SOURCE :- BBC NEWS

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 17 ஜனவரி 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில், தனக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மன்னிப்பு வழங்கப்படுமா எனத் தெரியாத நிலையில் தவித்து வருகிறார் நிமிஷா பிரியா.

கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிச்சயம் தனது மகளை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சனாவில் தங்கியுள்ளார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி. ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் ‘மன்னிப்பு’ வழங்கினால் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படலாம்.

உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமனில், எந்த அரசு நிமிஷாவின் வழக்கை கையாள்கிறது? ஏமனின் அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் சௌதி அரேபியா அல்லது இரான் தலையிட்டால் வழக்கின் போக்கு மாறுமா?

ஏமனின் தற்போதைய நிலை என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்குப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. ‘ஏமன் நாட்டின் இந்த உள்நாட்டுப் போர் தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி’ என்று ஐக்கிய நாடுகள் சபை ஒருமுறை கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது (தற்போது இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது). இதில், இஸ்ரேலுக்கு எதிராக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழுவும் போரில் ஈடுபட்டது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு 2023 நவம்பர் முதல் செங்கடலைக் கடக்கும் கப்பல்கள் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகும் காஸாவின் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இதைச் செய்வதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையும், செங்கடல் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

“இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கான பதிலடி இப்போதுதான் தொடங்குகிறது” என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.

அப்போது பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் முகம்மது அல்-புகைதி, “காஸா இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்தாத வரை, அதன் ராணுவ நிலைகள் மீது குறி வைப்பதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை” என்று கூறியிருந்தார்.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் புதன்கிழமையன்று (ஜனவரி 16) தெரிவித்தன.

இந்த புதிய முடிவு, ஏமனிலும் தற்காலிக அமைதியை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமனின் சனாவில் உள்ள ‘குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்’ தலைமை மருத்துவராக பணிபுரியும் சாயா சாவந்த், அந்நாட்டின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.

“உள்நாட்டுப் போர் பதற்றம் மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போன்றவை, இதுவரை எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை. தாக்குதல்கள் நடப்பது பெரும்பாலும் எல்லைப் பகுதியில் என்பதால் தான் இந்த நிலை.”

“கடந்த மாதம், சனாவின் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது சற்று அதிர்ச்சி அளித்தது. ஆனால், இப்போதும் சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு பெரிய பாதிப்பில்லை. அதனால் தான் இன்னும் இந்தியர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர்.” என்று கூறினார்.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்தது யார்?

நிமிஷா பிரியா தற்போது ஏமனில் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள ஏமன் நாடு தற்போது 3 பிரிவினரால் ஆளப்படுகிறது.

சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின் (சனா) அதிபராக செயல்படுகிறார்.

சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு ஏமனின் மற்றொரு பகுதியை கட்டுப்படுத்துகிறது. இந்த அரசின் தலைவராக, அதிபர் ரஷாத் அல் அலிமி செயல்படுகிறார்.

மேற்கண்ட இரண்டும் அல்லாத, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற சதர்ன் டிரான்ஸிஷனல் கவுன்சில் ஏடன் துறைமுகம் உள்ளிட்ட ஏமனின் பகுதிகளை கட்டுப்படுத்துகிறது.

நிமிஷாவின் வழக்கில் அனைத்து முடிவுகளையும் எடுப்பது, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அரசியல் பிரிவே. ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை.

அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

பட மூலாதாரம், Getty Images

நவம்பர் 2023இல் நிமிஷாவுக்கு உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஹூதிக்களின் அரசியல் பிரிவு தலைவர் மெஹ்தி அல் மஷாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்தார். சில ஊடகங்களில், இந்த ஒப்புதலை அளித்தது அதிபர் ரஷாத் அல் அலிமி தலைமையிலான அரசு என்ற செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் இருக்கும் ஏமன் நாட்டு தூதரகம், “ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா, ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவின் சிறையில் உள்ளார்.”

“இந்த வழக்கு முழுவதையும் கையாள்வது ஹூதி கிளர்ச்சிக் குழுவே. அதிபர் ரஷாத் அல் அலிமி நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை.” என்று விளக்கமளித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசு செய்யக்கூடியது என்ன?

“நிமிஷாவின் வழக்கில் தன்னால் முடிந்த அனைத்தையும் இந்திய அரசு செய்யும். ஆனால், ஹூதி கிளர்ச்சிக் குழுவுடன் நேரடி தூதரகத் தொடர்பு இல்லாதது, மத்திய கிழக்கு நாடுகளின் கடுமையான தண்டனைச் சட்டங்கள் போன்றவற்றையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்,” என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்கள் நிபுணருமான கிளாட்ஸன் சேவியர்.

இதற்கு உதாரணமாக, இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் என்ற பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் வழங்கப்பட்ட தண்டனையை சுட்டிக்காட்டுகிறார் கிளாட்ஸன் சேவியர்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு பணிப்பெண்ணாக சௌதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார் ரிஸானா. பணியின்போது, அவரது பராமரிப்பில் இருந்த ஒரு 4 மாத குழந்தையை கொலை செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால், ரிஸானா அதை மறுத்தார். பால் புட்டியில் குழந்தைக்கு பால் புகட்டும்போது, மூச்சுத் திணறி குழந்தை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார் என்றும், இந்த சம்பவம் நடந்தபோது ரிஸானாவுக்கு வெறும் 17 வயது தான் என்றும் அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ரிஸானா 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார், 2007ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சௌதியின் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தது.

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

“மத்திய கிழக்கு நாடுகளின் சட்டங்கள் கடுமையானவை. அங்கு வேலைக்கு செல்பவர்கள் அதை நன்கு அறிந்து தான் செல்வார்கள். அப்படியிருக்க தனது நாட்டு குடிமகன் ஒருவரது கொலை தொடர்பான வழக்கு எனும்போது, அதை அந்த நாட்டு அரசுகள் இன்னும் கடுமையாகவே கையாளும்.”

“இதில் பிற நாட்டு அரசுகளின் தலையீடுகளுக்கு வரம்புகள் இருக்கும். இறுதி முடிவு என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் இருக்கும். கொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றங்களில் அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.

ஷரியா சட்டம் அமலில் இருக்கும் இந்த மத்திய கிழக்கு நாடுகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ‘குருதிப் பணம்’ எனும் இழப்பீடு கொடுத்து, மன்னிப்பு பெற்றால், குற்றவாளியின் தண்டனை குறைக்கப்படலாம் அல்லது முழு விடுதலையும் பெறலாம். கொலை, காயப்படுத்துதல் அல்லது சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும்.

ரிஸானாவின் வழக்கில் தண்டனையை சௌதி உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, அவருக்கு மன்னிப்பு வழங்க பாதிக்கப்பட்ட குடும்பம் மறுத்துவிட்டது.

ரிஸானாவைக் காப்பாற்ற அப்போதைய இலங்கை அரசு பல முயற்சிகள் எடுத்தது. ஆனால் அவை பலனளிக்கவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் உட்பட மனித உரிமை குழுக்கள் வன்மையாக கண்டித்தன.

“இந்திய அரசு தனது ராஜ்ஜிய தொடர்புகள் மூலம் தேவையான உதவிகளைச் செய்கிறது. ஆனால், ஏமன் நாட்டு குடிமகனின் கொலை தொடர்பான வழக்கு என்பதால், இதில், நமது அரசுக்கும் சில வரம்புகள் உள்ளன,” என்கிறார் பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்.

இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா?

நிமிஷா பிரியா, கேரள செவிலியர், ஏமன்

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சமூக அறிவியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி, “இந்த வழக்கில் முழுக் கட்டுப்பாடும், ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கையில் உள்ளது. எனவே, சௌதி அரேபியா அரசோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அதிபர் ரஷாத் அல் அலிமி அரசோ இதில் ஆர்வம் காட்டாது” என்கிறார்.

ஏமனின் அரசியலில், குறிப்பாக ஹூதி கிளர்ச்சிக் குழுவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் இரான் போன்ற ஒரு நாடு, இந்த விவகாரத்தில் உதவ வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்.

“இதற்கு முன்னும் பல சமயங்களில் தனது ராஜ்ஜிய தொடர்புகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்க, இந்த வழக்கில் கூடுதலாக அவகாசம் கிடைத்தால், நிமிஷா மீட்கப்பட வாய்ப்பு உள்ளது.” என்று கூறும் பெர்னார்ட் டி சாமி, அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பு முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

“இஸ்லாமியர்களின் புனித மாதமான ‘ரமலான்’ மாதம் நெருங்கிவருகிறது. அந்த மாதத்தில் பல வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்படும். எனவே, அதைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளது.” என்று கூறினார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC