SOURCE :- INDIAN EXPRESS
11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டிகள் கடந்த அக்டோபர் 18 முதல் தொடங்கி நடைபெற்றது. டிசம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்த இந்தத் தொடரில், பாட்னா பைரேட்ஸ் அணியை 32 – 23 என்கிற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது. புரோ கபடியின் 5-வது சீசனான 2017 ஆம் ஆண்டில் களம் கண்ட தமிழ் தலைவாஸ், எல்லா சீசன்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுவும் கடைசி 5 இடங்களுக்குள் தான் தொடரை முடித்து வந்தது. ஆனால், 2022-ல் நடந்த 9-வது சீசனில் பழைய கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
அந்த சீசனில் டாப் வீரரான பவன் செஹ்ராவத் தொடக்க ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலே காயம் காரணமாக வெளியேறி, தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார். இதன்பிறகு முக்கிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் வெற்றி மேல் வெற்றிகளை ருசித்து தொடரில் விறுவிறுவென முன்னேறியது. அரைஇறுதிக்கு முன்னேறிய அணி இறுதிப் போட்டிக்கும் சென்று மேலும் ஒரு வரலாறுச் சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் தோல்வி பெரும் சரிவு கொடுத்தது.
இந்த தோல்வியின் வடுக்கள் அடுத்த சீசனிலும் தொடர்ந்தது. 22 போட்டிகளில் களமாடிய தமிழ் தலைவாஸ் 9 வெற்றிகள், 13 தோல்விகளுடன் பிளே-ஆப்க்கு தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த சூழலில், 11-வது சீசனில் அணியில் புதிய வீரர்கள், அவர்களுக்கு புத்துயிர் கொடுக்க புதிய பயிற்சியாளர்கள் என புதிய கட்டமைப்புடன் களமாடியது தமிழ் தலைவாஸ். அணிகள் பொதுவாக தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் என்கிற பதவிகள் அடிப்படையில் நியமனம் செய்யும். ஆனால், இந்த தொடர் வரலாற்றில் முதன்முறையாக, அணியை மேம்படுத்தவும், கூட்டாக வழிநடத்தவும் இரட்டை பயிற்சியாளர் முறையை தமிழ் தலைவாஸ் அணி தேர்வு செய்தது. அதன்படி, தலைமைப் பயிற்சியாளராக உதய குமாரையும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனையும் நியமித்தது.
ஆனாலும், இந்த அதிரடி மாற்றங்கள் தமிழ் தலைவாசுக்கு கை கொடுக்கவில்லை. கடந்த சீசனைப் போல் சிறப்பான ஆரம்ப வெற்றிகளைப் பெற்றாலும் அடுத்தடுத்து அவர்கள் பெற்ற தோல்விகள் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் போவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. 22 போட்டிகளில் ஆடிய தமிழ் தலைவாஸ் 8 வெற்றி, 13 தோல்வி மற்றும் ஒரு டிரா என 50 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தது. அணி பெரிய அளவில் சோபிக்காத நிலையில், இரண்டு பயிற்சியாளர்களையும் கழற்றி விட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவுகளுக்கான காரணங்கள் குறித்தும், அடுத்தடுத்து அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளது என்றும், 12-வது சீசனில் களமாட அணி நிர்வாகம் செய்யவிருக்கும் முக்கிய கட்டமைப்புகள் குறித்தும் நாம்மிடம் பகிர்ந்துள்ளார் சி.இ.ஓ சுஷேன் வசிஷ்த்.
“உதயகுமார் மற்றும் தர்மராஜ் சேரலாதன் இருவரும் அணிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளதால், இது மிகவும் கடினமான முடிவாகும். இருப்பினும், சீசன் 12-ஐ எதிர்நோக்கும்போது, நாம் விரும்பும் விளைவுகளை அடைய ஒரு புதிய அணுகுமுறை அவசியம் என்பது தெளிவாகிறது. வரவிருக்கும் சவால்களுக்கு குழு நன்கு தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், புதிய உத்திகளில் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம் பருவம்.” தமிழ் தலைவாஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுஷேன் வசிஷ்த் தெரிவித்தார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS