SOURCE :- BBC NEWS

“என் கணவரையும், மகனையும் கொன்றுவிட்டனர்” – முர்ஷிதாபாத் வன்முறையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு
54 நிமிடங்களுக்கு முன்னர்
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத்தின் துலியான் மற்றும் அதைச் சுற்றியுள்ள, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இங்கு நடந்த வன்முறையின் தாக்கத்தை இப்போதும் உணர முடிகிறது.
இந்த வன்முறையில் ஜாஃப்ராபாத்தில் வசிக்கும் 70 வயதான ஹர்கோவிந்த் தாஸும் அவரது 40 வயது மகன் சந்தனும் கொல்லப்பட்டனர். இதனால் அந்தக் குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த தினத்தன்று தாங்கள் உதவியற்றவர்களாக இருந்ததாகச் சந்தனின் சகோதரி ஜோதிகா கூறினார்.
முர்ஷிதாபாத்தில் உள்ள சுத்தியை சேர்ந்த 17 வயது இஜாஸும் இறந்துவிட்டார். பிபிசி குழு அவரது வீட்டை அடைந்த போது, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அக்கம்பக்கத்தினரோ பேசுவதற்குத் தயாராக இல்லை.
மறுபுறம் இத்ரிஸின் குடும்பம் துயரத்தில் உள்ளது. ராணிப்பூர் தாராபகானில் வன்முறை மூண்ட போது 17 வயது இத்ரிஸ் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் பெஹ்ராம்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது பாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
வன்முறையைத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் கலவரங்கள் நடந்ததாக வரலாறு இல்லை. வக்ஃப் சட்டத்துக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறும் என்று இங்குள்ள மக்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
போராட்டத்தின் போது வெடித்த வன்முறை, இந்தப் பகுதியின் முகத்தையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. யாருடைய வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதோ அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காவல்துறையினர் சரியான நேரத்தில் உதவவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
வன்முறை வெடித்தபோது சிலரால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களால் தங்கள் உடைமைகளைக் காப்பாற்ற முடியவில்லை.
முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இயல்பு நிலை மெதுவாகத் திரும்பி வருகிறது. ஆனால், சமீபத்தில் வெடித்த வகுப்புவாத வன்முறை காரணமாக இந்தப் பகுதியில் ஏற்பட்ட வடுவை மறைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU