SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் சண்டை நிறுத்த அறிவிப்பு, சண்டைநிறுத்த உடன்படிக்கை மீறல் என இரு தரப்பு விவகாரத்தில் அவ்வப்போது திருப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இந்தியாவின் முப்படைகளின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன்பிறகு, பின்னிரவில் பாகிஸ்தான் ராணுவமும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது.
இந்தியத்தரப்பு செய்தியாளர் சந்திப்பில், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத், எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை ‘வரையறுக்கப்பட்ட, அளவிடப்பட்ட, துல்லியமான நடவடிக்கை’ என்று இந்திய ராணுவ அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், “நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றும் இந்திய தரப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையில், பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) இயக்குநர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுடனான மோதலின் போது, ‘F-1 மற்றும் F-2 ஏவுகணைகளைப் பயன்படுத்தி 26 இந்திய ராணுவ நிலைகள் குறிவைக்கப்பட்டன’ என்று கூறினார்.
மே 6 மற்றும் 7 ஆம் தேதி இரவு, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரை இந்த ராணுவ நிலைகளில் இருந்து தாக்கியதாக அகமது ஷெரீப் சவுத்ரி கூறினார்.

பட மூலாதாரம், ani
இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் கருத்து
ஞாயிற்றுக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், பஹல்காம் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். “தீவிரவாத நடவடிக்கையை மேற்கொண்டவர்கள், அதற்குத் திட்டமிட்டவர்கள் மற்றும் அவர்களின் தீவிரவாத உள்கட்டமைப்பை அழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்” என்று அவர் கூறினார்.
“உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் 9 இடங்களை அடையாளம் கண்டது. இவற்றில் சில பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்தன. லஷ்கர்-இ-தொய்பாவின் கோட்டையாக இருந்த முரிட்கே போன்ற இடங்களும் இவற்றில் அடங்கும்” என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய் தெரிவித்தார்.
“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தினோம். இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப், முதாசிர் அகமது போன்ற அதிகம் அறியப்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இந்த மூவரும், காந்தகார் விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்” என்று இந்தியத் தரப்பு தெரிவித்தது.
இந்திய ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “எல்லையைத் தாண்டி 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு, மே 7 ஆம் தேதி மாலை நேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லையின் பல பகுதிகளில் ஏராளமான பாகிஸ்தானிய ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் சிறிய டிரோன்கள் காணப்பட்டன” என்று கூறினார்.
“குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவத் தளங்களுக்கு மேலே இவை பறந்தன. இந்திய ராணுவம் அவற்றை வெற்றிகரமாக இடைமறித்தது” என்று ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி கூறினார்.

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களில் சில இலக்கை எட்டிய போதிலும், அவற்றால் அதிக சேதம் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“நமது தாக்குதலுக்கும், அவர்களது தாக்குதலுக்குமான வித்தியாசம் என்னவென்றால், நாம் அவர்களின் தீவிரவாதிகளை குறிவைத்தோம், அவர்களோ நமது பொதுமக்களையும், ராணுவ உள்கட்டமைப்பையும் குறிவைத்தனர்” என்று ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அகமது ஷெரிப் சவுத்ரி பேசுகையில், “இலக்கு வைக்கப்பட்ட 26 இந்திய ராணுவத் தளங்களில் விமானப்படையின் விமானங்கள் மற்றும் விமானப்படை தளங்களும் அடங்கும். சூரத்கர், சிர்சா, ஆதம்பூர், பூஜ், நலியா, பதிண்டா, பர்னாலா, ஹர்வாடா, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, அம்பாலா, உதம்பூர் மற்றும் பதான்பூர் ஆகிய இடங்களில் இருந்த விமானப்படை தளங்களையும் தாக்கினோம்” என்று தெரிவித்தார்.
“காஷ்மீரில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் குஜராத் வரை பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து பறந்து வந்தன. பாகிஸ்தான் ராணுவம் சைபர் தாக்குதல்களையும் நடத்தியது. நகர்ப்புற மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தாக்குதல்களையும் பாகிஸ்தான் மிகவும் திறமையாக நடத்தியது” என்று அவர் கூறினார்.
போர் விமானத்தை இழந்ததை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் ராணுவம், ‘இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை இரண்டு இடங்களில் வெற்றிகரமாக குறிவைத்து தாக்கியதாக’ கூறியது.
ஞாயிற்றுக்கிழமையன்று மாலை இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், ரஃபேல் விமானம் தொடர்பான கேள்விக்கு விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி பதிலளித்தார்.
இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டு ரஃபேல் ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம், இந்த நிலையில் இழப்புகள் ஏற்படுவதும் இயல்பானதே. நம் முன் இப்போது இருக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நமது நோக்கங்களை நாம் அடைந்துவிட்டோமா? ” தீவிரவாத முகாம்களை அழிக்கும் எண்ணம் நிறைவேறியதா?” இதற்கான எங்களது பதில், “நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோம்” என்பதே ஆகும், என தெரிவித்தார்.
பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, ‘அவர்களின் விமானங்கள் நமது எல்லைக்குள் நுழைவதைத் தடுத்தோம், அவற்றின் சிதைபாடுகள் எங்களிடம் இல்லை’ என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீதான இந்திய தாக்குதல்களால் சில உள்கட்டமைப்புகள் மற்றும் ஒரு விமானம் சேதமடைந்துள்ளதாகவும், பழுதுபார்க்கப்பட்ட பிறகு அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தானின் டிஜி ஐஎஸ்பிஆர், ‘இந்திய விமானி யாரும் பாகிஸ்தானின் காவலில் இல்லை, இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் பல்வேறு வழிகளில் பரப்பப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகள்’ என்று தெளிவுபடுத்தினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் விளக்கம்

பட மூலாதாரம், ANI
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய கடற்படை துணை அட்மிரல் ஏ.என். பிரமோத், “கூட்டு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டதும், வடக்கு அரபிக் கடலில் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட 96 மணி நேரத்திற்குள் நமது கடற்படையை கடலில் நிலைநிறுத்திவிட்டோம்” என்று கூறினார்.
“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராக இருந்தது. நமது படை நிலைநிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப் பிரிவுகள் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரிவுகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் கடற்படை வைஸ் அட்மிரல் நவாஸ் பேசுகையில், “ஐஎன்எஸ் விக்ராந்த் கராச்சி நோக்கி நகர்வது குறித்து அதிகம் பேசப்பட்டது. ஆனால் கடலில் நடைபெறும் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். முதல் நாளிலிருந்தே அதன் செயல்பாடுகளை நாங்கள் கண்காணிக்கத் தொடங்கிவிட்டோம்” என்று அவர் சொன்னார்.
“மே 6 மற்றும் 7 ஆம் தேதி இரவு, மும்பைக்கு அருகில் இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த், மே 9 ஆம் தேதியன்று பாகிஸ்தான் கடலில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் இருந்தது. அதன் பிறகு அது பின்வாங்கி மீண்டும் மும்பைக்கு அருகில் வந்தது” என்று அவர் கூறினார்.
“ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 400 கடல் மைல்களுக்குள் வந்துவிட்டால், விஷயங்கள் நமக்கு சுலபமாகிவிடும்” என்று அவர் தெரிவித்தார்.
“கடற்படையின் கடல்சார் விமானப் பிரிவு எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தயார் நிலையில் இருந்தது. அத்துடன் விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் ஔரங்கசீப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன்” என்று பாகிஸ்தான் கடற்படை வைஸ் அட்மிரல் நவாஸ் தெரிவித்தார்.
“கடலில் இருந்து தாக்குதல் நடந்திருந்தால், திறம்பட பதிலளிக்க முழுமையாக தயாராக இருந்தோம்” என்று பாகிஸ்தான் கடற்படை தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை நிறுத்துவது தொடர்பான புரிதல் மற்றும் அதனை மீறுதல், அந்த மீறுதலுக்கு எதிர் நடவடிக்கை என இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து பதற்றத்திலேயே இருக்கின்றன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU