SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை இலங்கைக்குச் செல்ல உள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும்.
தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோதி இலங்கைக்கு செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் இந்தியப் பிரதமர் மோதி.
ஜனாதிபதி அநுர பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டார்.
இந்தியா – இலங்கை உறவுகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு உள்ளது.
இலங்கைக்கு பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மத மற்றும் கலாசார ரீதியிலான உறவுகள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
சமீபத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டால், 1960 களில் இருந்து 65 ஆண்டுகளில் 8 இந்தியப் பிரதமர்கள் இந்தத் தீவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
1962 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைக்குப் பயணம் செய்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையிலான சிறந்த உறவுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது.
கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்ட விதம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கும் , இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.
1979 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் மொராஜி தேசாயும்,பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.
ராணுவ அணிவகுப்பின் போது நடந்த தாக்குதல் சம்பவம், ராஜீவ் காந்தியின் இலங்கைப் பயணம் வரலாற்றில் இடம்பெறக் காரணமானது.
1991 இல் – நரசிம்ம ராவ், 6வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், 1998 இல், இந்தியப் பிரதமர் வாஜ்பாய்10வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணம் செய்தார்.
அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு பயணம் செய்தார்.
நான்கு இந்தியப் பிரதமர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள்
நேரு – கொத்தலாவல ஒப்பந்தம் – 1954
இந்திய அரசியலமைப்புப் பிரிவு 8 இன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியில் (ஜனவரி 26, 1950) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில் இலங்கையில் வாழ்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை தங்க வைப்பதற்கு போதிய இடம் இல்லை
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறுகியதாக இருந்ததால், 1949 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிய இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இந்த விஷயத்தில் தீர்வு பெறுவதற்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.
இது ஒரு பெரிய சிக்கலாகத் தொடர்ந்தது. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருந்தனர்.
அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில், 1954 அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது.
குடியுரிமைக்காக காத்திருந்த மக்கள் இலங்கை குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் வரை இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று இலங்கை தூதுக்குழு கருதியது.
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் இந்திய குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியக் குழு ஒப்புக்கொண்டது.
இலங்கைக் குழுவிற்கு அப்போதைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தலைமை தாங்கினார்.
இந்தியக் குழுவிற்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.
இரு பிரதமர்களும் 1954 அக்டோபர் 10 அன்று டெல்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தம் பிரச்னையை முழுமையாக தீர்க்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கச்சத்தீவு ஒப்பந்தம்
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க – இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஜூன் 26, 1974 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
1976 ஆம் ஆண்டு இந்திய-இலங்கைத் தலைவர்கள் கையெழுத்திட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கைக்குள் சுதந்திரமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அதில் சட்டவிரோதமாக நுழைந்து உள்ளூர் மக்களுடன் இணைந்தவர்களுடன் சேர்த்து, லட்சக்கணக்கானதாக இருந்தது.
இந்த தேசிய சிக்கல் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டதாக குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, 1964 அக்டோபர் 30 ஆம் தேதி முடிவடைந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் நாடற்றவர்களின் எண்ணிக்கை 30.10.1964 நிலவரப்படி, 975,000 என மதிப்பிடப்பட்டது.
பின்னர் 300,000 நபர்களுக்கு இலங்கை குடியுரிமையும் 525,000 நபர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்க இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில் , மீதமுள்ள 150,000 மக்களை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இலங்கைக்கான எண்ணிக்கை 375,000 ஆகவும், இந்தியாவிற்கான எண்ணிக்கை 600,000 ஆகவும் மாற்றப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம்
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஜூலை 29 அன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில், நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதற்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு திருப்புமுனையாக இது கருதப்பட்டது.
அனைத்து மிதவாத, ஆயுத குழு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீதும் விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை அறிவித்து அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சூழலில், அமிர்தலிங்கம், சிவசித்தம்பரம் மற்றும் சம்பந்தன் போன்ற மிதவாத தமிழ்த் தலைவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், அதிகரித்து வரும் ராணுவ சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் தமிழ் தேசியப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை எட்டுவதே அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தன் போன்ற தலைவர்களின் முக்கிய முயற்சியாக இருந்தது.
இதற்கிடையில், பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் தொடங்கியது. போர்நிறுத்த அடையாளமாக புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்ததன் மூலம், நாட்டிற்கு வெளியே இருந்த தமிழ் தலைவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதமர் மோதியின் ஆட்சிக்காலம்
சமீபத்தில், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ் செயல்படும் பிரதமர் மோதியின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போது இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கியது.
பின்னர், 2022-ஆம் ஆண்டில், இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அதற்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவைப் பெற இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புடைய உதவியை வழங்கியது.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்கு பயணம்

பட மூலாதாரம், Getty Images
ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்கு பிரதமர் மோதி பயணம் செய்தார். தாக்குதலுக்கு பிறகு, இலங்கைக்கு முதல் பயணம் மேற்கொண்ட ஒரு நாட்டின் தலைவராக மோதி விளங்கினார்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண அறிவுரைகளை வெளியிட்டிருந்த சூழலில், இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.
2017 சர்வதேச வெசாக் விழாவின் விருந்தினர்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான தொடர்பு பௌத்தம் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்திய அரசு மற்றும் சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக பௌத்தம் மாறிவிட்டது என்றும், அது சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட டிக்கோயா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
நரேந்திர மோதியின் முதல் இலங்கைப் பயணம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
மோதி இந்தியப் பிரதமாக தேர்வான பிறகு, 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடைசியாக இலங்கைக்கு பயணம் செய்தது சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு.
1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தலைவர்கள் குறைவாகவே இலங்கைக்குப் பயணம் செய்தனர்.
முன்னதாக, 2008 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மட்டுமே இலங்கைக்குச் சென்றார்.
2015 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோதி, அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மகா போதியையும் வழிபட்டார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு முதல் முறையாக பயணம் செய்தார் என்ற வரலாற்றுப் பெருமையும் கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுடன் கட்டப்பட்ட வீடுகளை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஒப்படைக்கும் விழாவில், அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கலந்து கொண்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC