SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போலி பான் கார்டு தயாரிக்கும் கும்பல் சில வாரங்களுக்கு முன்பு பிடிபட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல்துறையினர் நடத்திய சோதனையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆவணங்கள் இன்றியும் போலியான ஆவணங்களைக் கொண்டும் தங்கி வேலை பார்த்ததாக 15 பேர் சிக்கியுள்ளனர்.
போலி பான் கார்டு தயாரித்த கும்பலிடம் போலி ஆவணங்களை வைத்து ஆதார் அட்டை வாங்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் சிக்கிய கும்பல்
கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு கரூர் நகரில் சிலர் போலி ஆவணங்களை தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் போது, போலி ஆவணங்கள் தயாரித்த 6 பேரைப் பிடித்து கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, போலீசாரிடம் சிக்கிய ஜெயக்குமார் (வயது 43) என்பவரிடம் சில ஆதார் படிவங்களை காவல்துறையினர் கைப்பற்றியதே இதில் முதல் புள்ளியாகும்.
அந்த படிவங்களில் இணைக்கப்பட்டிருந்த பான் கார்டு, இருப்பிடச் சான்று உள்ளிட்ட சில ஆவணங்களைப் பரிசோதித்த போது, அவை போலி அட்டைகள் என்பதும், இருப்பிடச் சான்றில் இருந்த கையெழுத்தும் போலி என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
அவரை விசாரித்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றிலுள்ள இ சேவை மையங்களில் பணியாற்றி வரும் கார்த்திக் (வயது 25) என்பவர் இதில் பிரதானப் பங்கு வகித்ததும் தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்களை ஆதாரமாக வைத்து, பலருக்கு இவர் ஆதார் அட்டை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TN POLICE
இவர்களுக்கு கணினி மையம் நடத்தி வரும் சம்பத்குமார் (வயது 29) மற்றும் கலைவாணி ஜெனிஃபர் (வயது 39) ஆகியோரும், மற்றொரு ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் சீனிவாசன் (வயது 42) என்பவரும் உதவியதாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 132 போலி பான் கார்டுகள், 69 ஆதார் விண்ணப்பப் படிவங்கள், கணினி, லேப்டாப், சில செல்போன்கள் என பல பொருட்களையும் கைப்பற்றியதாக கரூர் டவுன் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
6 பேர் மீதும் தவறான மற்றும் போலியான ஆவணங்களை உருவாக்குவது,போலியான ஆவணங்களை உண்மையாக்க முயற்சி செய்வது, போலி முத்திரைகளை தயாரித்து பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பான் கார்டு விண்ணப்பம் – தேவைப்படும் ஆவணங்கள்
இந்தியாவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்துப் பெற்றுத் தருவதற்கு சில அதிகாரப்பூர்வ ஏஜென்சிகளை மாநில வாரியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்று யுடிஐ இன்ஃப்ராஸ்டிரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமாகும்.
தமிழகத்தில் இந்த பணியைச் செய்து வரும் யுடிஐ இன்ஃப்ராஸ்டிரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர்கள், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி இணையத்தில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பான்கார்டு விண்ணப்பிப்பது மற்றும் பெற்றுக்கொள்வது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய யுடிஐ இன்ஃப்ராஸ்டிரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை கிளை ஊழியர்கள், ”ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தனிநபர் அடையாள ஆவணங்கள், முகவரிக்கு இந்த ஆவணங்கள் அல்லது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புப் புத்தகம், வயதுக்கு பிறப்புச் சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகிய ஆதார ஆவணங்களுடன் 49 ஏ படிவத்தில் உரிய விபரங்களைப் பூர்த்தி செய்து பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவற்றைப் பரிசீலித்து, வருமான வரித்துறையே நிரந்தர கணக்கு எண்ணை (PAN) வழங்கும்.” என்று தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஆவணங்கள் எதுவுமே இல்லாதவர்களுக்கு போலியாக பான் கார்டு ஃபோட்டோஷாப் மூலமாகத் தயாரித்து, அதை ஆதாரமாக வைத்து, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து வாங்கி, அதை வைத்து புதிய பான் கார்டுகளை பலருக்கும் இந்த கும்பல் வாங்கிக் கொடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
போலி ஆவணங்களைக் கொண்டு பெரும்பாலும் வட மாநிலத்தவர்களுக்கே இவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.
”கோவிட் பெருந்தொற்று காலத்துக்குப் பின்பே, இந்த கும்பல் போலி ஆவணம் தயாரிக்கும் வேலையைத் துவக்கியுள்ளது. போலி பான்கார்டு போன்றவற்றைத் தயாரித்து, போலி முத்திரையை வைத்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பலருக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கரூர் டவுன் காவல் ஆய்வாளர் மணிவண்ணன்.

பட மூலாதாரம், Getty Images
அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
சில மாதங்களுக்கு முன்பு கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ஆவணங்களின்றி வங்கதேசத்தினர் பலர் இருப்பதாக சர்ச்சை எழுந்தது
குறிப்பாக, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த ஆண்டு செப்டம்பரில் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டிலுள்ள கோவை நகரைக் குறிவைத்து வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக நுழைகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார். அசாமுக்குள் ஊடுருவப் பார்த்த 50 பேரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாகக் கூறிய அவர், அவர்களின் முதன்மை இலக்கு கோவைதான் என்றும் கூறியிருந்தார்.
“அவர்கள் இங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறார்கள். எனவே, கோவையில் சமீபத்தில் ஜவுளித்துறை சார்ந்த பணிகளில் சேர்ந்தவர்கள் பற்றி விசாரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன். சட்டவிரோதமாக நுழைபவர்களில் 10% பேர்தான் சிக்குகின்றனர்.” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின்பே போலி ஆவணங்களைக் கொண்டு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தங்கியுள்ளவர்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ” இந்த கும்பலிடம் எவ்வளவு பேர் போலி ஆவணம் வாங்கி, ஆதார ஆவணங்களை வாங்கியுள்ளனர், ஏதாவது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களிடம் இவற்றை வாங்கியுள்ளனரா என்று விசாரித்து வருகிறோம். விசாரணை முடியாமல் இப்போதைக்கு வேறு எந்தத் தகவலையும் உறுதியாகத் தெரிவிக்க இயலாது.” என்றார்.
கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர், நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனியார் மில்கள் மற்றும் பல வணிக நிறுவனங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
மே இரண்டாவது வாரத்தில் மட்டும் வீரியம்பாளையம் என்ற இடத்தில் தனியார் மில்லில் பணியாற்றிய 13 பேரும், வேறு நிறுவனங்களில் பணியாற்றிய 2 பேரும் என வங்கதேசத்தைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய, பெயர் தெரிவி்க்க விரும்பாத உளவுத்துறை அதிகாரி ஒருவர், ”கைதான 15 பேரும், மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் உள்ள முகவரிகளில் ஆதார் அட்டையை போலியாகத் தயாரித்து வைத்திருந்தனர். கரூரில் சிக்கிய கும்பலிடம் போலி பான் கார்டு வாங்கி அதை வைத்து ஆதார் அட்டை வாங்கியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.” என்றார்.
மில்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில், வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றினால் அவர்களிடம் உள்ள ஆவணங்களை சரி பார்த்து, அவை போலி ஆவணங்களாக இருக்கும்பட்சத்தில், அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளதாகவும், விரைவில் தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளை அழைத்து, இதுதொடர்பாக அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU