SOURCE :- INDIAN EXPRESS
கட்சி தொடங்கி ஓராண்டு ஆகியும் பொதுமக்களை சந்திக்கவில்லை என விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நாளை (ஜன.20) சந்திக்கிறார்.
முன்னதாக, மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டாலும், கிராமங்களில் மக்களைச் சந்திக்க கூடாது என்றும், திருமண மண்டபத்தில் மட்டுமே அவர்களை சந்திக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கூறியது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் மற்றும் த.வெ.க பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இடையே நடைபெற்றது. அதன்படி, ஏகனாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கலாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், ஏகனாபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் பேசவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நிகழ்வு நடைபெறும் இடத்தை புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, திறந்தவெளி கேரவன் வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்குமாறு போலீசார் தரப்பில் இருந்து கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SOURCE : TAMIL INDIAN EXPRESS