SOURCE :- INDIAN EXPRESS
கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று காஞ்சிபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எழிலரசன். இவர் காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தி,மு,க ஆட்சியில் இத்தகைய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மை சரிபார்ப்பு
இது தொடர்பாக நியூஸ் மீட்டர் இணைய பக்கம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், உண்மைத் தன்மையை கண்டறிய, கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி விகடன் ஊடகம் இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் வந்திருந்தார். தேரடிப் பகுதியில் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் செய்வதற்காக, திமுக-வினர் அனுமதி பெற்றிருந்தனர். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் காஞ்சிபுரம் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காஞ்சிபுரம் வந்திருந்தார்.
அப்போது, பன்னீர் செல்வம் தேரடிப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். அச்சமயம், அங்கே திரண்டிருந்த திமுக-வினர், கொடிகளை உயர்த்திப் பிடித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் வரும்போது கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டாம் என்றும் இதனால் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படும் என திமுக-வினரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதைக் கண்டதும் கோபம் அடைந்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், ஆய்வாளர் சுரேஷ் சண்முகத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் ஆய்வாளரை திட்டினார். நீண்ட நேரத்திற்கு பிறகு பிரச்சினை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, காவல் துறையினரை மிரட்டிய எம்எல்ஏ எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காஞ்சிபுரம் காவல் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை மாலை மலர் ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், வைரலாகும் வீடியோவுடன் பாலிமர் செய்தி ஊடகமும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது என்று தெரிகிறது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், தேடல் முடிவில் தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பழைய நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/flying-plate-from-space-742174
SOURCE : TAMIL INDIAN EXPRESS