SOURCE :- BBC NEWS

தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவில் வசித்து வரும் ஒரு இந்து-முஸ்லிம் நண்பர்களின் 40 ஆண்டு கால நட்பு எல்லோருக்கும் ஒரு நிகரற்ற உதாரணமாகத் திகழ்கிறது.

ஒரு இந்து மற்றும் ஒரு முஸ்லிம் தங்களின் மகன்களின் திருமணத்திற்கு ஒரே பத்திரிக்கையை அச்சிட்டு ஒரே வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

அப்துல் ரௌஃப் அன்சாரி மற்றும் விஷ்வஜீத் சக்ரபர்தி குடும்பத்தினர் எல்லோரும் பிரமிப்புடன் பேசும் விதத்தில் அவர்களுடைய உறவை கொண்டாடியுள்ளனர்.

அப்துல் ரௌஃப் அன்சாரியின் மகன் யூனுஸ் பர்வேஸின் திருமணமும் விஷ்வஜீத் சக்ரபர்தியின் மகன் சௌரப்-ன் திருமணமும் சமீபத்தில் நடைபெற்றது. இருவரின் திருமணத்திற்கும் ஒரே பத்திரிக்கை அச்சிடப்பட்டு ஒரே வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

‘யூனுஸ் வெட்ஸ் ஃபர்ஹீன்’ மற்றும் ‘சௌரப் வெட்ஸ் ஷ்ரெஸ்தா’ என்கிற இரு தம்பதிகளின் பெயர்களும் ஒரே பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தன. இது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளானது.

விஷ்வஜீத் மற்றும் அவர் குடும்பத்தினரின் பெயர் யூனுஸின் திருமண வரவேற்பு பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த நிலையில் சௌரப் திருமணத்தின் விருந்தினர்களாக அப்துல் ரௌஃப் அன்சாரியின் குடும்பத்தினர் இருந்தனர்.

ஒரே நாளில் இரு திருமண வரவேற்பு

கோட்டா சந்திப்புக்கு அருகே உள்ள ஜனக்புரி காலனியில் தான் அப்துல் ரௌஃப் அன்சாரி மற்றும் விஷ்வஜீத் சக்ரபர்தி ஆகியோரின் வீடுகள் உள்ளன.

இருவரும் நாற்பது ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர். ரமலான் என்றாலும் சரி தீபாவளி என்றாலும் சரி, இவர்கள் அனைத்து பண்டிகைகளையும் ஒன்றாகவே கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 17-ம் தேதி அன்று நடந்த யூனிஸின் திருமணத்தில் சௌரப்பும், ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடந்த சௌரப்பின் திருமணத்தில் யூனுஸும் நடனம் ஆடியதைப் பார்க்க முடிகிறது. ஏப்ரல் 19 அன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இரண்டு குடும்பத்தினரின் உறவினர்களும் பரஸ்பரமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

“இரண்டு குழந்தைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால் தான் ஒரே பத்திரிக்கை அச்சிட்டோம். நாங்கள் இரண்டு குடும்பங்கள் அல்ல ஒரே குடும்பம் தான். எங்களின் உறவினர்களும் ஒருவரை ஒருவரை நன்கு அறிவார்கள்.” என்கிறார் விஷ்வஜீத்.

“நாங்கள் எந்த யோசனையும் இல்லாமல் ஒரு குடும்பமாகத் தான் பத்திரிக்கையை அச்சிட்டோம். இது எங்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது,” எனக் கூறுகிறார் அப்துல் ரௌஃப் அன்சாரி.

மேலும் அவர், “முதல் முறை இந்த மாதிரியான பத்திரிக்கையைத் தயாரிப்பதாக அதனை அச்சிட்டவர் தெரிவிக்கிறார். அவர் தனக்கென்று சில பிரதிகளை வைத்துக் கொண்டார். எங்களை அறிந்தவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.” என்றார்.

“எங்களின் மூத்த சகோதரர் மற்றும் சகோதரியின் திருமண வரவேற்பு அட்டையிலும் விஷ்வஜீத் பெரியப்பாவின் பெயர் இருந்தது. எங்களை அறிந்தவர்களுக்கு அவர் எனக்கு பெரியப்பா போன்றவர் என்பது தெரியும்.” என்கிறார் யூனுஸ் பர்வேஸ்.

தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

நட்புக்கு ஒரு முன்மாதிரி

அப்துல் ரௌஃப் மற்றும் விஷ்வஜீத் தங்களை நண்பர்களாக அல்ல சகோதரர்களாகவே கருதுகின்றனர். அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களை வேறு வேறாக கருதுவதில்லை.

அவர்களின் நட்பு பற்றி விஷ்வஜீத் சக்ரபர்தி கூறுகையில், “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் வளரும்போது கூட உணரவில்லை. எங்களுக்குத் திருமணமும் ஆனது. நாங்கள் அருகருகே வீடுகள் கட்டியது மட்டுமல்ல ஒன்றாக தொழிலும் செய்கிறோம். ஆனால் நாங்கள் நண்பர்கள் அல்ல, சகோதரர்களே.” என்றார்.

“எங்களின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் அறிவார்கள் மற்றும் எங்களுக்குப் பொது நண்பர்களும் உள்ளனர். எங்களின் பிள்ளைகளும் சகோதர, சகோதரிகள் போலவே வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பார்ப்பதற்கு இரண்டாகத் தெரிந்தாலும் ஒரே குடும்பம் தான்,” என்கிறார் அப்துல் ரௌஃப் அன்சாரி.

அஜ்மரின் கேக்ரி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜஸ்வந்த் சிங் ரத்தோர், அன்சாரி மற்றும் சக்ரபர்திக்கு பொது நண்பர் ஆவார். “நான் 2010-ல் கோட்டாவில் ஆய்வாளராக இருந்தேன். அப்போதில் இருந்து எனக்கு இரண்டு குடும்பங்களையும் தெரியும். பெயர் வேறு தான், ஆனால் குடும்பம் ஒன்று. இவர்களின் நட்பு முன்மாதிரியானது.” என்றார்.

தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

விஷ்வஜீத்தின் மகன் சௌரப் கூறுகையில், “நாங்கள் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருக்கிறோம். இரண்டு குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரும் உடன் பிறந்தவர்களாகவே வளர்ந்துள்ளோம். எங்களுக்குப் பொது நண்பர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளோம், நாங்கள் ஒரே குடும்பம் தான்.” என்றார்.

“நாங்கள் எப்போதும் குடும்பமாகவே இருப்போம். ஜெய்ப்பூரில் படிக்கும்போது நானும் யூனுஸும் ஒன்றாகவே வாழ்ந்துள்ளோம். நாங்கள் அவனை எப்போதும் ஒரு நண்பனாக நினைத்ததில்லை, அவனை ஒரு சகோதரன் போலவே கருதுகிறேன், ” எனப் பெருமையுடன் சொல்கிறார் சௌரப் .

தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்மாதிரி

எல்லோரும் அப்துல் ரௌஃப் அன்சாரி மற்றும் விஷ்வஜீத் சக்ரபர்தியின் நட்பு மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஒற்றுமையை உதாரணமாகக் கூறுகின்றனர்.

பத்திரிக்கையில் இருந்து வரவேற்பு வரை, இந்தத் திட்டமிடல் என்பது சகோதரத்துவதுக்கான எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.

“இதை ஒரு முன்னுதாரணமாக நான் கருதுகிறேன். இந்த நாட்டின் கங்கா – ஜமுனி கலாச்சாரத்திற்கு (இந்து-முஸ்லிம் ஒற்றுமை) இது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.” என்கிறார் ஜஸ்வந்த் சிங்.

மேலும் அவர், “நான் காவல்துறையில் இருந்துள்ளேன். வகுப்புவாத பதற்றங்கள் நிறைந்த காலக்கட்டத்தில் இத்தகைய நிகழ்வுகள் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு வலுவான செய்தியாக விளங்குகின்றன.” என்றார்.

சௌரபின் 75 வயதான தாய்மாமா, கமல்காந்த் சக்ரபர்தி இந்த திருமணத்தில் கலந்து கொள்ள கல்கத்தாவில் இருந்து வந்துள்ளார்.

அவர், “என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பு மற்றும் நெருக்கத்தை நான் எப்போதும் பார்த்ததில்லை. நான் இந்தக் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். கல்கத்தாவிலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு ஆழமான நட்பை நான் பார்த்ததில்லை. இது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.” என்றார்.

தங்களின் மகன்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்திய இந்து இஸ்லாமிய நண்பர்கள், கோட்டா, ராஜஸ்தான்

பட மூலாதாரம், Mohar Singh Meena

நாட்டின் எந்தப் பகுதியிலாவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றம் பற்றிய செய்தி வந்தால் அது உங்கள் நட்பை பாதிக்குமா என்கிற கேள்விக்கு எங்களுக்கு அது ஒரு பொருட்டில்லை என்று பதில் அளிக்கிறார் அப்துல் ரௌஃப்.

மேலும் அவர், “நாங்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. நாங்கள் ஒரு குடும்பம் தான். எல்லோரும் இது போலவே ஒன்றாக வாழ வேண்டும்.” என்றார்.

“நாங்கள் நண்பர்களாக இருப்பதற்கு இடையே மதமோ சாதியோ வந்ததில்லை. நாங்கள் நிறைய அன்புடன் வாழ்கிறோம். சௌரப்பும் நானும் எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளோம்.” என்கிறார் யூனுஸ்.

இந்த நட்பு மற்றும் குடும்பம் மூலம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, “நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்வதைப் போல அனைவரும் அன்புடன் ஒன்றாக வாழ வேண்டும்.” என்றார் அப்துல் ரௌஃப் அன்சாரி.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU