SOURCE :- BBC NEWS

“எங்களுக்கு வரும் கனவுகளிலும் மன அழுத்தம் எதிரொலிக்கிறது. கடன் தொல்லை, வேலை, மின்சாரக் கட்டணம், வீட்டுக்கடன் தவணை என பிரச்னைகளே இப்போது வாழ்க்கையாகிவிட்டது!”
கனடாவில் வசிக்கும் ரமண்தீப் சிங் என்பவரின் கவலை நிறைந்த வார்த்தைகள் இவை.
பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்த ரமண்தீப் சிங், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்போது கனடாவின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்.
கனடாவுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாபில் கல்லூரி ஒன்றில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரமண்தீப் சிங்.
“கனடா என்பது போராட்டத்தின் மற்றொரு பெயர், ஆனால் கனடா ஒரு மோசமான நாடு என்றும் சொல்லிவிட முடியாது, கனடா சிறந்த நாடு, எனக்கு மிகவும் பிடித்தமான நாடு என்றாலும், கொரோனாவுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது” என்று ரமண்தீப் சிங் கூறுகிறார்.
கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன.
இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகளால் அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது.

நிலைமை எப்படி மாறியது?
ரமண்தீப் சிங் கட்டுமானத் துறையில் பணிபுரிகிறார். கனடாவில் கணிசமான வருமானம் தரும் தொழில் இது.
தற்போது கனடாவில் நிலவும் சூழ்நிலை குறித்த தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “இங்கு வாழ்க்கை நடத்துவது கடினமாகிவிட்டது, வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன, பணவீக்கம் அதிகரித்து வருவதுடன், வீட்டு கடன் தவணைத் தொகை அதிகரித்துவிட்டது. இந்தக் காரணங்களால், கனடாவில் வசிக்கும் குடியேறிகள் சிரமப்படுகிறார்கள்.”
“நானும் என் மனைவியும் கடினமாக உழைத்து, சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினோம். வாழ்க்கை சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது. சில வருடங்களில் பழைய வீட்டை விற்றுவிட்டு, இரு மடங்கு விலையில் பெரிய வீட்டை வாங்கினோம்” என்று ரமண்தீப் கூறுகிறார்.
ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பிறகு, கனடாவில் வீட்டுச் சந்தை சரியத் தொடங்கியது, அப்போது தொடங்கிய ரமண்தீப் சிங் குடும்பத்தின் பிரச்னைகள் இன்னும் தொடர்கின்றன.
கடன் தவணை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கள் நிலைமை மோசமாகிவிட்டதாகக் கூறும் ரமண்தீப், இப்போது என்ன செய்வது என்று தனக்குப் புரியவில்லை என்று கூறுகிறார். இது தவிர, கனடாவில் பணவீக்கம் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பும் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கின்றன.
“கனடாவிற்கு வந்து பத்தாண்டுகளான பிறகு, இங்கு வந்து குடியேறும் எங்கள் முடிவு தவறானது என்று இப்போது தோன்றுகிறது. வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என்று ரமண்தீப் சிங் கூறுகிறார்.
“தற்போது கனடாவில் வாழ்வது கடினமாகிவிட்டது, தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. நாங்கள் இந்தியாவிலுள்ள அனைத்தையும் விற்றுவிட்டு வந்துவிட்டோம்.”
“கனடா மிகவும் அழகான நாடு, எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முன்னேற வாய்ப்பளிக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையால், இங்கு வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது” என்று ரமண்தீப் கூறுகிறார்.
கனடாவின் தற்போதைய நிலைமை, புலம்பெயர்ந்தோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
புதிய குடியேறிகளின் நிலைமை மேலும் கடினம்

கனடாவிற்கு புதிதாக குடியேறுபவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் கடுமையாகிவிட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல பிரச்னைகளுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்த போராடி வருகின்றனர்.
குறிப்பாக வீட்டுப் பிரச்னை புதிய குடியேறிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ரமண்தீப்பைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த மிதுல் தேசாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கனடா வந்தார்.
தற்போது ஒண்டேரியோவில் வசித்து வரும் மிதுல் தேசாய், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிகிறார்.
“முன்பு எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் இப்போது குடியிருக்க வீடு கிடைப்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டுக்கான தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த முறை தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருக்கப்போவது வீடு மற்றும் விலைவாசிதான்” என்று மிதுல் தேசாய் கூறுகிறார்.
மேலும், “சர்வதேச மாணவர்களின் வருகை கனடாவின் வீட்டு வாடகையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. ஒரு காலத்தில் $300 ஆக இருந்த அடித்தள வீடுகளின் வாடகை $1500 முதல் $2000 வரை அதிகரித்தது” என்று மிதுல் தேசாய் கூறுகிறார்.
வீட்டு வாடகை அதிகரித்ததால், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வீடுகளை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இப்போது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பல வீடுகள் காலியாக உள்ளன. இதனால், வாடகைக்கு வீடு கொடுத்து சம்பாதித்து வந்த வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
2023-2024 ஆம் ஆண்டில் கனடா மாணவர் விசா திட்டத்தில் அப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ பெருமளவிலான மாற்றங்களைச் செய்தார். இதனால், மாணவர்களின் வருகை முன்பை விட கணிசமாகக் குறைந்துவிட்டதன் எதிரொலியாக, நாட்டின் வாடகை சந்தை நேரடியாக பாதிக்கப்பட்டதால், இப்போது வீடு மற்றும் வேலை இரண்டும் மக்களின் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக மாறிவிட்டன.
சர்வதேச மாணவர்களின் எதிர்பார்ப்புகள்
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கனடா மிகவும் பிடித்த நாடாக இருந்து வருகிறது.
பஞ்சாப், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பிகார், கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்க வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடாவிற்கு அவர்கள் வந்துள்ளனர்.
நவ்ஜோத் சலாரியா என்பவர், 2022 ஆம் ஆண்டில் மாணவராக கனடாவிற்கு வந்தவர். இவர் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போது அவர், பணி அனுமதி விசா (work permit) பெற்று வேலையில் இருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடைய பணி அனுமதி காலாவதியாகிவிடும் என்பதால் அவரின் கவலை அதிகரித்துவிட்டது
“எனக்கு வேலை இருக்கிறது, ஆனால் கனடா நிரந்தர குடியுரிமை (PR) பெறவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். தற்போது இது தொடர்பாக எதுவும் நடக்கவில்லை” என்று நவ்ஜோத் சலாரியா கூறினார்.
அண்மையில் நிரந்தர குடியுரிமை தொடர்பான விதிமுறைகளிலும் கனடா அரசு பெரிய மாற்றங்களைச் செய்துள்ளதால், கனடாவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் பலருடைய பணி அனுமதி விசா காலாவதியாகிவிட்டன. இதனால், கனடாவில் குடியேற வேண்டும் என்ற மாணவர்களின் கனவுகள் கானல்நீராகிவிட்டன. அதில், பஞ்சாப் மாநிலத்தின் தரன்தாரனை சேர்ந்த சிமர்ப்ரீத் சிங் என்பவரும் ஒருவர்.
“எனது பணி அனுமதி காலாவதிவிட்டதால் இனி கனடாவில் வேலை செய்ய முடியாது. வருமானம் இல்லாமல், செலவுகளுக்கு பணம் இல்லாமல் நிலைமை மோசமாகிவிட்டது” என்று சிமர்ப்ரீத் சிங் கூறினார்.
“இப்போது கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதுதான் எங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்று அவர் கூறினார்.

குஜராத்தை சேர்ந்த சோனல் குப்தாவும் கனடாவுக்கு கல்வி பயில வந்தவர்தான். தற்போது, அவர் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கிறார்.
கனடாவின் நிலைமை முன்பை விட நிறைய மாறிவிட்டது என்று சோனல் குப்தா கருதுகிறார்.
“கனடாவின் தற்போதைய நிலைமைக்கு வெளிநாட்டு மாணவர்களே காரணம் என்று கனடாவின் குடிமக்கள் கருதுகின்றனர். அது உண்மையல்ல. மாணவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இங்கு வந்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு” என்று சோனல் குப்தா கூறுகிறார்.
கனடாவின் தேர்தல்களை வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சோனல் குப்தா, நிலைமை எப்படியிருந்தாலும், ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிப்பதாக கூறுகிறார்.
கனடாவில் வீடு பற்றாக்குறை தொடர்பான தரவுகள்

கனடா தற்போது குடியிருப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அந்நாட்டு அரசின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் நான்கு லட்சம் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன.
கனடாவின் ஸ்கொட்டியாபேங்க் 2021 அறிக்கையின்படி, பிற G-7 நாடுகளை விட கனடாவில் வீடுகள் குறைவாக உள்ளது. ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கான வீடுகள் தொடர்பாக பிற ஜி-7 நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் வீடுகளின் எண்ணிக்கை குறைவு.
2016 ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகைக்கு ஏற்ப வீடுகள் கட்டுவதற்கான வேகம் குறைந்துள்ளது என்பதை தரவு தெளிவாகக் காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டில், 1,000 பேருக்கு 427 வீடுகள் என்றிருந்த நிலை, 2020 ஆம் ஆண்டில் 424ஆகக் குறைந்துள்ளது.
“கனடாவின் மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் வீடுகள் கட்டப்படவில்லை, இது வீடுகளின் விலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று பிராம்ப்டனில் ரியல் எஸ்டேட் சந்தையுடன் தொடர்புடைய மின்கல் பத்ரா கூறுகிறார்.
“கனடாவில் வீடு வாங்குவது என்பது இப்போது கனவாகிவிட்டது, இங்கு, கடந்த சில மாதங்களில் வீட்டு விலைகள் 15-20 சதவீதம் அதிகரித்துள்ளன” என்று மின்கெல் பத்ரா சுட்டிக்காட்டுகிறார்.
இது, வாடகை சந்தையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, வீட்டு வாடகைகள் முன்பை விடக் குறைந்துள்ளன. இதன் காரணமாக, முதலீட்டிற்காக வீடு வாங்கியவர்கள் இப்போது தவணைகளைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் 2024 அறிக்கையுடன் 2019ம் ஆண்டின் அறிக்கையை ஒப்பிடும்போது, நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளது,
கல்வி அல்லது வேலைக்காக கனடாவுக்கு தற்காலிகமாக வந்து நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
கனடா அரசின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 889 மாணவர்கள் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், 25,605 வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கனடாவின் நிரந்தர குடியுரிமையைப் பெற்றனர், இது 2022 ஐ விட 30 சதவீதம் அதிகம்.
2023 ஆம் ஆண்டில், கனடா 4,71,808 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்டது. இது 2022ம் ஆண்டைவிட 7.8 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு, கனடா அரசு, அதன் குடியேற்றம் மற்றும் மாணவர் அனுமதிக் கொள்கைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்தது. எனவே தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

கனடாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் குடியேற்றம் மற்றும் குடியிருப்பு பிரச்னை மிக முக்கியமானது.
குடியிருப்புத் தவிர, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்துவரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அண்மையில் அமெரிக்கா விதித்த வரியின் தாக்கம் ஆகியவையும் இந்தத் தேர்தல்களில் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.
கனடாவில் லிபரல் கட்சி 2015 முதல் ஆட்சியில் உள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, இங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ், என்டிபி, கிரீன் பார்ட்டி உள்ளிட்ட எதிர்கட்சிகள் லிபரல் கட்சியை கேள்விகளால் துளைத்தெடுக்கின்றன.
குறிப்பாக, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர், தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோருகின்றனர்.
லிபரல் கட்சித் தலைவரும், கனடா பிரதமருமான மார்க் கார்னி, “நாட்டில் வீட்டுவசதி நெருக்கடி நிலவுகிறது, நான் ஆட்சிக்கு வந்தால், ஐந்து லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவேன்” என்று கூறுகிறார்.
“கடந்த சில ஆண்டுகளாக பல காரணங்களால், குறிப்பாக குடியிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை கடினமாக உள்ளது. ஆனால் கனடாவை மேம்படுத்த எங்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என்று மிசிசாகா-மால்டன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான லிபரல் கட்சியை சேர்ந்த எக்விந்தர் கஹீர் கூறுகிறார்
கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் வழக்கறிஞர் ஹர்மிந்தர் சிங் தில்லான், ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.
“கனடாவில் குடியிருப்புகள் தொடர்பான நெருக்கடி மிகப்பெரியது, குறிப்பாக 2018 முதல் 2022 வரை வீடுகளின் விலைகள் இரட்டிப்பாகிவிட்டது, 2025 தேர்தலில் வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கா வரிகளை அதிகரித்துள்ளதால் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில மாணவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் குறைகிறது. ஏற்கனவே வேலையின்மையால் போராடி வரும் இளைஞர்களுக்கு இது இன்னும் பெரிய நெருக்கடியாக மாறி வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU