SOURCE :- BBC NEWS

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது “ஒரு சிறப்பான செயல்” என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது “முட்டாள்தனமாக” இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை “முழுமையாக சட்டவிரோதமானது” என்று விமர்சித்துள்ளனர்.

வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் இதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

விமானம் குறித்த செய்திகள் “தவறானவை” எனவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன எனவும் கத்தார் முன்பு கூறியது.

தற்போது கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அதிபர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்வது சட்டப்பூர்வமானதா என்பதைக் குறித்து பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

விமானம் குறித்த தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமையன்று கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் ஜம்போ ஜெட் விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்க திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விமானம் மறுசீரமைக்கப்பட்டு, அதிபர்கள் பயணிக்கும் விமானமாக அறியப்படும் “ஏர் ஃபோர்ஸ் ஒன்” எனும் பெயரில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டார். அந்தப் பதிவில், “பாதுகாப்புத்துறை 40 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை தற்காலிகமாக மாற்றுவதற்காக, மிகவும் வெளிப்படையான மற்றும் பொதுவான பரிவர்த்தனையாக 747 விமானத்தை இலவசமாகப் பெறுகிறது.” என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது கத்தாரின் சிறந்த செயல். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். இதுபோன்ற சலுகையை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்” என்று டிரம்ப் கூறினார்.

கடந்த பிப்ரவரியில், இரண்டு புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை போயிங் நிறுவனத்திலிருந்து நேரடியாக பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பற்றி, “போயிங் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை “ஒரு விமானத்தை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு விமானத்தைப் பெறலாம்” என்றும் கூறியுள்ளார்.

 பாம் பீச்

மேலே உள்ள படத்தில் காணப்படும் கத்தார் விமானம் பிப்ரவரியில் புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் படம் பிடிக்கப்பட்டது. அங்கு டிரம்ப் அந்த விமானத்தை நேரில் பார்வையிட்டார்.

2015-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விவரக்குறிப்பு சுருக்கத்தின்படி, அந்த விமானத்தில் மூன்று படுக்கையறைகள், தனிப்பட்ட ஓய்வு அறை மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும் அது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும் என ஒரு கத்தார் அதிகாரி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இதற்கு பல ஆண்டு காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, டிரம்ப் பதவிக்காலத்தின் முடிவை நெருங்கும் வரை அந்த விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு அந்த விமானம் நேரடியாக அவரது அதிபர் காப்பகத்துக்கு அனுப்பப்படும் என்றும், அதிபர் பதவி முடிந்த பிறகு “அதை பயன்படுத்த மாட்டேன்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆயினும், இந்த நடவடிக்கை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் லாரா லூமர் போன்ற நீண்ட கால டிரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது

“இது உண்மையாக இருந்தால், இந்த நிர்வாகத்தின் மீது இது ஒரு பெரும் களங்கமாக இருக்கும்,” என லூமர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பரிசு சட்டப்பூர்வமானதா?

இந்த பரிசை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனடர் ஆடம் ஷிஃப், அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவரும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டுத் தலைவரிடமிருந்து “எந்தவொரு பரிசையும்… எந்த வகையிலும்” ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த விதி அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ரீதியில் லஞ்சம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது” என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் ஃபிராங்க் கோக்லியானோ.

“இது நிச்சயமாக அரசியலமைப்பின் எல்லைகளை மீறுகிறது. இந்த அளவிலோ அல்லது இது போன்ற ஒரு பரிசையோ நாங்கள் கண்டதில்லை” என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ மோரன் கூறுகிறார்.

 ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் .

பட மூலாதாரம், Getty Images

1966ஆம் ஆண்டின் வெளிநாட்டு பரிசுகள் மற்றும் அலங்காரச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள், வெளிநாட்டு பரிசுகளை ஏற்கும் விதிமுறைகளை வகுத்துள்ளன.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேற்பட்ட பரிசுகளை ஏற்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாக கருதப்படுகின்றது.

தற்போது, 480 டாலர் குறைவான மதிப்புடைய பரிசுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

விமானம் இறுதியில் தனது “காப்பகத்துக்கு” செல்லும் என டிரம்ப் கூறியிருந்தாலும், தனது அருங்காட்சியக அறக்கட்டளைக்கு செல்லும் என்பதையே டிரம்ப் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக தங்களுடைய ஆவணங்களை சேமிக்கும் நூலகத்தையும் (காப்பகம்), நினைவுச் சின்னங்களால் நிரம்பிய அருங்காட்சியகத்தையும் முன்னாள் அதிபர்கள் வைத்திருப்பார்கள். இவை பொதுவாக தனியார் நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகின்றது.

விமானம் நேரடியாக அதிபருக்கு வழங்கப்படாமல், முதலில் அரசு நிர்வாகத்துக்கு தரப்பட்டு பின்னர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டாலும், இது அரசியலமைப்பை மீறுவதைத் தவிர்க்க முடியாது என்று பிபிசி வெரிஃபையுடன் பேசிய நிபுணர்கள் கூறினர்.

கரோலின் லீவிட்

பட மூலாதாரம், Getty Images

வாஷிங்டனில் உள்ள சிட்டிசன்ஸ் ஃபார் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் எதிக்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ், டிரம்ப் பதவியிலிருந்து விலகிய பிறகு அந்த விமானத்தை பயன்படுத்தினால் அது எல்லையை மீறுவதாக இருக்கும் என கூறினார்.

“ரீகனின் ஏர் ஃபோர்ஸ் ஒன் அவரது அதிபர் காப்பகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த விமானம் செயலிழக்கப்பட்டது. ரீகன் அதில் மீண்டும் பயணம் செய்யவில்லை. எனவே அது அருங்காட்சியகப் பொருளாக வைக்கப்படுகின்றது.”என்றார்.

விமானத்தை ஏற்றுக்கொள்வது ஏன் சட்டப்பூர்வமாக இருக்க முடியும் என்பதை விளக்கும் ஒரு ஆவணத்தை அமெரிக்க நீதித்துறை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆவணம் இன்னும் பொது வெளிக்கு அளிக்கப்படவில்லை.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டிடம் விமானத்தை பெறுவதில் உள்ள சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இதற்கான சட்ட விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிச்சயமாக, இந்த அரசாங்கத்திற்கு செய்யப்படும் எந்த நன்கொடையும் முழுமையாக சட்டப்படி செய்யப்படுகிறது” என்றார்.

மத்திய கிழக்கில் டிரம்பின் குடும்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

அமெரிக்காவுக்கான முதலீட்டை அதிகப்படுத்தும் நம்பிக்கையில் அதிபர் டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதிபரின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியரால் நிர்வகிக்கப்படும் டிரம்ப் அமைப்பால் பல வணிக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, டிரம்பின் இந்த பயணம் அமைந்துள்ளது

இதில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் சொகுசு குடியிருப்புகள் கட்டும் திட்டங்களும் உள்ளன.

ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது வணிக நிர்வாகப் பொறுப்புகளை மகன்களுக்கு ஒப்படைத்தார்.

எரிக் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

மே மாதத் தொடக்கத்தில், டிரம்ப் அமைப்பால் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. கத்தாரின் தலைநகரான தோகாவின் வடக்கே ஆடம்பர கோல்ஃப் மைதானமும், சொகுசு குடியிருப்புகளும் கட்டுவதற்கான ஒப்பந்தம் அது.

“கத்தாரி டயர் மற்றும் டார் குளோபல் ஆகியோருடன் இணைந்து டிரம்ப் பிராண்டை கத்தாரில் விரிவுபடுத்துவதைப் பற்றி நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம்” என்று அச்சமயத்தில் எரிக் டிரம்ப் தெரிவித்தார்.

டார் குளோபல் என்பது சௌதி அரசின் பொதுக் கட்டுமான நிறுவனம். கத்தாரி டயர் என்பது கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம்.

“துபையின் மையத்தில் 80 தளங்களைக் கொண்ட, “ஆடம்பர வாழ்க்கை மற்றும் உலகத்தரமான விருந்தோம்பலுடன் பிராந்தியத்தின் முதல் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் & டவர்” கட்டப்படும் என ஏப்ரல் 30 அன்று டிரம்ப் அமைப்பு அறிவித்தது.

எரிக் டிரம்ப் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார். மே 1ம் தேதி அன்று நடைபெற்ற டோக்கன் 2049 என்ற கிரிப்டோகரன்சி மாநாட்டில் அவர் பேசினார்.

டிரம்ப் இந்த பயணத்தின் போது தனது குடும்ப வணிகத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட போது, அதிபர் தனது தனிப்பட்ட நலனுக்காக எதையும் செய்வதாகக் கூறுவது “அபத்தமானது” என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதிலளித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU