SOURCE :- INDIAN EXPRESS
தமிழ் சினிமாவில் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் இருக்கும் தெருக்குரல் அறிவு – கல்பனா அம்பேத்கர் திருமணம் இளையராஜா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில், இடம்பெற்ற உரிமையை மீட்போம் பாடல் மூலம் தமழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனுஷ், ஜீவா உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள தெருக்குரல் அறிவு, தொடர்ந்து திரைபபடங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் இவர் பாடி நடித்த எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடல் இன்றுவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
இந்த பாடலின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற, அறிவு தற்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவிலும் பிஸியான பாடகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான வேட்டையன், அமரன், உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியிருந்த அறிவு, கடந்த 2022-ம் ஆண்டு தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். கல்பனா அம்பேத்கர் என்ற அந்த பெண் மார்கழி மக்களிசை கலைத்திருவிழாவின் ஒருங்கினைப்பாளராக இருந்து வந்தார்.
இதனிடையே தெருக்குரல் அறிவு – கல்பனா அம்பேத்கர் ஜோடி திருமணம் இன்று சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இளையராஜா ஸ்டுடியோவில் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு இளையராஜா தலைமை தாங்கியுள்ளார். மேலும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்தித்த ஜோடி வாழ்த்து பெற்றனர்.
இந்த திருமணம் மற்றும் திருமாவளவனை சந்தித்தபோது தெருக்குரல் அறிவு பாடிய அம்பேத்கர் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள’, ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS