SOURCE :- BBC NEWS
37 நிமிடங்களுக்கு முன்னர்
காஸாவில் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன், இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்கு ஈடாக பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவும் மத்தியஸ்தரான கத்தாரும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், அக்டோபர் 7-ஆம் தேதி , 2023-ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம், 15 மாத மோதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இரான் மற்றும் அரபு நாடுகளின் ஊடகங்களில் இந்த போர் ஒப்பந்தம் குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது.
சில இரானிய ஊடக அறிக்கைகளில், இது பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் வெற்றியாக முன்வைக்கப்படுகிறது.
அதே சமயம், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்காவிட்டால் ஒருவேளை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் அரபு நாடுகளின் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
“இஸ்ரேலுக்கு மிகப்பெரிய தோல்வி”
ஜனவரி 15-ஆம் தேதியன்று இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்பாட்டை எட்டியதாக கத்தார் அறிவித்தது.
இந்த ஒப்பந்தம் ஜனவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களை உள்ளடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இரானிய ஊடகங்கள் விரிவான செய்திகளையும் பகுப்பாய்வுகளையும் வெளியிட்டுள்ளன.
ஜனவரி 15-ஆம் தேதி மாலை, இரானிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட தலைப்புச் செய்தியில், போர் நிறுத்தத்தை இஸ்ரேலின் ‘மிகப்பெரிய தோல்வி’ என்று விவரித்தது.
இந்தச் செய்தியில் இஸ்ரேல் தனது அனைத்து வளங்களையும் போரில் முதலீடு செய்தும் ஹமாஸை அழிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.
அதே சமயம், போர் நிறுத்தம் இரானின் ‘எதிர்ப்பு முன்னணி’க்கு கிடைத்த வெற்றி என ஆய்வாளர் ஒருவர் வர்ணித்தார்.
ஜனவரி 16-ஆம் தேதி, இரானிய வானொலி மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் பாலத்தீனம், லெபனான், ஏமன், இராக், துருக்கி மற்றும் பிற பிராந்திய நாடுகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவித்தன.
ஹமாஸின் மூத்த உறுப்பினரான கலீல் அல்-ஹய்யா, ஹமாஸ் குழுவிற்கு உதவிய இரானின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததாக ஒளிபரப்பு ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு, அர்மான்-இ-இம்ரோஸ் என்ற ரிபார்மிஸ்ட் செய்தித்தாள் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அதில், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் மிரட்டியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக செய்தித்தாள் தெரிவிக்கிறது.
ட்ரம்பின் அதிபர் பதவி இஸ்ரேலுக்கு சவாலாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ‘இஸ்ரேலின் உத்திக்கு கிடைத்த தோல்வி ‘ மற்றும் ‘அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிந்தைய காலத்தின் ஆரம்பம்’ என்றும் , இதில் இஸ்ரேல் பலவீனமாகவும் பயனற்றதாகவும் உள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் இருவரை மேற்கோள் காட்டி, அரசு நாளிதழான ‘ இரான் ‘தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “மண்டியிட்டார்” என்று அரசு நடத்தும் செய்தித்தாள் ஜாம் -ஈ-ஜாம் குறிப்பிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து டெஹ்ரான் நகராட்சியின் செய்தித்தாள் ஹம்ஷாஹ்ரியும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது.
நெதன்யாகுவுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை மற்றும் இஸ்ரேலிய ராணுவத்தை ஹமாஸ் தோற்கடித்ததாகக் கூறப்பட்டதன் காரணமாக, இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை “ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்” இருப்பதாகவும் ஹம்ஷாஹ்ரி தெரிவித்துள்ளது.
“ஹமாஸ் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்று பழமைவாத நாளிதழான ஃபர்ஹிக்தேகன் கூறியது.
2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை “அதிர்ச்சியூட்டும் வெற்றி” என்று குட்ஸ் செய்தித்தாள் விவரித்துள்ளது.
இதற்கிடையில், நெதன்யாகுவையும் இஸ்ரேலிய அமைச்சரவையையும் “தோற்கடிக்கப்பட்ட கொலையாளிகள்” என்று வதன்-இ-இம்ரோஸ் அழைத்துள்ளது.
சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சிலுடன் (SNSC) இணைந்த நூர் நியூஸ் , போர் நிறுத்தத்தை குறிப்பிடத்தக்க வெற்றியாக விவரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் உத்திகளுக்கு ஒரு பெரிய தோல்வியைக் குறிக்கிறது என்றும் அது கூறியுள்ளது.
அதேபோன்று, மஷ்ரெக் எனும் செய்தி இணையதளம், இந்த ஒப்பந்தத்தை “இஸ்ரேலுக்கு அவமானகரமான தோல்வி” என்று விவரித்தது.
சமூக வலைதளங்களில் என்ன சொல்லப்படுகிறது?
இரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் பிராந்திய வலையமைப்பான ‘ஆக்ஸிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸின்’ ஆதரவாளர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டாடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள் இதை ‘ஹமாஸின் வெற்றி ‘ என்றும் இரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டணி முயற்சியின் விளைவாகவும் பார்க்கின்றனர்.
சமூக ஊடகப் பதிவுகளில் பலரும் காஸாவில் நடந்த ‘இஸ்ரேலிய குற்றங்களை’ முன்னிலைப்படுத்தி கருத்துகளைப் பதிவிடுகின்றனர், ‘எதிர்ப்பின்’ சின்னமாக பாலத்தீன லெபனான் மற்றும் இரானிய ‘தியாகிகளை’ பலரும் நினைவு கூர்ந்தனர்.
“ஹமாஸ் ஒழிப்பு, பணயக்கைதிகள் திரும்புதல், வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புதல் போன்ற எதையும் இஸ்ரேல் அடையவில்லை, எனவே அவர்கள் போர்நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது” என்று இரான் சார்புடைய ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், மறுபுறம் டிரம்ப் ஆட்சியின் கீழ் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு அதிகரிக்கலாம் என்று பயந்து, ஹமாஸ் போர் நிறுத்தத்தை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவுதான் இந்த ஒப்பந்தம் என்று ஆட்சிக்கு எதிரான பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
“பாலத்தீனப் பெண்கள், குழந்தைகளின் மரணம் மற்றும் ஹெஸ்புலா, ஹமாஸ் மீதான பேரழிவுகளையும் தவிர” அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல் மூலம் ஹமாஸ் என்ன சாதித்தது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரபு ஊடகங்களில் டிரம்ப் பற்றிய விவாதம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் ‘செல்வாக்கு’ இல்லாமல் ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்காது என்று அரபுப் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் காஸா போர் நிறுத்தம் குறித்து சில விமர்சகர்கள் வாதிட்டனர்.
அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கத்திற்குள் அரசியல் பிளவுகளை உருவாக்கும் என்று மற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், யுத்தம் முழுமையாக முடிந்துவிட்டது என்று இந்த உடன்படிக்கையைப் புரிந்து கொள்ளலாமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
“இந்த ஒப்பந்தம் பல மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டிருக்கலாம், ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு தான் முக்கியத் தடையாக இருந்தது” என்று பாலத்தீனத் தலைவரும், இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜமால் ஜஹ்லாகா, லண்டனில் இருந்து வெளிவரும் அரேபிய செய்தித்தாள் அல்-குத்ஸ் அல்-அரபியில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் செல்வாக்கு காரணமாகவே நெதன்யாகு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஜஹல்கா வாதிட்டார்.
அது மட்டுமின்றி, “டிரம்ப் இஸ்ரேலின் அரசியல் வர்க்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இரானிய அணுசக்தித் திட்டம், சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்குதல், மேற்கு நாடுகளில் குடியேற்றங்களைச் சட்டப்பூர்வமாக்குதல், ஏமன் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல், சிரியாவில் துருக்கிய செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல், இராணுவத் துறையில் அமெரிக்க முதலீட்டை அதிகரித்தல் போன்ற முக்கிய விஷயங்களில் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் மூலோபாய ஒத்துழைப்பு” ஆகியவற்றை நெதன்யாகு எதிர்பார்க்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த பாலஸ்தீன சிந்தனையாளர் முனிர் ஷபிக் அல்-ஜசீராவின் இணையதளத்தில் இதேபோன்ற ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
“ராணுவத் தோல்வியைத் தவிர்க்க நெதன்யாகு தனது குறுகிய தனிப்பட்ட நலன்களை முன்வைத்தார்” என்றும் “டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் இல்லாமல், நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்,” என்றும் ஷபிக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், சிரியாவின் அரசாங்க தொலைக்காட்சியான அல்-காஹிரா நியூஸின் வலைத்தளமும், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முக்கிய காரணம் ‘சர்வதேச அழுத்தம்’ என்று கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக டிரம்பை காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.
“காஸாவில் போர்நிறுத்தம் என்பது சியோனிச வலதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு அரசியல் அடியாகும், ஏனெனில் அவர்கள் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பிற்கு அதிக விலை கொடுக்காமல் பணயக்கைதிகளை விடுவிக்க விரும்பினர்.”என்று அரபு அல்-அரபி அல்-ஜடித் செய்தித்தாளில் மொராக்கோ அரசியல் பார்வையாளர் முகமது அஹ்மத் பெனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்கை நியூஸ் அரேபியா இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானதாக இருக்கலாம் என்றும், எந்த ஒரு தவறான சம்பவமும் இந்த ஒப்பந்தத்திற்கு ‘பெரிய அச்சுறுத்தலாக’ அமையும் என்றும் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், “சர்வதேச நீதிமன்றங்களால் போர்க் குற்றங்களுக்காகத் தேடப்படும் நெதன்யாகுவின் அரசாங்கம், விரைவில் வீழ்ச்சியடைவதை வரும் நாட்களில் பார்ப்போம்” என்று மொராக்கோ கல்வியாளர் தாரிக் லிசோய் லண்டனை தளமாகக் கொண்ட ராய் அல்-யூம் என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU