SOURCE :- BBC NEWS

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

பாகிஸ்தானில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக இந்தியா வந்திருக்கும் நபர்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

தாக்குதலில் 26 நபர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னுடைய அண்டை நாட்டுடனான பிரச்னையை தீர்க்க ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல் ரீதியான நடவடிக்கைகள் என்று இரண்டு சாத்தியங்களை கையில் வைத்துள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமையன்று அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படையானது ஒரு பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியது.

கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய போர்க்கப்பல்கள் எதிரிநாட்டுடையதாக சித்தரிக்கப்பட்ட இலக்கை, நீண்ட தூரத்திலிருந்து துல்லியமாக தாக்கி அழித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,”பலமுறை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீச்சினை வெற்றிகரமாக செய்து இந்திய கடற்படை கப்பல்கள், தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தன. அமைப்பு ரீதியாகவும், குழுவும் தயார் நிலையில் இருப்பதை இது காட்டுகிறது” என கூறினார்.

இந்த போர் ஒத்திகைக்கான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ள கடற்படை செய்தித் தொடர்பாளர், “தேசத்தின் நலனை காப்பதற்காக எந்நேரமும், எந்த இடத்திலும், எந்த வழியிலும் கடற்படை தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்திய ராணுவத்தின் திறன் குறித்தும், இந்தியாவிடம் கைவசம் உள்ள போர் ஆயுதங்கள் குறித்தும் பலதரப்பட்ட கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த கருத்துகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல்.

மேற்கு கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த் நிலை நிறுத்தப்பட்டால் இது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக ஏன் கருதப்படுகிறது? 1971-ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெறுவதை உறுதி செய்த, இதே பெயரைக் கொண்ட மற்றொரு போர்க் கப்பலின் பங்கு என்ன?

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

ஐ.என்.எஸ். விக்ராந்த் ஒரு அறிமுகம்

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் இந்த கப்பல் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “முழுக்க முழுக்க இந்திய நிறுவனத்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிப் போர்க்கப்பல் இது. 100க்கும் மேற்பட்ட இந்திய சிறு குறு நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு, இந்தியாவில் ஒரே ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.

இதன் வருகைக்குப் பிறகு இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களைப் பெற்றது இந்திய கடற்படை. அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா என்று விமானந்தாங்கிக் கப்பல்களை சொந்தமாக உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டது.

1971-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ஐ.என்.எஸ். விக்ராந்தின் நினைவாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலுக்கு அதே பெயர் வைக்கப்பட்டது.”

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

இதன் சிறப்பம்சங்கள் என்ன?

30 போர் விமானங்களை சுமந்து செல்லும் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் இந்த விமானந்தாங்கிக் கப்பலின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டுள்ளது பத்திரிக்கை தகவல் பணியகம். அதன்படி

கப்பலின் நீளம்: 262 மீட்டர்

தாங்குதிறன் (displacement): 45 ஆயிரம் டன்கள்

அதிகபட்ச வேகம்: 28 Knots

மொத்த செலவு: ரூ. 20 ஆயிரம் கோடி

விமான தாங்கும் திறன்: மிக் 29கே போர் விமானங்கள், கமோவ் – 32, எம்.எச். 60R ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏ.எல்.எச் (Advanced Light Helicopters) மற்றும் எல்.சி.ஏ. (Light Combat Aircraft) விமானங்கள் என 30 வகையான வானூர்திகளை தாங்கிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

விக்ராந்த் கப்பல் மிக உயர்ந்த தானியக்க(Automatic) முறைகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல வகையான நிலைத்த சிறகுகள் (fixed wing) மற்றும் சுழலும் சிறகுகளைக் (rotary aircraft) கொண்ட விமானங்களை தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்திப்படி, இந்த போர்க்கப்பல் மொத்தம் 18 அடுக்குகளையும், 2400 அறைகளைக் கொண்டிருக்கிறது. 1600 வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பலில் பெண் அதிகாரிகள், வீராங்கனைகள் தங்குவதற்கு ஏற்ற வகையிலான அறைகளையும் கொண்டுள்ளது.

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

தாக்குதலுக்கு மட்டுமல்ல பாதுகாப்புக்கும் பயன்படும் விக்ராந்த்

“இந்தியாவில் இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. ஒன்று விக்ரமாதித்யா. மற்றொன்று விக்ராந்த். இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு தேவைகளுக்காக இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும்,” என்று தெரிவிக்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் வியூகவியல் துறையில் ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொண்டு வரும் திருநாவுக்கரசு.

“இது மிகவும் பதற்றமான சூழல். உண்மையிலேயே பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தால், போருக்கான சாத்தியங்கள் இருந்தால், அந்த நாட்டால் எளிதில் இலக்கு வைக்கப்படும் இரண்டு முக்கியப் பகுதிகளாக குஜராத்தும், மும்பையும் உள்ளன. இந்தியாவை, குறிப்பாக இந்த இடங்களை தாக்க வரும் எந்த ஒரு தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீநகர் அல்லது டெல்லி விமானதளங்களில் இருந்து விமானங்களை இயக்கி மற்ற நாடுகளுடன் தாக்குதலை நடத்துவதைக் காட்டிலும், மிதக்கும் இந்த விமான தளத்தின் மூலமாக மிகவும் எளிதில், மிகவும் விரைவாக ஒரு தாக்குதலை சாத்தியமாக்க இயலும். பாகிஸ்தானில் இப்படி ஒரு விமானந்தாங்கிக் கப்பல் இல்லாமல் இருப்பதும் நமக்கு சாதகமான சூழலை உருவாக்கும்,” என்றும் தெரிவிக்கிறார் அவர்.

மேலும் இந்த போர்க்கப்பலில் எரிபொருள் கொள்ளளவை முழுமையாக பூர்த்தி செய்தால், கடலில் நீண்ட நாட்கள் இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அடிக்கடி, பல தேவைகளுக்காக கடற்கரைக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

தடுப்பாற்றலைக் காட்டுவது மிகவும் முக்கியம்

“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படுமா? அது நீண்ட நாள் போராக இருக்குமா? அல்லது குறைந்த நாள் போராக இருக்குமா என்பதையெல்லாம் யாராலும் கணித்துக் கூற இயலாது,” என்கிறார் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்டினன்ட் கார்னல் தியாகராஜன்.

“ஆனால் தற்போது நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நம்முடைய தடுப்பாற்றலைக் காட்டவே நடத்தப்படுகிறது.

சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC), கடற்படை தளங்களில் எதிரி நாட்டினர் எந்த ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பு, நம்முடைய போர்க்கப்பல், போர் விமானங்கள், மற்றும் துருப்புகளை இந்திய ராணுவம் நிறுத்தும். எதிரி நாட்டுப்படையினர், எதேனும் தாக்குதல் நடவடிக்கைக்கு தங்களை ஆயத்தமாக்கும் பட்சத்தில், தடுப்பு தாக்குதலை இந்தியா நடத்தும்.

ஐ.என்.எஸ். விக்ராந்த் கார்வாரில் இருந்து முன்னோக்கி சென்றுகொண்டிருந்தால், அதற்கும் இதுவே காரணமாக அமையும். ஒரு தாக்குதலின் போது, எதிரிநாட்டின் எரிசக்தி உற்பத்தி மையங்கள், தரை, கடல் மற்றும் விமானபடை தளங்கள், தகவல்தொடர்பு மையங்கள், ஆயுதக்கிடங்குகள், எண்ணெய்க் கிடங்கு ஆகியவை குறி வைக்கப்படும்.

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஐ.என்.எஸ். விக்ராந்த், கிழக்கு பாகிஸ்தானின் (இன்றைய வங்கதேசத்தின்) ராணுவ செயல்பாடுகளையும், கடல் வழி தாக்குதல்களையும் முன்னெடுத்தது. 1971-ஆம் ஆண்டு போரின் வியூகத்தை பின்தொடர்ந்து தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

1971-ல் நடந்தது என்ன?

இந்தியாவின் முதல் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் உண்மையில் பிரிட்டிஷின் ராயல் கடற்படைக்காக உருவாக்கப்பட்டது. 1943-ஆம் ஆண்டு அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. ஹெர் மெஜெஸ்டி ஷிப் ஹெர்குலஸ் (HMS Hercules) என்ற பெயரில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தி.

ஆனால் இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு கட்டுமானம் முழுமையாக நிறைவடையாத நிலையில் அந்த கப்பலை விற்பதாக அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. இந்தியா அந்தக் கப்பலை 1957-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியது. கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்ட பிறகு அந்த கப்பல் 1961-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அர்பணிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது அந்த செய்தி.

பிரிட்டனில் இருந்து கிளம்பிய கப்பல், நவம்பர் 3, 1961-ஆம் ஆண்டு மும்பை கடல்பகுதியை அடைந்தது என்று குறிப்பிடுகிறது பத்திரிக்கை தகவல் பணியகம்.

ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய கடற்படை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், பஹல்காம், ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், PIB

வங்கதேசத்தின் விடுதலையை உறுதி செய்வதற்காக 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, கிழக்கு பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளை முற்றிலுமாக முற்றுகையிட்டு முடக்கியது இந்த கப்பல்.

கடல்வழியாக பாகிஸ்தான் படைகள் முன்னேறுவதையும் தாக்குதல் நடத்துவதையும் தடுத்து நிறுத்தி, எதிரி நாட்டு இலக்குகளை தாக்கி அழித்தது என்கிறது பத்திரிக்கை தகவல் பணியகம்.

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து, 1997-ஆம் ஆண்டு சேவையில் இருந்து விக்ராந்த் விலக்கிக்கொள்ளப்பட்டது. அடுத்த 15 ஆண்டுகள் அது ஒரு அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டு, பிறகு அதன் பாகங்களை பிரித்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அதே பெயரிலான , கூடுதல் திறன்களுடன் கூடிய விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த்தும், போர் பற்றிய விவாதங்களுக்கு பேசுபொருளாகியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU