SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
28 ஏப்ரல் 2025, 01:42 GMT
புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்
டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 46-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி, 11 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
47 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய க்ருனால் பாண்ட்யா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில், விராட் கோலி, கே எல் ராகுலை கேலி செய்யும் விதமாக செய்தது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, இதே இரு அணிகளுக்கு இடையே பெங்களூருவில் போட்டி நடைபெற்றபோது, கே எல் ராகுல் ‘இது என்னுடைய மைதானம்’ என்று குறிக்கும் வகையில் ஆட்டத்தின் போதே செய்திருந்தார்.
அதனை கிண்டல் செய்யும் விதமாக இரு விளையாட்டு வீரர்களுக்கும் இடையேயான உரையாடலின்போது, ராகுல் செய்தவாரே விராட் கோலியும் செய்து காட்டி சிரித்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது. நிகர ரன் ரேட்டைப் பொறுத்தவரை 0.521 என மும்பை, குஜராத் அணிகளைவிட குறைவாக இருக்கிறது.
அடுத்துவரும் போட்டிகளில் ஏதேனும் பிரம்மாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்றால் நிகர ரன்ரேட் எகிறிவிடும். ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் 3 வெற்றிகள் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
அதேநேரம், நேற்று முன்தினம் வரை முதலிடத்திலும், 2வது இடத்திலும் மாறி மாறி இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
நிகர ரன்ரேட் ஆர்சிபியை விட சற்று குறைவாக 0.482 என இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் 3 போட்டிகளில் வென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

பட மூலாதாரம், Getty Images
ஆரஞ்சு தொப்பியுடன் கோலி
ஆர்சிபி அணி இதுவரை 7 ஆட்டங்களில் வென்றுள்ளது, அதில் 4 போட்டிகளில் சேஸிங் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த 4 போட்டிகளின் சேஸிங்கிலும் விராட் கோலி அரைசதம் அடித்துள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் மட்டும் 245 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் இந்த 4 போட்டிகளிலும் நேற்றுதான் முதல்முறையாக கோலி ஆட்டமிழந்தார்.
இந்த சீசனில் கோலி 10 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 443 ரன் அடித்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். இந்த சீசனில் கோலி மெதுவான ரன்குவிப்போடு தொடங்கினாலும், தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, ரன்குவிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில்கூட க்ருனால் பாண்ட்யாவோடு சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து “சேஸிங் கிங்” என்ற பெயருக்கு உரித்தாக கோலி விளங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்கு காரணமான ஆர்சிபியின் பந்துவீச்சு
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முதல் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட டெல்லி அணியை 163 ரன்களுக்குள் சுருட்டினர். புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 8 ஓவர்கள் வீசி 69 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வழங்கினர். ஆனால், யாஷ் தயால் ஒரு விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கினார்.
சுழற்பந்துவீச்சாளர்களான க்ருனால் பாண்ட்யா, சூயஸ் ஷர்மா இருவரும் 8 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதில் சூயஷ் ஷர்மா விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லி பேட்டர்களை திணறவிட்டார். அதேபோல க்ருனால் பாண்ட்யாவும், 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்து வீசினார்.

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் விராட் கோலி, க்ருனால் பாண்ட்யா இடையே அமைந்த 4வது விக்கெட்டுக்கான 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆர்சிபி அணி சரிவிலிருந்து மீண்டதை இரு கட்டமாகப் பிரிக்கலாம். 4 ஓவரிலேயே ஆர்சிபி 3 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 6 ஓவர்களில் ஆர்சிபி 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 101 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
க்ருனால் பாண்ட்யா நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினார். இதில் ஹேசல்வுட் பந்தில் முதுகில் அடிவாங்கி, சமீரா பந்துவீச்சில் ஹெல்மெட்டில் அடிவாங்கி பேட்டிங்கில் சிரமப்பட்டார். 21 பந்துகளில் 17 ரன்களோடு சுமாராகவே குர்னல் பாண்ட்யா பேட் செய்தார். ஆனால், அடுத்த 26 பந்துகளில் க்ருனால் பாண்ட்யா 56 ரன்கள் சேர்த்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய விராட் கோலி, 45 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பும் நிதானமான ஆட்டமும் தான் ஆர்சிபி வெற்றிக்கு காரணமாகும்.
9 ஆண்டுகளுக்குப்பின் அரைசதம்

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணியின் சேஸிங்கைப் பொருத்தவரை கோலி, க்ருனால் பாண்ட்யா ஆட்டம் தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. இருவரின் பார்ட்னர்ஷிப்தான் முக்கியமாக இருந்து தொடக்கத்தில் தடுமாறிய அணியை வெற்றிக்கு அருகே வரை அழைத்து வந்தது.
இந்தத் தொடரில் தற்போது வரை பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத க்ருனால் பாண்ட்யா, நேற்று அரைசதம் அடித்தது, ஆர்சிபி அணியின் பேட்டர்கள் எந்த நேரத்திலும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து ஆடக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதைக் காட்டினார்.
ஆர்சிபிக்கு தொடக்கம் உற்சாகமாக இருந்தாலும் அது நிலைக்கவில்லை. பில் சால்ட்டுக்கு பதிலாக பெத்தல் களமிறங்கி, ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் 12 ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த படிக்கல் டக்அவுட்டில் அக்ஸர் பந்துவீச்சிலும், பட்டிதார் ரன் அவுட்டிலும் வெளியேறினர். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் ஆர்சிபி அணி தடுமாறியது.
வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் குர்னல் பாண்ட்யா இந்த முறை 3வது வீரராக களமிறக்கப்பட்டார். டெல்லி ஆடுகளம் கறுப்பு வண்டல் மண் கொண்டதால் பந்து பேட்டரை நோக்கி சற்று நின்று வந்தது, பெரிதாக பவுன்ஸர் இல்லை என்பதால் பெரிய ஷாட்களை ஆடுவது சற்று சிரமமாக இருந்தது. கோலி, க்ருனால் பாண்ட்யா நிதானமாக ஆடியதால் பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பவர்ப்ளேயில் கோலி, க்ருனால் பேட்டிங்கையும், 10 ஓவர்கள் வரை இருவரின் பேட்டிங்கைப் பார்த்தால் ஆர்சிபி வெல்வது கடினம் என ரசிகர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், 10 ஓவர்களுக்குப் பின்பு தான் இருவரின் ஆட்டமும் சூடுபிடித்தது. கடைசி 10 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது.
க்ருனால் பாண்ட்யாவைப் பொருத்தவரை அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா போன்று அதிரடி பேட்டர் எனச் சொல்ல முடியாது. பந்துவீச்சு ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்ட்யா ஏதாவது ஒரு ஆட்டத்தில் மட்டுமே அரிதாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதேநேரம் “பிஞ்ச் ஹிட்டர்” போன்று கேமியோவும் ஆடக்கூடியவர்.
மந்தமாக ஆட்டத்தைத் தொடங்கிய க்ருனால், 11வது ஓவரில் சமீரா பந்துவீச்சில் லெக்சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், முகேஷ்குமாரின் 13வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரிலும் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
21 பந்துகளில் 17 ரன்களுடன் இருந்த க்ருனால் பாண்ட்யா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதாவது அடுத்த 17 பந்துகளில் 33 ரன்களை பாண்ட்யா விளாசினார். ஐபிஎல் தொடரில் கடைசியாக 2016ஆம் ஆண்டு க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்திருந்தார், அதன்பின் 3,269 நாட்கள் கழித்து இந்த ஆட்டத்தில் க்ருனால் பாண்ட்யா அரைசதம் அடித்துள்ளார். க்ருனால் பாண்ட்யாவை ஊக்கப்படுத்திக் கொண்டே பேட் செய்த கோலி 45 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆர்சிபி அணிக்கு வெற்றி பெற கடைசி 24 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது. சமீரா வீசிய 18வது ஓவரில் லெக்கட்டரில் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த டிம் டேவிட் ஆர்சிபியின் வெற்றியை வேகப்படுத்தினார். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசி ஆர்சிபியை வெற்றிக்கு வித்திட்டார்.

பட மூலாதாரம், Getty Images
நடுப்பகுதியில் சொதப்பிய டெல்லி
அபிஷேக் பொரெல், டூப்பிளசிஸ் இருவரும் நல்ல தொடக்கம் அளித்தனர். ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின் காயத்திலிருந்து மீண்டு வந்து டூப்பிளசிஸ் களமிறங்கினார். அபிஷேக் 11 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேட்டிங்கில் தடுமாறிய டூப்பிளசிஸ் 26 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து குர்னல் பாண்ட்யாவிடம் விக்கெட்டை இழந்தார்.
கருண் நாயர் அதிரடியாகத் தொடங்கினாலும், பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு யாஷ்தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் சேரத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அசுதோஷ் சர்மா (2), அக்ஸர் (15) என கீழ்வரிசை பேட்டர்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
டெல்லி அணியைப் பொருத்தவரை 50 ரன்கள் கூட எந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் அபிஷேக், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகிய இருவர் மட்டுமே அதிரடியாக பேட்டைச் சுழற்றினர். மற்ற அனைத்து பேட்டர்களும் ரன்சேர்க்க கடுமையாகத் திணறினர். சிறப்பாக ஆடியக்கூடிய கே.எல்.ராகுல்கூட நேற்று 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார்.
ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி மெதுவாகவும், சில நேரங்களில் தாழ்வாகவும் வந்ததால் பேட்டர்களால் பெரிய ஷாட்டுக்கு செல்ல முடியவில்லை. இதை ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் க்ருனால், சூயஷ் இருவரும் சிறப்பாகப் பயன்படுத்தினர். கடைசி நேரத்தில் ஸ்டெப்ஸ், விப்ராஜ் இருவரும் சேர்ந்து 36 ரன்கள் சேர்த்தனர். இந்த ரன்களும் வராமல் இருந்திருந்தால் டெல்லி அணி 130 ரன்களை கடப்பதே கடினமாகியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம்
வெற்றிக்குப்பின் ஆரஞ்சு தொப்பி வீரர் விராட் கோலி கூறுகையில் “இந்த ஆடுகளத்தில் இந்த வெற்றி மிகச்சிறப்பானது. இதற்கு முன் இருந்த ஆடுகளத்தைவிட இந்த ஆடுகளம் வித்தியாசமாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை சேஸிங்கில் களமிறங்கும்முன் என்னுடைய பங்கு என்ன, எப்படி ஆட வேண்டும், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டுதான் நான் விளையாடுவேன்.
3வது விக்கெட் இழப்பின்போது நெருக்கடியான நிலையில் இருந்தோம். ஆனால் க்ருனால் பாண்ட்யாவுடனான 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு கொண்டு சென்றது. க்ருனால் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் க்ருனால் பாண்ட்யா.
நான் ஸ்கோர் போர்டைப் பார்ப்பேன், சூழல்களைப் பார்ப்பேன், பந்துவீச்சாளர்கள் யார், யாரெல்லாம் நமக்கு சவலாக இருப்பார்கள் என்று பார்த்து விளையாடுவேன். அதனால்தான் முதலில் ஒரு ரன், 2 ரன்கள் என ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அதன்பின்பு தான் பவுண்டரி பக்கம் சென்றேன். இதனால் ஆட்டம் எங்களுக்கு தேக்கமடையாமல் சென்றது.
பார்ட்னர்ஷிப் என்பது டி20 போட்டியில் மிக முக்கியம். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதையே இன்றைய பேட்டர்கள் மறந்துவிட்டார்கள். ஆட்டத்தை ஆழமாக வழிநடத்திச் செல்லும் பாணியையும் மறந்துவிட்டார்கள்.
இந்த சீசனில் நான் பார்த்தவரை, பேட்டர்கள் வருவதும், போவதுமாகத் தான் இருக்கிறார்கள். பேட்டிங்கில் தொழில்முறை சார்ந்த அம்சங்கள் இருக்க வேண்டும். சூழலை அறிந்து, அதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தை மாற்ற வேண்டும். க்ருனாலும், நானும் நன்கு பேசிக்கொண்டு எந்த பந்தில் பெரிய ஷாட்டுக்கு செல்லலாம், யாருடைய பந்துவீச்சை குறிவைக்கலாம் எனப் பேசி விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். கடைசி வரிசையில் டிம் டேவிட், ஜிதேஷ், ரொமாரியோ போன்ற பவர்ஹிட்டர்கள் இருப்பதும் எனக்கு ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பது சூயஷ் ஷர்மாதான்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் vs குஜராத் டைட்டன்ஸ்
இடம்: ஜெய்பூர்
நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
நாள் – ஏப்ரல் 30
இடம் – சென்னை
நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நாள் – மே 1
இடம் – ஜெய்பூர்
நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs சிஎஸ்கே
நாள் – மே 3
இடம் – பெங்களூரு
நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
விராட் கோலி (ஆர்சிபி) – 443 ரன்கள் (9 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) – 427 (10 போட்டிகள்)
சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்) – 417 ரன்கள் (8 போட்டிகள்)
பர்பிள் தொப்பி யாருக்கு?
ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) – 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) – 16 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)
நூர் அகமது (சிஎஸ்கே) – 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC