SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Danny Fullbrook/BBC
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், ‘கடுல் புடுல்’ (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார்.
குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர்.
பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது குறிப்பிட்ட அளவு நலன்களையும் கொண்டுள்ளது என்று சமி நம்புகிறார்.
“நன்றாக உணரவைக்கும் சரோடோனின் அளவு அதிகரிக்கும். அன்பு மற்றும் இணைப்புக்கு காரணமாக இருக்கும் ஆக்சிடோசின் அளவும் அதிகரிக்கும்,” என்று கூறுகிறார் சமி.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவை, ‘தொடுதல்’ குறைக்கிறது. மேலும் உங்களின் நரம்பு மண்டலத்தை சீராக்கவும் செய்கிறது என்று தொடுதல்.
சமியிடம் தெரப்பிக்கு வரும் நபர்கள், நரம்பு மண்டல பிரச்னைகள், பி.டி.எஸ்.டி. அல்லது தனிமையால் அவதிப்படுகின்றனர்.
“என்னுடைய இந்த தெரபி சேவைக்கு முழுக்க முழுக்க மோசமான ஆண்களே வருவார்கள் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும் இந்த சிகிச்சைக்காக வருகை புரிகின்றனர்,” என்று விளக்குகிறார் அவர்.
பெட்ஃபோர்ட்டைச் சேர்ந்த பெப் வலேரியோ கடந்த சில மாதங்களாக சமி நடத்தும் இந்த நிகழ்வுக்கு வருகிறார்.
“வார்த்தைகள் ஏதுமின்றியே குணமடையும் உணர்வை அளிக்கிறது இது. அங்கே வரும் நபர்களின் பிரச்னை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. மாறாக உங்களின் தொடுதல் அவர்களுக்கு தேவையான உதவியை தருகிறது,” என்று பெப் கூறுகிறார்.
இந்த தெரப்பி எப்படி நடக்கிறது?
சமி தன்னிடம் இந்த தெரப்பிக்கு வரும் நபர்களை, குறிப்பிட்ட உணர்ச்சிகரமான சூழலை ஏற்படுத்துவதற்காக சில காட்சிகளை கற்பனை செய்து பார்க்கும்படி கூறுவார்.
“நீங்கள் மீண்டும் ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நபரை தற்போது கட்டியணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள், என்று சில நேரங்களில் நான் கூறுவேன்.”
“உண்மையாகவே அது எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணம். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் அழுது கொண்டிருப்பார்கள்,” என்று விளக்குகிறார்.
தனி நபர்களுக்கு அளிக்கும் தெரபிகளின் போது அவர்களின் தனித்தேவைகள் குறித்து மட்டுமே அதிகம் கவனம் செலுத்தப்படும்.
மிகவும் எளிதாக ஒருவர் அருகில் அமர்ந்து கொண்டு, கையோடு கை கோர்த்து பேசிக் கொண்டிருப்பது அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஒருவரை கட்டிப்பிடித்த படி படுத்திருக்க வேண்டும் என்று நினைக்கலாம்.
ஆறுதலாக ஒருவரின் முதுகை வருடிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கலாம்.

பட மூலாதாரம், Samii Wood
இதற்கு கட்டணமா?
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் இந்த தெரப்பிக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்று சிலர் புருவம் உயர்த்துகின்றனர். ஆனால் இது நட்பு ரீதியில், ஒருவரை ஒருவர் பேணிக்காக்கும் சேவை என்று கூறுகிறார் சமி.
இந்த தெரப்பிக்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சமியிடம் வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்த சிகிச்சையின் வரம்புகள் என்ன என்பதை பட்டியலிடும் ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
“இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களால் வழி நடத்தப்படும் நிகழ்வு. அவர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு எது ஆறுதல் அளிக்கிறது? என்பது குறித்து அவர்கள் என்னிடம் தெரிவிப்பார்கள்,” என்று கூறுகிறார் சமி.
நெருக்கமான தொடுதல் என்பது பாலியல் ரீதியான உணர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார் சமி. அது போன்ற சூழலில் இடைவேளையை அறிவிப்பார் அல்லது படுத்திருக்கும் நிலைமையை மாற்றி, தெரப்பியின் கண்ணோட்டம் குறித்து கவனம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
இது போன்ற சிகிச்சைகளுக்கு பிரிட்டனில் ஒழுங்குமுறை அமைப்பு ஏதும் இல்லை. ஆனால் சமி போன்ற நிபுணர்கள் கடுல் ஃப்ரொபெஷ்னல் இண்டர்நேஷனல் (Cuddle Professionals International (CPI)) போன்ற அமைப்புகளிடம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள இயலும்.
தெளிவாக விளக்கப்பட்டு பெறப்படும் ஒப்புதல் (Informed Consent) சார்ந்துள்ள “தார்மீக ரீதியான நெறிமுறைகளை,” கடைபிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.
இந்த சிகிச்சைகள் பொதுவாக நிபுணத்துவமான தரநிலையைக் கொண்டிருந்தாலும் கூட, எளிதாக இந்த சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்காக சாத்தியங்களும் இருக்கின்றன.
அப்படியாக ஏதேனும் நடக்கின்ற பட்சத்தில் மக்கள் காவல்துறையினரிடமோ, உள்ளூர் அதிகாரிகளிடமோ, சி.பி.ஐயிடமோ (Cuddle Professionals International ) புகார் அளிக்கலாம் என்று சமி தெரிவிக்கிறார்.
இந்த அமைப்பை க்ளேர் மெண்டெல்சன் என்பவர் துவங்கினார். அவரின் இணையத்தின் கூற்றின் படி, அவர் இந்த சிகிச்சைப் பிரிவில் ஒழுங்குமுறை தேவைப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
காம்பிளிமெண்டரி மெடிக்கல் அசோசியேஷன் அமைப்பில் பதிவிடப்பட்ட கல்லூரியாக சி.பி.ஐ. செயல்படுகிறது. மேலும் பயிற்சிகள் வழங்குவதற்கான ஒப்புதலை காம்பிளிமெண்டரி சிகிச்சையாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுள்ளது சி.பி.ஐ. (Cuddle Professionals International)

பட மூலாதாரம், Samii Wood
தயக்கம் காட்டும் மக்கள்
வெளிநாடுகளில் கட்டிப்பிடி வைத்தியம் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதை ஆவணப்படம் ஒன்றை பார்த்து அறிந்து கொண்டார் சமி.
இருப்பினும், பிரிட்டனில் மக்கள் பிறரைத் தொடுவதையோ, பிறரால் தொடப்படுவதையோ பெரிதாக விரும்புவதில்லை என்று கூறுகிறார் சமி.
மக்களை “அதிகமாக ஏங்க வைப்பது” மற்றும் “அப்படி ஏங்குவது குறித்து அச்சமடையவைப்பது,” என்ற இரண்டுக்கும் கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கும் தான் காரணம் என்று கூறுகிறார் சமி.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாக இந்த பயம் இருக்கிறது. ஆனால் பிரிட்டனில் அது போன்ற சூழல் இல்லை. இங்கு எங்களுக்கு இதற்கான தேவை இருக்கிறது. அப்படி இல்லை என்றால் என்னைப் போன்ற ‘கட்டிப்பிடியாளர்களை’ நோக்கி மக்கள் வரமாட்டார்கள்.
“நாம் அனைவரும் ஆன்லைனில் இருப்பதால் ஒருவருடன் ஒருவர் நல்ல தொடர்பில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அதனால் (இணையத்தால்) தான் நாம் அனைவரும் தொடர்பில்லாமல் இருக்கிறோம்.”
“நம் அனைவரும் நெருக்கத்தை வேண்டுகிறோம். ‘என்னை யாராவது கட்டிப்பிடித்தால் நன்றாக இருக்கும். என்னை உண்மையாக மற்றவர்கள் பார்க்க வேண்டும். என் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சுவர் உடைந்து ஒருவரால் கட்டிப்பிடிக்கப்பட வேண்டும்,’ என்று கூற தயக்கம் தேவையில்லை.”

பட மூலாதாரம், Samii Wood
இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
ஜெர்மனியின் போகமில் அமைந்திருக்கும் ரூர் பல்கலைக்கழத்தின் காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறையின் ஆய்வாளர்களான டாக்டர் ஜூலியன் பகேய்ஷெர் மற்றும் அவர் சகாக்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், “தொடுதல் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பழக்கமான நபர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளரின் தொடுதலால் ஏற்படும் நன்மைகளுக்கு இடையே வேறுபாடுகள் ஏதும் இல்லை என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
லண்டனியின் யுனிவெர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த, காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறைப் பேராசிரியரான சோஃபி ஸ்காட் இது குறித்து கூறும் போது, ஒருவரை மற்றொருவர் தொடும் போது பலன்கள் உள்ளது என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவு முறையானது மிகவும் முக்கியமானது என்றார்.
மக்களை கண்காணிக்கும் பகுதி ஒன்றுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது மூளை எவ்விதம் செயல்படுகிறது என்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. என்று மற்றொரு ஆய்வறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒருவரின் துணை அவரின் கையைப் பிடிக்கும் போது, வலிக்கான எதிர்வினை குறைவாக இருந்தது. சிக்கலான சூழலில் இருந்து கொஞ்சம் ஆசுவாசமாக உணரும் வகையில் அங்கே வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. உங்களின் கையைப் பற்றிக் கொண்டது ஏதோ ஒரு நபர் அல்ல. அவர் உங்களின் துணை.”
“தொழில்முறையாக ஒருவர் இதனை செய்யும் போது, நீங்கள் அந்த நபருடன் இப்படியான ஒரு உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு கவலையை அளிக்கிறது. உங்களின் கையை யாரோ ஒருவர் பற்றிக் கொள்ள நீங்கள் அனுமதிப்பதில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
“முடி வெட்டிக் கொள்ள, கை மற்றும் கால் நகங்களை அழகாக்கிக் கொள்ள மக்கள் விரும்புவதுண்டு. ஆனால் அவை அனைத்தும் உடலின் நடுநிலை உணர்வுகளைக் கொண்ட பாகங்கள். ஆனால் ஒருவரை அணைத்துக் கொள்வது என்பது அவர்களின் உணர்வு மிக்க பகுதிகளுக்கு அருகே செல்வதைப் போன்றது. மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், இது பாதகமான சூழலை உருவாக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
தொடுதலால் ஏற்படும் பலன்கள், அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
டேப்பிங், டை-சீ போன்ற குணமடைதலுக்கான மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்த போது வலேரியோவுக்கு கட்டிப்பிடி சிகிச்சைப் பற்றி தெரிய வந்தது.
“இது அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.
மனதிற்கு இதம் அளிக்கும் அமைதியான இசையை இசைக்க வைத்து, முதலில் அங்கே பங்கேற்கும் நபர்கள் அனைவரும் ஒன்றாக ஈடுபடும் வகையில் ‘வார்ம்-அப்’ மற்றும் கட்டிப்பிடித்தல் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி, பாதுகாப்பான சூழலை சமி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார், என்று வலேரியா தெரிவிக்கிறார்.
உங்களின் மனத்திரையை உடைக்க சில பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்ட பிறகு, தரையில் படுத்து, முன்பின் அறிமுகம் இல்லாத நபரை கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இயற்கையாகவே ஏற்படுகிறது.
“கட்டிப்பிடிப்பதற்கு முன்பே, இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் உடைந்து அழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சில உணர்வுகளை அந்த பயிற்சிகள் மேலெழும்ப வைக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
சமியிடம் தனி நபருக்கான சிகிச்சைகளை மேற்கொண்ட வலேரியா, இது ஆழமான இணைப்பிற்கு வழி வகை செய்கிறது என்கிறார்.
“பின்னால் இருந்து ஒருவர் கட்டிக் கொள்ளும் போது, ஒரு ஆணை ஒரு பெண் அணைக்கும் போது பலவீனமாக உணர வைக்கிறது. அது ஒருவர் உங்களை தாங்கிக் கொள்வதை உணர வைக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
“அதன் பிறகு எனக்கு ஆதரவு கிடைத்தது போன்று உணருகிறேன். என்னுடைய பாரத்தையே இறக்கி வைத்தது போன்று அது உணர வைக்கிறது. என் மனத்திரை கீழிறங்கியது.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU