SOURCE :- BBC NEWS

கொரிய கலாசாரம்

பட மூலாதாரம், samrat

“நான் பிடிஎஸ் (BTS) பாடல்களைக் கேட்க ஆரம்பித்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் இருந்து என்னை வெளிக்கொண்டு வந்தது இந்த கே பாப் (கொரியன் பாப் தான்,” என்கிறார் கொரியன் கலாசாரத்தை பெரிதும் விரும்பி அதை பின்பற்றும் பிரியம்வதா.

இப்படி இந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கொரிய கலாசாரத்தை பெரிதும் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு அது பொழுதுபோக்கு, சிலருக்கு அது அவர்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வு, இன்னும் பலருக்கு அதன் மீது தீவிரக் காதல்.

‘கங்னம் ஸ்டைல்’ (Gangnam Style). இது தான் இந்த மிகப்பெரும் கலாசார பரவலின் தொடக்கப்புள்ளி. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இப்பாடலால் உலகம் முழுவதும் கொரியன் பாப் பாடல் என்ற புதிய வகை இசை பிரபலமானது. இந்த புதுமையான இசை அனைவரையும் ஈர்த்தது, இப்பாடல் வரிகள் பலரையும் சென்று சேர்ந்தது. இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல.

கங்னம் ஸ்டைலில் தொடங்கிய இந்த புள்ளி, கொரியன் கலாசாரம் இன்று பல இளம் இந்தியர்களால் கொண்டாடப்படும் மொழியாக, இசையாக, உணவாக உருவெடுத்துள்ளது.

ஆனால், இந்தியா போன்ற மிகப்பெரிய உலகச் சந்தையில் கொரிய கலாசாரம் தனக்கான தனி இடத்தை உருவாக்கியது எப்படி?

ஹால்யூ புரட்சி: கொரியன் தொடர்கள்

கொரியன் கலாசாரத்தை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளுள் முக்கியமான ஒரு வார்த்தைதான் ‘ஹால்யூ’. இதனை ‘ஹால்யூ வேவ்’ என்றும் அழைக்கின்றனர். கொரியன் சார்ந்த டிராமாக்கள், திரைப்படங்கள், உணவுப்பழக்கம், இசை ஆகியவை பல கலாசாரங்களுக்கு பரவுவதே ‘ஹால்யூ’ (Hallyu) எனப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு அனைவருக்கும் கொரியன் கலாசாரத்தை அறியச் செய்தது டெலிகிராம், நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளில் வெளிவரும் கொரியன் டிராமாக்கள் தான்.

பெண்களைக் கவரும் பெண் எழுத்தாளர்கள்

கொரிய கலாசாரம்

பட மூலாதாரம், Getty Images

“2019 ஆம் ஆண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது இந்த சீரிஸ்களை பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்,” என்கிறார் கொரிய கலாசாரத்தின் ரசிகை ஆலியா.

இன்றைய இளைய தலைமுறை மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் விரும்பி பார்க்கும் தொடராக, இசையாக இந்த ‘ஹால்யூ’ உருவெடுத்துள்ளது. இந்த தொடர்களில் அவர்கள் காட்டும் அழகான காதல் கதைகள், அன்றாட வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் சவால்கள், உறவுகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் அசாதாரண சக்தி படைத்த மனிதர்கள், பழங்கால வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கதைக்களங்கள் என அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இந்த நிகழ்ச்சிகள் உள்ளன.

2021 ஆம் ஆண்டு வெளியான ஸ்க்விட் கேம் (squid game) போன்ற தொடர்கள் சர்வதேச கவனத்தைப் பெற்று கொரியன் தொடர்களின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது.

“நிஜத்தில் சாத்தியமில்லாத அழகிய காதல் கதைகள் எங்களை வேறு ஒரு கற்பனை உலகில் வாழவும் மகிழ்ச்சியடையவும் உதவுகிறது, ஆனால் இந்த கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் கொரிய கலாசாரம் தொடர்பான விஷயங்களை இந்திய ஆண்கள் பெரிதும் வெறுக்கின்றனர். அதேபோல, அதை விரும்புபவர்களையும் தவறாக விமர்சிக்கின்றனர்,” என்கிறார் பிரியம்வதா. 2019 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் கொரிய தொடர்களை எழுதுபவர்களில் 90% பெண்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் பெண்களை அதிகம் கவருவதாக உள்ளது.

கொரிய கலாசாரம்

பட மூலாதாரம், samrat

இது தொடர்பாக கொரியா ஜூங் அங் டெய்லி எனும் செய்தித்தாள் கடந்த ஆண்டு அக்டோபர் வெளியிட்டுள்ள செய்தியில், கொரியாவின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், கொரிய தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் வெப்டூன் ஆகியவற்றின் தயாரிப்புக்காக 454 மில்லியன் வொன் (கொரிய பணம்) நிதியை ஒதுக்கியுள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டுகளில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சகம் முயற்சிப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, 2023 ஆம் ஆண்டு டைம்ஸ் (TIME) செய்தித் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நெட்ஃபிக்ஸ் செயலி தென் கொரியாவில் 250 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்களுள் ஐந்தில் மூன்று பங்கு மக்கள் இந்த கொரியன் தொடர்களை பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரியன் பாப்

கே-பாப்

பட மூலாதாரம், Getty Images

“மன்டே, டியூஸ்டே, வெட்னஸ்டே…,” என்று கேட்டால் வாரத்தின் ஏழு நாட்களை குறிப்பிடுவதாக தோன்றும், ஆனால் நீங்கள் கொரியன் பாப் பாடல்களை கேட்பவராக இருந்தால் இந்த வரிகள் ஜங்குக்கின் செவன் பாடல் வரிகள் என்பது உங்களுக்குத் தெரியும். ஸ்பாட்டிஃபை, கானா போன்ற இசை செயலிகளில் அதிகம் கேட்கப்பட்டுள்ள பாடல்களில் கொரியன் பாப் பாடல்களும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

பிடிஎஸ், பிளாக் பிங்க், ஸ்ட்ரே கிட்ஸ் போன்ற இசைக்குழுக்களின் பாடல்கள் இன்று மில்லியன் கணக்குகளில் கேட்கப்பட்டுள்ளது. புதுமையான இசை, ஒருங்கிணைந்த நடனம், வெவ்வேறு குரல்கள் மற்றும் தங்களை மிகவும் அழகாக முன்னிறுத்திக்கொள்ளும் இசைக் கலைஞர்கள் ஆகியவையே இந்த இசையை உலகம் முழுக்க இருக்கும் மக்கள் கேட்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

கடந்த 2024ம் ஆண்டு, ஜனவரி மாதம் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதி ஒன்றிலிருந்து மூன்று 13 வயது சிறுமிகள், தென் கொரியா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோன்று, மகாராஷ்டிராவிலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சிலர் பிடிஎஸ் குழுவை நேரில் சந்திக்க விரும்பி கொரியாவுக்கு செல்ல முயன்றனர். இந்திய பெண்கள் கொரியன் பாப் பாடல்களுக்கு மட்டுமல்லாமல் அதை பாடிய ‘ஐடல்களையும்’ (கே பாப் இசைக்குழுவை சேர்ந்தவர்களை ஐடல்கள் என்றே அழைக்கின்றனர்) அதிகமாக நேசிப்பதே சில சமயங்களில் பிரச்னையாக உள்ளது.

இந்தியாவில் கொரியன் பாப் இசையின் வளர்ச்சி குறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் எழுதியுள்ள செய்தியில், முதன்முதலாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தான் இது பரவத்தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டுகளில் ரெவெல்யூஷன் பீப்பிள்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு மணிப்பூரில் இந்தி மொழிப்படங்களை தடை செய்தது. அப்பொழுது அங்கிருந்த மக்கள் கொரிய இசையின் பக்கம் திரும்பியதாகவும் அது தெரிவிக்கிறது. அன்று தொடங்கி கொரிய கலாசாரம் இந்தியாவில் பரவி வருகிறது.

கொரிய உணவுகள்

கொரிய உணவுகள்

பட மூலாதாரம், samrat

தேக்பொக்கி, ராம்யோன், கிம்ச்சி ஆகிய கொரிய உணவுகளுக்கு இந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரிய தொடர்கள் தான். அதில் பெரும்பாலான காட்சிகளில் கதாநாயகனும் கதாநாயகியும் இணைந்து பேசும்பொழுது அவர்கள் உணவு அருந்துவது போல தான் இடம்பெறும். இதுவே கொரிய உணவுகளுக்கு மறைமுகமான விளம்பரமாக இருக்கின்றது.

நாட்டின் முக்கிய நகரங்களில் கொரிய உணவகங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவது, மக்களிடையே இந்த உணவுமுறைக்கு இருக்கும் வரவேற்பை நமக்கு எடுத்துரைக்கிறது. இந்தியாவில் கொரியன் ராம்யோன்களை ஷின், சம்யாங் போன்ற கொரிய நிறுவனங்கள் தான் விற்பனை செய்துவந்தனர்.

ஆனால், தற்பொழுது நார் போன்ற உலகளாவிய நிறுவனங்களும் கொரிய சுவையுடைய ராம்யோன்களை உருவாக்குகின்றன. நெட்ஃபிளிக்ஸ் ஸ்குவிட் கேம் 2 உடன் இணைந்து நார் நிறுவனமும் கூட்டாக விளம்பரப்படுத்தியது. மேலும் சோஜு எனப்படும் ஒரு வகை மதுபானமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

கொரியாவின் ஃபிரைடு சிக்கன்

பட மூலாதாரம், samrat

கொரியன் பியூட்டி

‘கிளாஸ் ஸ்கின்’, இது தான் இன்றைய தலைமுறையினர் விரும்பும் சரும பராமரிப்பு முறை. சமூக வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையிலான இன்ஃபுளூயன்சர்கள் இந்த கொரியன் அழகுக்கலை பொருட்களை தான் அதிகம் விளம்பரப்படுத்துகின்றனர்.

இதற்கும் கொரிய தொடர்களே காரணம். ஏனெனில், அதில் வரும் கதாப்பாத்திரங்களின் சருமம் மிகவும் பொலிவுடனும், பருக்கள் இன்றி, பளபளவென கண்ணாடியைப் போன்று காட்சியளிக்கும். இதைத் தானும் அடைய வேண்டும் என்பதற்காகவே மக்கள் கொரிய அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இதை மட்டும் ஒரு காரணமாக சொல்ல முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் இந்த சருமப் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் கலவைகளைப் பற்றிய புரிதலும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், சிலர் இதை தவறாகவும் பயன்படுத்துகின்றனர். தவறான முன்னுதாரணமாக பலர் செயல்படுகின்றனர். போலியான பொருட்களும் சந்தையில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ‘பியூட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ எனப்படும் அழகுக்கான கோட்பாடுகளை வகுப்பதாகவும் இது உள்ளது என்ற விமர்சனமும் இருக்கிறது.

ஒவ்வொரு நிலப்பரப்புக்கு ஏற்ப அங்கு வாழும் மக்களின் நிறம், எடை என அனைத்தும் மாறுபடும் என்ற நிலையில் அனைவரும் ஒரே மாதிரியான சருமத்தைப் பெறுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே. கொரிய அழகு சாதன நிறுவனமான Velymonkeys, தங்களுடைய பொருட்களை இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான நைக்கா மூலமாக விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தின் வருமானம் 2.3 பில்லியன் வொன் இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 11 பில்லியன் வொன் ஆக அதிகரித்துள்ளதாக கொரியன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், மோர்டர் இண்டெலிஜன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021- 2026 ஆண்டுகளில் கொரியன் அழகுக்கலை பொருட்களின் விற்பனை ஒவ்வொரு ஆணடுக்கும் 9.4% அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கொரிய கலாசாரம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், கொரிய ரசிகர் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளதா என்ற கேள்விக்கு,”நான் இதற்காக பெரிதாக செலவு ஏதும் செய்வதில்லை. கொரிய அரசாங்கம் இலவசமாகவே எனக்கு அடிப்படை கொரிய மொழியை கற்றுக்கொடுத்தது. அதுமட்டுமன்றி, கார்னிவல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பெரும்பாலும் அனுமதி இலவசமாகவே உள்ளது. அதனால் தான் அதிகமானோர் இதை பயில்கின்றனர், இதுவே அந்த அரசின் உத்தியாக உள்ளது, அதேபோல, விலையுயர்ந்த கொரிய பொருட்களை இங்கே குறைந்த விலையிலேயே வாங்க முடியும்,” என்கிறார் ஆலியா.

கொரிய மொழியைக் கற்றுக்கொடுப்பதில், அதன் கலாசாரத்தை உலகளவில் பரப்ப கொரியா முயற்சித்து வரும் நிலையில், கலாசாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அரசு நடத்தி வருகிறது. இதற்காக கொரியன் கலாசார மையம் ஒன்று இந்தியாவில் (டெல்லி) நிறுவப்பட்டுள்ளது. இங்கு கொரிய மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியா மற்றும் கொரியா நிறுவனங்கள் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதால் கொரிய மொழி பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட வேலைகள் உள்ளன. மேலும், கொரிய பன்னாட்டு நிறுவனங்களான சாம்சங், ஹூண்டாய் போன்றவை இந்தியாவில் வலுவாக உள்ள நிலையில், நாடுகளுக்கு இடையேயான இடைவெளியை சரிசெய்ய, கொரிய மொழி பேசுபவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

அதேபோல, தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்தியாவின் கலாசாரத்தை பரப்பும் முயற்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC