SOURCE :- BBC NEWS
இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருந்தனர்.
இந்த நிலையில், அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய நாள் முதல் இன்று வரை எதிர்நோக்கும் பிரதான பிரச்னையாக அரிசி தட்டுப்பாட்டு பிரச்னை காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தை விடவும், அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி காலத்தில் அரிசி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய 2022ம் ஆண்டுக்கு பின்னர், தற்போது தொடர்ச்சியாக அரிசி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
உள்நாட்டு அரிசி விநியோகம் போதுமானதாக இல்லாததை அடுத்து, அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் நேற்றைய தினம் (டிசம்பர் 10) வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு வழங்கப்பட்டிருந்த அனுமதி நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளதுடன், மீண்டும் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாது என வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையினால், தாம் அரிசி விற்பனையை தவிர்த்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
அரிசிக்கான நிர்ணய விலை விபரம்
நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கான மொத்த விற்பனை விலை 225 ரூபா என்பதுடன், அதன் சில்லறை விலையாக 230 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பச்சரிசிக்கான மொத்த விற்பனை விலை 215 ரூபா என்பதுடன், அதன் சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கான மொத்த விற்பனை விலை 220 ரூபாவாகும்.
சம்பா அரிசிக்கான மொத்த விற்பனை விலை 235 ரூபா என்பதுடன், அதன் சில்லறை விலையாக 240 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரி சம்பா ஒரு கிலோ கிராமிற்கான மொத்த விற்பனை விலையாக 225 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சில்லறை விலையாக 260 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலைகளின் அடிப்படையில் தமக்கு அரிசி விற்பனையில் ஈடுபட முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிசி தட்டுப்பாட்டு பிரச்னைக்கான தீர்வை விரைவில் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மலையகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
”பொங்கல் காலத்தில் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களுக்காக நாங்கள் அரிசியை கொண்டு வந்து கொடுக்க போனால், அரசாங்கம் 230 ரூபாவிற்கு கொடுக்க சொல்கின்றது. அந்த விலைக்கு எங்களுக்கு அரிசி கிடைப்பதில்லை. இதனால், மக்களை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம்தான் நல்ல பதிலை சொல்ல வேண்டும். கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ அரிசி 290 ரூபா என சொல்கின்றார்கள்.” என்கிறார் மலையகத்தில் போரட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர்
பொங்கலுக்கு அரிசி வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
” கொழும்பில் அரிசி ஏற்றினால், இங்கு வந்து இறக்கும் போது 300 ரூபாவாகிவிடும். சாதாரணமாக 10 ரூபா வைத்து, 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால், அந்த நிலைமை இங்கு இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி, ஒரு ரூபா அதிகமாக விற்பனை செய்தால், அபராதம் செலுத்த வேண்டும். அப்படியென்றால், அரிசியை விற்பதா? இல்லை நிறுத்துவதா?” என்கிறார் மற்றொரு வர்த்தகர்.
அரசு கூறுவது என்ன?
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் தேதி வரையான காலத்திற்குள் 160,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.
”ஜனவரி 09ம் தேதி வரை 160,000 மெற்றிக் தொன் அரிசி கொண்டு வந்துள்ளோம். போதுமானளவு அரிசி சந்தையில் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலைகள் குறைந்துள்ளன.” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி நள்ளிரவு வரை வழங்கப்பட்ட அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இனி அரிசி இறக்குமதிக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி வகைகளின் முதலாவது தொகையை இந்த வாரம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சுங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி விடுவிக்கப்படும் பட்சத்தில், இந்த வாரத்தில் சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU