SOURCE :- BBC NEWS

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

‘உச்சம் தொட்டது தங்கம் விலை’, ‘வரலாறு காணாத விலையேற்றம்’ என்ற செய்திகளைக் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பார்த்து வந்திருப்பீர்கள்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஒரு கிராம் 8, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று (ஏப்ரல் 22) கிராமுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 9, 290 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். இது உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி தங்கத்தின் விலையிலும் நிலையற்ற தன்மையை உருவாக்கியது.

ஏப்ரல் 4 ஆம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 110 ரூபாய் அளவு சரிவு ஏற்பட்டது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் புதிய உச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராம் 8,945 என விற்கப்பட்டது. கடந்த 19 ஆம் தேதியும் இந்த விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் விலை உயர்வு தொடங்கியது. 22 ஆம் தேதியன்று ஒரேநாளில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது.

அதாவது, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து 9,290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்தவகையில், 22 ஆம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது 74,320 ரூபாயாக உள்ளது.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

“5 மாதங்களில் 4 ஆயிரம் ரூபாய் உயர்வு”

“இப்படியொரு விலையேற்றத்தை தான் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறுகிறார், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசிக்கும் விஜயலட்சுமி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கிராம் தங்கத்தை 5500 ரூபாய் என்ற அளவில் சில சவரன்களை வாங்கினேன். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துவிட்டது” எனக் கூறுகிறார்.

“2004 ஆம் ஆண்டில் என்னுடைய திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது நான்காயிரம் ரூபாயாக இருந்தது. கடந்த சில மாதங்களில் ஏழை எளிய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டது” எனவும் விஜயலட்சுமி தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் 22 காரட் அளவுள்ள ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது 10,800 ரூபாயாக இருந்தது. அதுவே 2019 ஆம் ஆண்டில் 31,560 ரூபாயாக உயர்ந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் (2024) 56,800 ரூபாயாக அதிகரித்தது. தற்போது ஒரு சவரன் 74 ஆயிரம் ரூபாயைக் கடந்துவிட்டது.

அதாவது, ஒரே ஆண்டில் 27 சதவீதத்துக்கு மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தங்கத்தின் விலை உயர்வை நேர்மறையான (positive) ஒன்றாக பார்ப்பதாகக் கூறுகிறார், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தங்கத்தின் மீது முதலீடு செய்கிறவர்களை ஊக்குவிக்கும் விஷயமாக இது அமைந்துள்ளது. அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த விலை உயர்வு அமைந்துள்ளது” எனக் கூறுகிறார்.

ஆனால், இதனை மறுத்துப் பேசும் விஜயலட்சுமி, “முன்பு நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு வைரங்களை வாங்காமல் தவிர்த்தார்களோ, அதேபோல தங்கத்தையும் வாங்காமல் தவிர்க்கவே நினைப்பார்கள். அந்தளவுக்கு விலையேற்றம் உள்ளது” எனக் கூறுகிறார்.

தங்கம் விலை உயர்வதாக தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் மனம் வேதனைப்படுவதாகக் கூறிய விஜயலட்சுமி, “தங்கமாக சேர்த்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு மாறாக குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

தங்கம்

விலை அதிகரிக்க என்ன காரணம்?

அதேநேரம், விலை உயர்வுக்கான பின்னணி குறித்துப் பேசும் ஜெயந்திலால் சலானி, “அமெரிக்க அதிபரின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்புக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பல நாடுகளில் அமெரிக்க டாலர்கள் எல்லாம் தங்கமாக மாறி வருவதாக கூறும் ஜெயந்திலால் சலானி, “சீனா, வடகொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக அதிக வரிவிதிப்பில் ஈடுபட்டுள்ளன. தங்கத்தின் விலையேற்றத்துக்குப் பிரதான காரணமாக இது உள்ளது” என்கிறார்.

தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாகக் கூறுகிறார், முதலீட்டு ஆலோசகர் நாகப்பன்.

“பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில் அப்படியொரு நிலைமை இல்லை” என அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய நாகப்பன், “நகைக்கடை உரிமையாளர்களிடம் கேட்டால், விலை அதிகரித்துள்ளதால் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறுகின்றனர்” என்கிறார்.

உதாரணமாக, கடந்த ஆண்டு 10 கிராம் தங்கம் விற்றது என்றால் தற்போது எட்டு கிராம் மட்டுமே விற்பனை ஆவதாக கடை உரிமையாளர்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படும் நிலையற்ற தன்மையால் சில நாடுகள் தங்கத்தை வாங்குவதாகக் கூறும் நாகப்பன், “இதனால் ஏற்படும் சிக்கலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றனர்” எனக் கூறுகிறார்.

“டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதால், அதை வைத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் சில நாடுகள் தங்கமாக மாற்றிக் கொள்கின்றன. அதனால் விலை உயர்வதாகவும் இதைப் பார்க்கலாம்” எனவும் அவர் தெரிவித்தார்

தங்கம்

விலை குறைய வாய்ப்புள்ளதா?

“இந்த விலையேற்றம் அவ்வளவு எளிதில் குறைவதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறும் ஜெயந்திலால் சலானி, “சீனா போன்ற நாடுகள், டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. அதனால் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் முதலீட்டு ஆலோசகர் நாகப்பன், ” பல காலகட்டங்களில் தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வந்துள்ளது. விலை அதிகரிக்கிறது என்றால் குறையவே செய்யும்” எனக் கூறியவர், அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்.

“2003 ஆம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் தங்கம் விலை அதிகரித்தது. 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தங்கம் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டது. 2016 முதல் 2020 வரை அதிகரித்தது” எனவும் நாகப்பன் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

2021 முதல் 2023 வரை தங்கம் விலை குறைந்து அதன்பிறகு அதிகரித்ததாகக் கூறும் நாகப்பன், “வரும் காலங்களில் மிகக் குறைவான விலைக்கு தங்கம் விற்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், ஓரளவு விலை குறையும். அரிதான கனிமமாக இருப்பதாலும் மறுஉற்பத்தி செய்ய முடியாததாலும் விலை உயர்கிறது” என்கிறார்.

அதேநேரம், 22 காரட் தங்கத்தின் விலை கிராமின் விலை 9 ஆயிரத்தைக் கடந்துவிட்டதால், 18 காரட் தங்கத்தை வாங்குவது சிறந்த முதலீடாக இருக்கும் எனக் கூறுகிறார் ஜெயந்திலால் சலானி.

” 18 காரட் தங்கம் வாங்கும்போது சவரனுக்கு 15 ஆயிரம் வரை விலை குறைவு” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய முதலீட்டு ஆலோசகர் நாகப்பன், “22 காரட்டுக்குப் பதிலாக 18 காரட் தங்கத்துக்கு மாறுகின்றனர். எளிய குடும்பங்களில் திருமண நிகழ்வுகள் என்பது தங்கத்தைச் சுற்றியே வலை பின்னப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த நிலைமை மாறும்” என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU