SOURCE :- BBC NEWS

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது

பட மூலாதாரம், Press Information Bureau

பல மாதங்களாக வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த இந்தியாவும் வங்கதேசமும் சமீபத்தில் பரஸ்பர வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கு வணிக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

மலிவான இறக்குமதிகளால் உள்ளூர் தொழில்கள் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்து நிலம் வழியாக நூல் இறக்குமதிக்கு கடந்த மாதம் வங்கதேசம் கட்டுப்பாடு விதித்தது.

2020 முதல் நடைமுறையில் உள்ள வங்கதேசப் பொருட்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யும் வசதியினை (டிரான்ஷிப்மென்ட் ) இந்திய திரும்பப் பெற்றதை தொடர்ந்து வங்கதேசம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவுகள் தளர்ந்துள்ளன. தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கி உள்ளார். மறுபுறம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகம் தற்போது வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், பணமோசடி மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கூறி வருகிறது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஹசீனா மறுத்துள்ளார். இந்தியாவும் அந்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.

வங்கதேசத்தின் சிறுபான்மை இந்து சமூகத்தின் மீது நடக்கும் தாக்குதல்கள் குறித்து வரும் செய்திகளை தொடர்ந்து இந்தியா வங்கதேசத்தை விமர்சித்து வருகிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடான வங்கதேசம், தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்கள் குறிவைக்கப்படுவதை மறுக்கிறது. அங்கு நடக்கும் பெரும்பாலான சம்பவங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்லது சாதாரண குற்றங்கள் என வங்கதேசம் கூறுகிறது. 170 மில்லியன் மக்கள் தொகையுள்ள வங்கதேசத்தில் இந்துக்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.

இந்தியாவில் இருந்து நிலத்தின் வழியாக பருத்தி இறக்குமதி செய்ய வங்கதேசம் கட்டுப்பாடுகளை விதித்தது

பட மூலாதாரம், Getty Images

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கும் சூழலில், இதனால் தங்களுக்கு ஏற்படும் செலவுகளை நிறுவனங்கள் கணக்கிட்டு வருகின்றன.

வங்கதேசத்தின் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பருத்தி நூலை கடல் வழியாகவும் வான் வழியாகவும் இறக்குமதி செய்ய முடியும். ஆனால் இது போக்குவரத்தை மெதுவாகவும், அதிக பொருட்செலவு ஏற்படுத்துவதாகவும் அமையும்.

2024 ஆம் ஆண்டில், இந்தியா 1.6 பில்லியன் டாலர் (1.2 பில்லியன் யூரோ) மதிப்புள்ள பருத்தி நூலை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்தது. அதில் மூன்றில் ஒரு பகுதி நிலத்தின் வழியாக சென்றது.

உயர்தர நிறுவனங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் வங்கதேச நிறுவனங்கள், இப்போது நிறுத்தப்பட்டுள்ள டிரான்ஷிப்மென்ட் வசதி மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்தன.

“இது [வங்கதேசத்தின் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு] ஒரு பெரிய பாதிப்பாக இருக்கும். இந்திய வழித்தடத்தில் ஒரு வாரத்துக்குள் மேற்கத்திய நாடுகளுக்கு சரக்கு செல்கின்றது. கடல் வழியாக செல்ல எட்டு வாரங்கள் வரை ஆகும்” என்று ஐரோப்பிய ஃபேஷன் நிறுவனங்களுக்கு சரக்குகளை அனுப்பும் விநியோகச் சங்கிலி நிறுவனம் எம்ஜிஎச் குழுமத்தின் தலைவர் அனிஸ் அகமது கூறுகிறார்.

உலகளவில் சீனாவுக்கு பின் உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளரான வங்கதேசம், கடந்த ஆண்டு 38 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்தது. இதில் 1 பில்லியன் டாலருக்கும் மேலான பொருட்கள் இந்தியாவின் நிலம் மற்றும் விமானப் பாதை வழியாக சென்றுள்ளது. அஹ்மத் இந்த வர்த்தகப் பாதையை வெற்றிகரமாகச் செயல்படுவதாக விவரிக்கிறார்.

போதுமான சரக்கு விமானங்கள் இல்லாததும், தேவையான வசதிகள் இல்லாத விமான நிலையங்களும், வங்கதேசத்தில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்வதை தடுக்கின்றன.

சமீபத்தில் சீனாவுக்கு சென்றபோது யூனுஸ் கூறிய கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா டிரான்ஷிப்மென்ட் வசதியை ரத்து செய்ததாக பலர் கருதுகிறார்கள்.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள “கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம்” என்றார். மேலும் அப்பகுதி “சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கமாக” மாறக்கூடும் என்று பரிந்துரைத்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் முகமது யூனுஸின் இக்கருத்துகளை கண்டித்தனர்.

இந்த பிராந்தியத்தில் சீனாவை விட இந்தியா உத்தி ரீதியாக பலவீனமாக இருப்பதாக யுனுஸ் தெரிவித்த கருத்துக்கள், இந்தியாவை கொந்தளிக்க வைத்தது

இந்தியாவின் வடகிழக்கு பகுதி, ‘சிக்கன் நெக்’ என அழைக்கப்படும் சிலிகுரி பாதை மூலம் பிரதான இந்திய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி நேபாளம் மற்றும் வங்கதேசம் உள்ளது. திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கு இதன் அருகில் உள்ளது.

இந்தியா சீனா இடையே நீண்ட காலமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. 1962ஆம் ஆண்டு போரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில், எதிர்கால மோதலில் சீனா இந்த சிலிகுரி பாதையை குறிவைத்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்பு குறித்து திட்டங்களை வகுக்கும் கொள்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.

மறுபுறம் யூனுஸின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் இருந்ததாகவும் வங்கதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யூனுஸ் சீனாவுக்குச் சென்றிருந்த போது வடக்கு வங்கதேசத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான டீஸ்டா நதி திட்டத்திற்கு உள்ள சீனாவின் ஆர்வத்தையும், வங்கதேசம் வரவேற்றது.

இந்தத் திட்டம் இந்தியாவின் முக்கியப் பகுதியான சிலிகுரி பாதைக்கு அருகில் இருப்பதால், அதில் சீனா தலையிடுவது இந்தியாவை கவலையடைய வைக்கும் என்று இந்திய ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக வங்கதேசம் உள்ளது.

பட மூலாதாரம், Reuters

விசா விதிகளை இந்தியா கடுமையாக்கியதால் வங்கதேசத்தில் பலர் கலக்கமடைந்துள்ளனர். ஹசீனா அதிகாரத்தை இழந்ததில் இருந்து, மிகக் குறைவான விசாக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் வங்கதேச மக்கள் சுற்றுலா, வணிகம், படிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்தனர். சமீபத்தில், தினசரி வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை 80%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதும், அவரை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற வலியுறுத்தலும், இருநாடுகளுக்கிடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

“ஹசீனாவை நாம் அவர்களிடம் ஒப்படைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவரை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் உள்ள பொதுக் கருத்தும் அதை ஏற்காது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷ்யாம் சரண்.

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு இடையில், இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம், நிலம் வழியாக வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் இன்னும் அதிகமான வர்த்தக தடைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வங்கதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“முந்தைய [ஹசீனா] அரசாங்கத்தால் இந்தியாவுக்கு [அதன் வடகிழக்கு மாநிலங்களுக்கு] வழங்கப்பட்ட போக்குவரத்து மற்றும் பரிமாற்ற வசதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வலுவான பார்வை இப்போது வங்கதேசத்தில் காணப்படுகிறது,” என்று வங்கதேசத்தில் உள்ள சென்டர் பார் பாலிசி டயலாகின் மூத்த பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா பிபிசியிடம் கூறினார்.

வங்கதேச துறைமுகங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகளை தனது வடகிழக்கு பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தி, தூரம், நேரம் மற்றும் செலவுகளை இந்தியா குறைக்கிறது. இருப்பினும், இந்த வழித்தடங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் அளவு அவர்கள் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வங்க தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளுக்கு மத்தியில் இந்தியா வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஒரு காலத்தில் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், இந்திய ஆதரவுடன் சுதந்திரத்திற்காக போராடியது. ஹசீனா தனது 15 ஆண்டுகால ஆட்சியில் பாகிஸ்தானிடமிருந்து விலகியிருந்தார்.

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறைச் செயலாளர் அம்னா பலோச் கடந்த மாதம் வங்கதேசத்துக்குப் பயணம் செய்தார். 15 ஆண்டுகளில் நடந்த முதல் பயணமாக இது உள்ளது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்ததன் காரணமாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தாரின் வங்கதேச பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

“பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்த வங்கதேசம் எடுத்துள்ள முயற்சியைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என நான் நினைக்கிறேன். ஆனால், இரு நாடுகளும் இணைந்து இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுத்த நினைக்கின்றன என்ற எந்த சமிக்ஞையும் இருந்தால், அது நிச்சயமாக இந்தியாவை கவலையில் ஆழ்த்தும்,” என்று முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷ்யாம் சரண் கூறுகிறார்.

இரு தரப்பிலிருந்தும் வெளிவரும் கூர்மையான அதிகாரப்பூர்வ எதிர்வினைகள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்துகின்றன.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் இஸ்லாமிய அச்சுறுத்தல்களை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருகிறது.

பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட உறவுகள் இப்போது பின்வாங்குவதாகத் தெரிகிறது.

மேலும் இரு நாடுகளாலும் அமைதியை நிலைநிறுத்த முடியாவிட்டால், அவர்களின் நடவடிக்கைகள் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU