SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
அணியில் ஒரு சிறந்த கேப்டன் இருந்தாலே அந்த அணி சிறப்பாகச் செயல்படும். ஆனால், 4 சிறந்த கேப்டன்களோடு ஓர் அணி செயல்பட்டால் எதிரணியின் நிலைமை என்ன ஆகும்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா,டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒரே அணியில் முழு ஃபார்மில் விளையாடும்போது எதிரில் இருப்பது எந்த அணியாக இருந்தாலும் அதன் நிலைமை சற்று கவலைக்குரியதுதான்.
அந்த நிலைதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கும் ஏற்பட்டது.
தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான்
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மிரட்டலான ஃபார்முக்கு வந்துள்ளது. முதல் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை அணி.
ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி, ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய பிரமாண்ட வெற்றி முதலிடத்துக்கு மும்பையை உயர்த்தியது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் 1.24 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

இந்தத் தோல்வியோடு ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையயும் இழந்து 2வது அணியாக வெளியேறியது. இனி 8 அணிகளுக்குள் மட்டுமே போட்டி நடக்கிறது. இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் செல்ல உள்ளதால் அடுத்து வரும் ஆட்டம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.
கடந்த 2008 மற்றும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இது போலத் தொடர்ந்து 6 போட்டிகளில் இப்போதுதான் வெல்கிறது. அதுமட்டுமல்ல 2021, ஏப்ரல் 17ஆம் தேதிக்குப் பிறகு ஏறக்குறைய 3 சீசன்களுக்கு பின், மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 50வது லீக்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்குள் சுருட்டி, 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது.
மும்பை அணியைப் பொருத்தவரை 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டாலே பெரும்பாலும் தோற்றதில்லை. 200 ரன்களுக்கு மேல் சேர்த்து தொடர்ந்து 17வது முறையாக தோல்வியடையாமல் மும்பை அணியின் பயணம் நீள்கிறது.
ரோஹித்தின் அச்சுறுத்தும் ஃபார்ம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை அணியில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது ரோஹித் சர்மாவின் ஃபார்ம்தான். கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் எதிரணிகளுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்த சீசனில் ரோஹித் சர்மா தனது 3வது அரைசதத்தை நேற்று அடித்துள்ளார். 2020 ஐபிஎல் சீசனுக்கு பின் ரோஹித் சர்மா இதுபோல் 3 அரைசதங்களை அடித்தது இந்த சீசனில்தான்.
ரோஹித் சர்மா தொடக்க வீரராக இருந்து அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலே அடுத்து வரக்கூடிய சூர்யகுமார், ஹர்திக் போன்ற பெரிய ஹிட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும், அணியும் பெரிய ஸ்கோருக்கு செல்லும்.
இதைத்தான் கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மா கச்சிதமாகச் செய்து வருகிறார். மும்பை அணியும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டு ஆட்டமிழந்தாலே மும்பை அணி பெரிய ஸ்கோரை எட்டிவிடும்.
சிக்ஸர் அடிக்காத ஹிட்மேன்

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரெக்கில்டன் 3 ஓவர்கள் வரை நிதானமாக ஆடி 16 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் சூடுபிடித்து பவுண்டரிகளாக விளாசினார். ஒரு சிக்ஸர்கூட நேற்று ரோஹித் அடிக்கவில்லை 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ரோஹித் சர்மா 89 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்துள்ளார், அதில் சிக்ஸர் அடிக்காமல் இருந்தது இது 3வது முறை.
அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் நேற்றை பேட்டிங் மிகவும் சீராக இருந்தது. ஆஃப்சைடிலும், லெக் சைடிலும் பந்துகளை நிதானமாக அடித்து ரன்களை சேர்த்தார். எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ரோஹித் சர்மா நின்று பேட் செய்கிறார், விக்கெட்டை எளிதாக இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஷாட்களையும் தேர்ந்தெடுத்து பேட் செய்கிறார்.
ரோஹித் சர்மாதனது அரைசதத்தில் 59.1 சதவீதம் ரன்களை ஆஃப் சைடில் அடித்தார். ஏற்கெனவே இந்த சீசனில் அடித்த 2 அரைசதத்திலும் 42% மற்றும் 32% ரன்களை ஆஃப் சைடில் அடித்திருந்தார்.
ஜெய்பூர் ஆடுகளம் தட்டையானது, இதற்கு ஏற்றார்போல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீசவே ரோஹித் சர்மாவை கிராஸ்பேட் போட்டு விளையாடுவதற்கும் ஏதுவாக இருந்தது. ஆர்ச்சர், பரூக்கி என வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எளிதாக பவுண்டரிக்கு ரோஹித் சர்மா விரட்டினார்.
நளினமான பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images
எப்போதும் இல்லாத வகையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் நேற்று ஒரு நளினம் இருந்தது. அவரின் ஸ்குயர் லெக் ஷாட், பைன் லெக் ஷாட் பவுண்டரி, வழக்கமான கவர்ட்ரைவ், மிட்ஆப் ஷாட் என 32 ரன்களை ஆப்சைடு சேர்த்தார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுக்குப் பிறகு ரோஹித் சர்மா இப்போதுதான் டி20 போட்டிகளில் விளையாடுகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்து அதைக் குறையவிடாமல் ஐபிஎல் தொடருக்கும் எடுத்து வந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை கடைசி 6 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசிய ரோஹித் சர்மா ஒரு ஆட்டநாயகன் விருது மட்டுமே வென்றுள்ளார்.
இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,024 ரன்களை எட்டியுள்ளார். ரோஹித் சர்மாவுக்கு முன்பாக விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 8871 ரன்கள் சேர்த்துள்ளார்.
முதல் 5 போட்டிகளில் ரோஹித் சர்மா 20 ரன்களைக்கூட எட்ட முடியாத நிலையில் அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து மிரட்டலான ஃபார்முக்கு ரோஹித் சர்மா வந்துள்ளார். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் தனது ஸ்ட்ரைக் ரேட்டும் குறையாமல், சிக்ஸரும் அடிக்காமல் ரோஹித் சர்மா ஆட்டத்தை நகர்த்திய விதம் அழகானது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கச்சிதமடைந்து வருவது. அடுத்து வரும் போட்டிகளில் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்றும் சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
4 பேட்டர்களின் மிரட்டல் ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா(53), ரெக்கில்டன்(61), சூர்யகுமார்(48), ஹர்திக் பாண்டியா(48) என 4 பேட்டர்களுமே சேர்ந்து 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4வது முறை. கடைசியாக 2011இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டர்கள் இதுபோல் முதல் 4 பேர் 40 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இப்போது நடந்துள்ளது.
முதல் விக்கெட்டுக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 116 ரன்களில் பிரிந்தனர். இந்த ஃபார்ம் குறையாமல் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் கொண்டு சென்றனர். வழக்கமாக ஹர்திக் 5வது அல்லது 6வது பேட்டராக களமிறங்குவார். ஆனால், பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கேப்டனாக முன்வந்து பேட் செய்தார்.
சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்து முதல் 6 பந்துகளிலேயே தனது முதல் சிக்ஸரை விளாசினார். 360 டிகிரி பேட்டர் என்று கூறுவதற்கு ஏற்ப சூர்யகுமார் நேற்று களத்தில் உருண்டு, வித்தியாசமான முறையில் ஷாட்களை ஆடினார். ஆர்ச்சர் வீசிய யார்கர் பந்துகளை யார்கராக வரவிடாமல் கீழே உருண்டு அடித்த ஷாட்கள், தேர்டு மேன் திசையில் அடித்த ஷாட்கள் புதுவிதம். சூர்யகுமார் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 11 முறை 25 ரன்களுக்கும் மேலாக அடித்த வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார்.
ஹர்திக் பாண்டியா எந்த நோக்கத்துக்காக களமிறங்கினாரோ அதை நிறைவேற்றினார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பரூக்கியின் 18வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தனர். ஒரு இன்னிங்ஸில் மும்பை அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறை.
வைபஷ் சூர்யவன்ஷி ஏமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை அணியில் 4 கேப்டன்கள் வியூகம் அமைக்கும்போது, முழுநேரம் இல்லாத, அனுபவமில்லாத கேப்டன் இருக்கும் ராஜஸ்தான் அணியை வீழ்த்துவது அவர்களுக்கு எளிதாக இல்லை. பவர்ப்ளே ஓவர்களிலேயே ஆட்டத்தின் பாதியை மும்பை பந்துவீச்சாளர்கள் முடித்துவிட்டனர்.
மும்பை அணி வீரர்களின் துடிப்பு, உச்சகட்ட உற்சாகம், ஃபீல்டிங்கை சரி செய்த 4 கேப்டன்கள், 4 கேப்டன்களின் உற்சாகப் பங்களிப்பு ராஜஸ்தானுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பேட்டரையும் கட்டம் கட்டித் தூக்கி, 15 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்தனர்.
குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில் டக்-அவுட் ஆகி தீபக் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வால் அதிரடியாக 2 சிக்ஸர்களை போல்ட் பந்துவீச்சில் அடித்தாலும், அதே ஓவரில் போல்டாகி வெளியேறினார். போல்ட் மற்றும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் பவர்ப்ளே முடிவதற்குள் ராஜஸ்தான் அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஏறக்குறைய தோல்வியில் விழுந்தது.
இந்த சீசனில் மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 3வது முறை. ராஜஸ்தான் அணியில் ஒரு பேட்டர்கூட போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ரன்கள்கூட எந்த பேட்டரும் சேர்க்காமல் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறியது போல் இருந்தது. போல்ட், கரன் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மும்பை வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் பேட் செய்த விதமும், பந்துவீச்சு அணுகுமுறையும் அற்புதமாக இருந்தது. இன்னும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்க முடியும். நானும், சூர்யாவும் பேசிக்கொண்டுதான் ஷாட்களை ஆடினோம். ரோஹித் மற்றும் ரியான் அதேபோன்ற ஆட்டத்தை வழங்கினர்.
இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. சூழலைப் புரிந்து அனைவரும் விளையாடினர். பேட்டர்கள் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளனர், நல்ல பேட்ஸ்மேன்ஷிப் தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் அனைவருமே பங்களிக்கிறார்கள். எளிதான கிரிக்கெட்டை ஆடுகிறோம், நல்ல பலன் கிடைக்கிறது. ஒவ்வோர் ஆட்டத்தையும் பணிவுடன், ஒழுக்கத்துடன் ஆடுகிறோம், வெற்றி கிடைக்கிறது” எனத் தெரிவித்தார்.
அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம்: ஆமதாபாத்
- நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- நாள் – மே 6
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs சிஎஸ்கே
- நாள் – மே 3
- இடம் – பெங்களூரு
- நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
- சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)
- சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-456 ரன்கள்(9 போட்டிகள்)
- விராட் கோலி(ஆர்சிபி) 443 ரன்கள்(9போட்டிகள்)
நீலத் தொப்பி
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)
- டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவி நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU