SOURCE :- BBC NEWS

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

8 மே 2025, 02:46 GMT

புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.

இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு செயலர் தீவிரவாத முகாம்களே குறி வைக்கப்பட்டதாகவும் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் கூறினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசிடம் உறுதி செய்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், live updates

பட மூலாதாரம், Getty Images

இரு தரப்பிலும் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில், உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் அமைதிக்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிபிசியிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றோம். நீண்ட கால அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கான தீர்வை நோக்கி இரு நாடுகளும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்,” என்று செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், live updates

முன்னதாக, வெளியுறவுத்துறையில் செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் டாம் பேட்மன், “இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையிலான அமெரிக்காவின் கோரிக்கையில் ஒரு தெளிவு இல்லாதது, அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் சமீப ஆண்டுகளில் வலுவடைந்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் தெளிவாகிறது,” என்று தெரிவித்தார்.

நேற்றிரவு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மோதல் விரைவாக முடிவுக்கு வந்து, அமைதியான தீர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நடக்கப்போவது என்ன?

  • இந்தியா மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்க இந்திய அரசு காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் இருக்கும் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
  • இதற்கிடையில், பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றமும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் உரை

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்கி இந்தியா தவறு இழைத்துவிட்டதாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார். “இந்தத் தாக்குதல்களுக்கு அவர்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பின்வாங்கிவிடும் என இந்தியா நினைத்து இருந்ததாகவும், ஆனால் “தங்கள் நாட்டுக்காகப் போராடத் தெரிந்த தேசம் இது என்பதை இந்தியா மறந்துவிட்டது” என்றும் அந்த உரையில் அவர் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவின் தாக்குதலை எதிர்த்ததாகக் கூறினார். அப்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தக் கூற்றை இந்தியா உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவின் தாக்குதலுக்கு “எங்கள் தரப்பிலான பதிலடி அது” எனக் கூறிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், இந்தியா நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்படப் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் நாங்கள் பழி தீர்ப்போம் என்று சத்தியம் செய்கிறேன்,” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் என்ன நடக்கிறது?

இந்தியா பாகிஸ்தான் மோதல்

பட மூலாதாரம், Gurdev Singh

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாபின் சில கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தங்கள் உடைமைகளை டிராக்டர் ட்ராலிகளில் ஏற்றிக்கொண்டு, எல்லையில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்கள் அல்லது தங்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

எல்லையிலிருந்து வெளியேறும் சில குடும்பங்களிடம் பிபிசி பேசியபோது, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க குடும்பத்தில் ஓரிரு பேர் வீட்டில் இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தானுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் ஹுசைனிவாலா எல்லையில் சுமார் 12-14 கிராமங்கள் உள்ளன.

ஜுகே ஹஸாரா சிங் கிராமத்தை சேர்ந்த ஜீத் சிங் கூறுகையில், “இங்கு பயம் நிறைந்த சூழல் உள்ளது. இங்கு உள்ளவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்” என்றார்.

வயதான பெண்மணியான பஞ்சோ பாய் கூறுகையில், “நாங்கள் எங்கள் தானியங்களை எடுத்துக்கொண்டு மோகா மாவட்டத்துக்குச் செல்கிறோம். இங்கு போர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. பாகிஸ்தான் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள

இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து மலாலா கவலை

இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து மலாலா கவலை

பட மூலாதாரம், Getty Images

பதற்றங்களைக் குறைக்கவும், மக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“வெறுப்பும் வன்முறையும்தான் நமது பொதுவான எதிரிகள்” என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

“இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி மக்களின் அன்புக்கு உரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆபத்தான நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எங்களுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சிறுமிகளையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச சமூகம் இப்போது ராஜ்ஜீய பேச்சுவார்த்தையை வளர்ப்பதில் செயல்பட வேண்டும்,” என்று மலாலா கூறியுள்ளார்.

“நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான ஒரே பாதை அமைதிதான்” என்று அவர் எழுதினார்.

கடந்த 2012ஆம் ஆண்டில், பெண் கல்வியை ஊக்குவித்து வந்த மலாலா, தாலிபன் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டார். மலாலா இப்போது ஒரு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலராகத் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 2014ஆம் ஆண்டில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதுவரை நடந்தது என்ன?

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், ஆபரேஷன் சிந்தூர், live updates

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்தியா, சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. மேலும் பாக்லிஹார் அணை மதகுகளை மூடியது இந்தியா.

பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்பரப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, தடை விதித்தது. இந்நிலையில், நேற்று (மே 7) அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டது.

அதுகுறித்த அறிக்கையில், “பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட, நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா அறிவித்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதில் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, இரான் உள்ளிட்ட உலக நாடுகள், இந்தியாவும் பாகிஸ்தானும் காட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU