SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல முடிவுகளை இந்தியா எடுத்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் நதிகளின் நீரைத் தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ செய்யும் எந்த முயற்சியும் “போர் நடவடிக்கையாக” கருதப்படும் என்றும், அதற்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இரு நாடுகளின் அரசியல் தலைமையும் பரஸ்பரம் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடுமையான எச்சரிக்கைகளையும், காட்டமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பொது மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்” என்றார்.
“ஒவ்வொரு தீவிரவாதியையும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு தண்டிக்கும் என்ற செய்தியை நான் முழு உலகுக்கும் தெரிவிக்கிறேன். எஞ்சியுள்ள தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக அழிக்கும் நேரம் தற்போது வந்துவிட்டது” என்றும் மோதி குறிப்பிட்டார்.
“பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காதபடி உறுதி செய்வதற்கான ஓர் உத்தி வகுக்கப்படுகிறது” என்று இந்தியாவின் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுப்பதாகத் தெரிவித்த அதே வேளையில், பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் போர் அறிவிப்பாகக் கருதப்படும்” என்று வலியுறுத்தினார்.
ஓய்வு பெற்ற ஜெனரல் விடுத்த எச்சரிக்கை என்ன?

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images
ஒரு முழுமையான பெரிய போருக்கு வழிவகுக்கும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை இந்தியா எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் புறந்தள்ளிவிட முடியாது என்று தெற்காசிய நாடுகளின் அரசியலை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், ராணுவ நடவடிக்கை குறித்து அவசர முடிவுகளை எடுப்பது குறித்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எச். பனாக் எச்சரித்துள்ளார்.
“பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் கொண்ட ஒரு நாடு. இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பதிலடி கொடுக்கும் அளவுக்குப் போதுமான ஆயுத பலம் பாகிஸ்தானிடம் இருக்கிறது” என்று தி பிரின்ட செய்தி ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏவுகணைகள், டிரோன்கள், விமானப் படை என எதுவாக இருந்தாலும், எந்த இழப்புமின்றி பதிலடித் தாக்குதலை நடத்தத் தேவையான தொழில்நுட்பத் திறன் இந்தியாவிடம் இல்லை. ஆனால் பதிலடி கொடுக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஆகையால் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தயார் நிலை குறித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசியிடம் கூறுகையில், “நாங்கள் இனிமேல்தான் தயாராகும் வேண்டும் என்றில்லை. ஏற்கெனவே தயார் நிலையில்தான் இருக்கிறோம். எந்தச் சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்,” என்றார்.
“இந்தியா ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், 2019ஆம் ஆண்டு நடந்தது போல பதிலடி கொடுக்கப்படும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடந்த சனிக்கிழமையன்று கூறினார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளின் விமானப் படைகளுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட மோதல் ஏற்பட்டபோது, பாலகோட்டில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலைப் பற்றி அவர் இங்கு குறிப்பிடுகிறார்.
இந்திய ராணுவத்தின் வலிமை

பட மூலாதாரம், Getty Images
ராணுவ வலிமை குறித்த 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் இந்தியாவைவிட 8 இடங்களில் பின்தங்கியுள்ளது என்று குளோபல் ஃபயர் பவர் இணையதளத்தில் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ராணுவ சக்தியைப் பொறுத்தவரை, 2025ஆம் ஆண்டில் 145 நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது.
இந்திய ராணுவத்திடம் சுமார் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லக்கூடிய பீரங்கிகள் உள்ளன. இது தவிர, 264 பீப்பாய் ராக்கெட் பீரங்கிகளும் இருக்கின்றன.
இந்திய விமானப் படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்கள், 513 போர் விமானங்கள், 270 போக்குவரத்து விமானங்கள் உள்பட மொத்தம் 2,229 விமானங்கள் இருக்கின்றன. மொத்த விமானங்களில் 130 தாக்குதல் விமானங்கள், 351 பயிற்சி விமானங்கள், 6 டேங்கர் கடற்படை விமானங்கள் ஆகியவை அடங்கும்.
இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் வைத்திருக்கும் மொத்த ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை 899. அவற்றில் 80 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்த வல்லவை.
இந்திய கடற்படையில் 1.42 லட்சம் கடற்படை வீரர்கள் உள்ளனர். மேலும் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள், 13 டெஸ்டிராயர் எனப்படும் அழிக்கும் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 சிறிய போர் கப்பல்கள் உள்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன.
தளவாட வசதிகளைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்திடம் 311 விமான நிலையங்கள், 56 துறைமுகங்கள், 6.3 மில்லியன் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் 65,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் இருக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவத்தின் பலம்

பட மூலாதாரம், Getty Images
குளோபல் ஃபயர் பவர் இணையதளத் தரவுகளின்படி, பாகிஸ்தான் ராணுவத்தில் சுமார் 13.11 லட்சம் ராணுவ வீரர்களும், 1.24 லட்சம் கடற்படை வீரர்கள் மற்றும் 78 ஆயிரம் விமானப்படை வீரர்கள் உள்ளனர்.
பாகிஸ்தானிடம் மொத்தம் 1,399 விமானங்கள் உள்ளன, அவற்றில் 328 போர் விமானங்கள், 90 தாக்குதல் வகைகள், 64 போக்குவரத்து விமானங்கள், 565 பயிற்சி விமானங்கள், 4 விமானம் தாங்கி கப்பல்கள், தாக்குதல் நடத்தவல்ல 57 ஹெலிகாப்டர்கள் உள்பட 373 ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும்.
மேலும் அந்நாட்டு ராணுவத்திடம் 2,627 டாங்கிகள், 17,500 வாகனங்கள், 662 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள், 2,629 இழுத்துச் செல்லப்பட்டும் பீரங்கிகள் மற்றும் 600 மல்டிபேரல் ராக்கெட் பீரங்கிகள் ஆகியவை இருக்கின்றன.
பாகிஸ்தான் கடற்படையிடம் 9 போர்க்கப்பல்கள், 9 சிறிய போர்க் கப்பல்கள் (corvettes), 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 69 ரோந்து கப்பல்கள் உள்பட மொத்தம் 121 போர்க் கப்பல்கள் உள்ளன.
தளவாடங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானிடம் மூன்று துறைமுகங்கள், 116 விமான நிலையங்கள் மற்றும் 60 வணிகக் கப்பல் படை மட்டுமே இருக்கின்றன. இது தவிர, 2 லட்சத்து 64 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளும் 11 ஆயிரத்து 900 கிலோமீட்டர் ரயில் பாதைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன.

யாரிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 70 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.
இருப்பினும், இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பது தெளிவாக இல்லை.
“இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், இந்தியா நீண்ட தூர ஆயுதங்களை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதாவது, அந்த ஆயுதங்களால் சீனாவையும் தாக்க முடியும்” என்று அந்த சிந்தனைக் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடாகவும், உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி நாடாகவும் இருக்கும் சீனா, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 410 போர்முனைகளில் இருந்து 500 ஆக 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிரோன்களின் எண்ணிக்கை

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு நவம்பரில் பிபிசி உருது சேவை செய்தியாளர் ஷகீல் அக்தர் எழுதிய கட்டுரையின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் டிரோன்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகின்றன.
அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் சுமார் 5,000 டிரோன்கள் இருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார்.
“பாகிஸ்தானிடம் இந்தியாவைவிட குறைவான டிரோன்கள் இருந்தாலும், அந்நாடு வைத்திருக்கும் டிரோன்கள் வெவ்வேறு திறன்களைக் கொண்டவை. மேலும் அவை 10 முதல் 11 விதமான தயாரிப்புகளைச் சேர்ந்தவை” என்றும் அவர் தெரிவித்தார்,
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உலகின் மிக வெற்றிகரமான மற்றும் ஆபத்தான டிரோன்களாக பிரிடேட்டர் டிரோன்கள் கருதப்படுகின்றன.
மேலும், இலக்குகளை அழிக்கக்கூடிய 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிரோன்களும், லேசர் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளும் வாங்கப்பட்டன.
“துருக்கி மற்றும் சீனாவில் இருந்து, பாகிஸ்தான் டிரோன்களை இறக்குமதி செய்கிறது. அதோடு, அந்நாடு ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்தும் டிரோன்களை வாங்கியுள்ளது” என்று ராகுல் பேடி கூறுகிறார்.
இவற்றோடு, பாகிஸ்தான் பராக் மற்றும் ஷாபர் என்ற டிரோன்களையும் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானிடம் துருக்கியின் நவீன ‘பைராக்டர்’ TB2 மற்றும் அகின்ஜி டிரோன்கள் உள்ளன. மேலும், சீனாவிடம் இருந்து விங் லோங் 2, சிஹெச்-4 போன்ற டிரோன்களையும் வாங்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU