத் தாக்குதல்கள் நடந்தன. இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தானின் வான்வெளியை மூடுவது என்ற அந்நாட்டின் முடிவைத் தொடர்ந்து, இந்தியாவும் அதேபோன்ற தடையை விதித்து, பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்குத் தனது வான்வெளியை மூடியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தை” நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ என்ற பாகிஸ்தானின் அந்தஸ்தை உடனடியாக ரத்து செய்து, அதிக வரிகளை விதித்து, முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்புகளை நிறுத்தி வைத்த இந்தியாவின் நடவடிக்கைகளை இது பிரதிபலிக்கிறது.

அப்போது பாலகோட் மீது விமானப்படை தாக்குதல்களை இந்தியா நடத்தியதும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்கள் நடத்தியதும், இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் கைது செய்யப்பட்டதும் பதற்றங்களை மேலும் அதிகரித்தது. இருப்பினும், இறுதியில் ராஜ்ஜீய வழிமுறைகள் பதற்றத்தைத் தணித்தன. நல்லுறவின் அடையாளமாக விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC