SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Bamboophotolab/Instagram
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மே 25, இன்று தமிழ் நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.
மிஸ் இங்கிலாந்து 2024 பட்டத்தை வென்ற மில்லா மேகீ இந்தியாவில் நடைபெற்று வரும் மிஸ் வேர்ல்ட் 2025 என்ற உலக அழகிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக கூறியதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
24 வயது அவரான அவர் மே 7-ஆம் தேதி ஹைதராபாத்தை வந்தடைந்தார். மே 16-ஆம் தேதி அன்று உலக அழகிப் போட்டியில் இருந்து விலகி தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பினார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் அந்த போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லேட் க்ராண்ட் தற்போது பிரிட்டன் சார்பின் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார் என்று உலக அழகி போட்டி அமைப்பின் பிரதிநிதி உறுதி செய்துள்ளார்.
அந்த செய்தியின் படி “தி சன் என்ற பிரிட்டன் நாளேட்டுக்கு அளித்த அறிக்கை ஒன்றில், இந்த உலக அழகி போட்டியின் சூழலால் ஏமாற்றம் அடைந்ததாக மேகி தெரிவித்துள்ளார். மேலும் ‘ஒரு நோக்கத்திற்கு உதவும் அழகு’ (‘beauty with a purpose’) என்ற அவருடைய எதிர்பார்ப்புகளுடன் இந்த போட்டியின் சுற்றுச்சூழல் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், @missworld/instagram
“இந்த உலக அழகி போட்டி நடத்துவதற்காக நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுத்தர ஆண்களுடன் பழக வேண்டும் என்று கூறியது விளிம்பு நிலைக்கு தள்ளியது,” என்று தி சன் நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உலக அழகி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஜூலியா மோர்லே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “இந்த மாதத்தின் துவக்கத்தில் தன்னுடைய அம்மா உடல் நலக்கோளாறால் அவதியுற்று வருவதாகக் கூறி போட்டியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று கோரிக்கை வைத்தார் மில்லா மேகி.
அவரின் வேண்டுகோள்களுக்கு முன்னுரிமை அளித்து, அவரை அவருடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவர் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் நலன் குறித்து நாங்கள் அக்கறை காட்டினோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பிரிட்டன் பத்திரிக்கைகள் தவறான, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செய்திகள் வெளியிட்டு வருவது எங்களின் கவனத்திற்கு வந்தது. அதில் மில்லாவின் இந்திய போட்டி அனுபவம் குறித்து அவர் கூறியதாக தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அவர் எங்களுடன் தங்கியிருந்த நாட்களில் இருந்த யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டவை,” என்று கூறப்பட்டிருந்ததாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி
சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வாா்த்தைகளைக் கூறி பண மோசடி சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Dinamani
அந்த செய்தியின் படி, சென்னையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி, சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா்.
அதில் “நான் வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, சென்னையில் வசிக்கிறேன். என்னிடம் வாட்ஸ்ஆப் மூலம் சிலா் அறிமுகமாகி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசினா். மேலும் அவா்கள், என்னை பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்கும் இரு வாட்ஸ்ஆப் குழுக்களில் சோ்த்தனா்.
அதில் பலா் தான் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து, பல மடங்கு லாபம் பெற்றதாக தெரிவித்தனா். இதனால் எனக்கு அந்த நபா்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதன் விளைவாக நான் என்னிடமிருந்த ரூ. 6.58 கோடியை அந்த நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபா்கள், எனது தொடா்பை துண்டித்தனா். அப்போதுதான், நான் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது.
எனவே என்னிடம் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளாா்.

“இப்புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கேரளத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த மோசடியில் தொடா்புடையதாக கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீஜித் நாயா் (47), கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் சாலு (47), முகமது பா்விஸ் (44) ஆகியோரை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மூவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை வா்த்தக செயலி மூலம் ‘கிரிப்டோ’ கரன்சியாக இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்,” என்று தினமணி நாளிதழ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU