SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், GurpreetChawla/RavinderRobin
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“இரவில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டபோது, எங்கள் உயிரே போய்விடும் போலிருந்தது. கூரையில் ஏறிப் பார்த்தபோது பக்கத்தில் இருந்த வயல்கள் எல்லாம் தீப்பிடித்திருந்தன. பிறகு நிலைமை மிக மோசமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அலறல்களைக் கூடக் கேட்டோம்.”
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தேர் கிராமத்தைச் சேர்ந்தவரான ரச்பால் சிங்கின் வார்த்தைகள் இவை. அவருடைய வீட்டின் மீது குண்டுவெடிப்பின் சிதறல்கள் விழுந்துள்ளன. அவருடைய வயல்களும் தீப்பிடித்துள்ளன.
“இரவில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் காலையில், எங்கள் முற்றத்திலும், அக்கம்பக்கத்தினரின் வீடுகளிலும் குண்டுகள் போன்ற பொருட்கள் கிடைத்தன.” என்கிறார் ரச்பால் சிங்
நேற்றைய இரவு, பஞ்சாபில் உள்ள மாவட்டங்களான அமிர்தசரஸ், பதிண்டா, குர்தாஸ்பூர் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்புகளின் சத்தம் கேட்டது மற்றும் காலையில் மர்மமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவை நிகழ்ந்ததால் பீதி நிலவும் சூழல் உள்ளது.
பாகிஸ்தானின் செயல்பாடுகள் இவை என்று கிராமத்தினர் கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், RavinderRobin
மே 6, 7 தேதிகளின் இடைப்பட்ட இரவு நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதன்பிறகு இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து, எல்லைப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் பயம் நிலவும் சூழல் ஆரம்பித்திருக்கிறது.
பஞ்சாபில் உள்ள கிராமத்தினர் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், RavinderRobin
குர்தாஸ்பூர் நிர்வாகம் , அடுத்த ஆணைகள் வரும்வரை இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை மின்சாரத்தைத் துண்டித்து வைத்துள்ளது.
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜேதுவால் கிராமத்தில் ஏவுகணை போன்ற பொருட்களைப் பார்த்ததாகவும், அது தங்கள் கிராமத்தில் பீதியை உருவாக்கியதாகவும் சிலர் கூறினர்.
இரவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டபோது தான் கண் விழித்து, கூரை மீதேறிப் பார்த்ததாக ஜேதுவாலின் தில்தார் சிங் குறிப்பிடுகிறார்.
“காலையில் கிராமத்தில் ஏவுகணை விழுந்த வயல் பகுதிகளில் ஒரே கும்பலும் குழப்பமுமாகத்தான் இருந்தது. நாங்களும் போய் பார்த்தோம். அடுத்து காவல்துறை நிர்வாகம் வந்து பார்த்தது. அவற்றில் சில பகுதிகள் மக்களின் வீடுகளில் விழுந்தன. காவல்துறையினர் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்றுவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
இன்னொரு கிராமத்தினரான, லவ்ப்ரீத் சிங், “ஒரு மணியளவில் பயங்கரமான சத்தத்தைக் கேட்டேன். அதன்பிறகு நான் கூரையின் மீது ஏறிப் பார்த்தேன். அப்போது நாங்கள் விமானம் போல எதையோ பார்த்தோம். கொஞ்சம் வெளிச்சமும் தெரிந்தது. அதற்கு சில நிமிடங்கள் கழித்து குண்டு வெடித்தது போல சத்தமும் கேட்டோம்” என்றார்.
“அது எங்களுக்கு அதிகமான பயத்தைக் கொடுத்தது. காலையில் வயலுக்கு வந்து நாங்கள் பார்த்தபோது ஏவுகணை போன்ற , 6-7 அடி நீளப் பொருள் ஒன்று எங்கள் வயலில் விழுந்து கிடந்தது”.

பட மூலாதாரம், RavinderRobin
ரச்பால் சிங், தான் வேலைக்குச் சென்று வந்த பிறகு தூங்கிக் கொண்டிருந்ததாகவும் சுமார் 1:20 மணியளவில் பெரும் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் கூறுகிறார்.
“என் அண்ணன்கள் காலையில் எழுந்து வெளியே சென்று பார்த்தபோது எங்கள் முற்றத்திலும், பக்கத்து வீட்டுக்காரர்களின் வீடுகளிலும் சில பொருட்கள் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்திருக்கின்றனர்.”
“பிறகு பஞ்சாப் காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் வந்து அதைப் பார்த்தார்கள். குண்டு வெடித்தபோது என் உயிரே போய்விட்டது போலத்தான் உணர்ந்தேன். எங்களுக்கு போர் வேண்டாம்” என்கிறார் ரச்பால் சிங்.

மோகா மாவட்டத்தில் உள்ள சந்துவான் வாலா கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையின் மேல் வானத்தில் இருந்து ஒரு பெரிய உலோகப் பொருள் விழுந்ததை அடுத்து அரசு நிர்வாகம் வேகமாக இந்த இடத்துக்கு சென்றது என்கிறார் பிபிசி செய்தியாளர் சுரிந்தர் மன்
இந்த மர்மமான பொருளை மாவட்ட நிர்வாகம் தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதேபோல் இதே மாவட்டத்தின் தல்வாண்டி பாங்கேரியா கிராமத்தின் அருகே உள்ள வயல்களில் ஒரு கனமான உலோகப் பொருள் விழுந்துள்ளது.
ஆனால் இவை என்ன மாதிரியான பொருட்கள் இவை என்பதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Gurpreet Chawla
இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறது?
மே 8 -ஆம் தேதி தேதிகளில் பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்கள் போன்றவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள ராணுவ தளங்களை தாக்க முயற்சி செய்தது என்று இந்திய அரசு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.
”பாகிஸ்தான் இந்திய எல்லையில் வான்வெளியில் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச எல்லையில் 36 இடங்களில் 300 – 400 டிரோன்களைப் பயன்படுத்தி ஊடுருவ பாகிஸ்தான் முயற்சித்தது.
பாகிஸ்தான் பயன்படுத்திய டிரோன்களை இந்தியா சுட்டுவீழ்த்தியுள்ளது. இதன் மிச்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஏவுகணைத் தாக்குதலின்போதும் ஷெல் தாக்குதலின்போதும் பாகிஸ்தான் சிவில் விமானங்களுக்கு வான்வெளியை மூடவில்லை. பொதுமக்கள் பயணிக்கும் சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது” என இந்தியா தெரிவித்துள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU