SOURCE :- BBC NEWS

ஏவுகணை முதல் வான் பாதுகாப்பு வரை – இந்தியா பாகிஸ்தானின் பலம், பலவீனம் என்ன?

13 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எனக் கூறி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அண்மை பதற்றங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் ராணுவத் திறன் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தானிடம் உள்ள ஏவுகணைகள் என்ன, இரு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை தரையில் இருந்து ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டது.

மறுபுறம், பாகிஸ்தானின் ஷாஹீன்-3 ஏவுகணை 2,750 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.

ஆயுதங்களுக்காக இந்தியா பெருமளவில் ரஷ்யாவை சார்ந்துள்ளது, பாகிஸ்தான் சீனாவை சார்ந்துள்ளது.

மேற்குலக நாடுகள் நீண்ட காலமாக இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் வழங்குவதைத் தவிர்த்து வந்தாலும், பிரான்சும் இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது.

இவற்றில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும். உலகில் ஏழு நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன.

சரி, ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு குறித்து பார்ப்போம்.

“பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஹாரிசன் காஸ் ‘தி ‘நேஷனல் இன்டரஸ்ட்’ தளத்தில் எழுதியுள்ளார்.

இந்தியா தனது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. முதலாவது பிருத்வி வான் பாதுகாப்பு (PAD). இது அதிக உயரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை தடுக்கிறது. இரண்டாவது AAD எனப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு. இது குறைந்த உயரத்தில் வரும் ஏவுகணைகளை இடைமறிக்கிறது.

இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு குறைந்தது 5,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ்-2 ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இவை நிலம், வான், கடல் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து ஏவக்கூடியவை.

இந்தியாவிடம் அணு ஆயுத ஏவுகணைகள், வழக்கமான ஏவுகணைகளில் பல வகைகள் உள்ளன. அதேபோல, ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்கும் திறனும் இந்தியாவிடம் உண்டு என்று ஹாரிசன் காஸ் கூறுகிறார்.

மறுபுறம், பாகிஸ்தானிடமும் இந்தியாவிடம் இருப்பது போன்ற அணு ஆயுத ஏவுகணை உட்பட வழக்கமான ஏவுகணைகள் உள்ளன. இரு அண்டை நாடுகளும் பரஸ்பர அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, தங்கள் ஏவுகணைத் திறன்களை மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தானிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இல்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்த ஏவுகணைகள் பெரிய அளவில் தேவை இல்லை என்று பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

முழு விவரம் காணொளியில்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC