SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கே. கஸ்தூரிரங்கன் செலுத்தியிருக்கிறார்.
1940களின் இறுதியில் கேரளாவின் எர்ணாகுளத்தில் இரவு நேரத்தில் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.
வானில் தெரிந்த சந்திரனும் நட்சத்திரங்களும் அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததோடு, ஆர்வத்தையும் தூண்டின.
இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் உறவினரான நாராயணமூர்த்தி, “நீ பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கணிதத்தையும் இயற்பியலையும் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்குப் பிறகு, அந்தச் சிறுவனின் ஆர்வம் இந்தப் பாடங்களின் மீது திரும்பியது. உறவினர் சொன்ன அந்த ஒரு அறிவுரை, அவரது வாழ்க்கையை வெகுவாக மாற்றியது.
இது நடந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகு, 40களில் சிறுவனாக இருந்த அந்த மனிதர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவரானார். அவர் கஸ்தூரிரங்கன் கிருஷ்ணமூர்த்தி. சுருக்கமாக, கே. கஸ்தூரிரங்கன்.
மேலே உள்ள சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கும் Space and Beyond: Professional Voyage of K. Kasturirangan நூல் (ஆசிரியர்: பி.என். சுரேஷ்), கஸ்தூரிரங்கனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்துக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்கிறது.
இப்படியாக எர்ணாகுளத்தில் வசித்துவந்த கே.எம். கிருஷ்ணசாமி ஐயருக்கும் விசாலாட்சிக்கும் 1940ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பிறந்தார் கஸ்தூரிரங்கன். பள்ளிக் கல்வியை கேரளத்தில் துவங்கியவர், பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
அதற்குப் பிறகு, ஆமதாபாத்தில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியில் Experimental High Energy Astronomy துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இதற்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) சேர்ந்த கே. கஸ்தூரிரங்கன், அந்த நிறுவனத்தின் பல வெற்றிகரமான பல திட்டங்களில் பங்காற்றியவர்.
இந்தியாவின் முதல் இரண்டு புவி ஆய்வு செயற்கைக்கோள்களான பாஸ்கரா I மற்றும் பாஸ்கரா II ஆகியவற்றின் திட்ட இயக்குனராக இருந்த கஸ்தூரிரங்கன், இந்தியத் தொலை உணர்வு செயற்கைக்கோள் IRS – 1Aவிலும் முக்கியப் பங்கு வகித்தார். முடிவில், 1994ல் இஸ்ரோவின் தலைவராகவும் உயர்ந்தார். 2003வரை அந்தப் பொறுப்பில் அவர் இருந்த காலகட்டத்தில் இஸ்ரோ பல உயரங்களைத் தொட்டது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரோ வளர்ச்சி
“கஸ்தூரிரங்கன் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான், கண்காணிப்பு செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு செயற்கைக்கோள், செயற்கைக்கோள்களை ஏவும் சேவைகள் போன்றவற்றில் இந்தியா சோதனை நிலையிலிருந்து வெற்றிகரமாக செயல்படும் நிலைக்கு நகர்ந்தது. அவருடைய தொலைநோக்குப் பார்வையின் காரணமாகத்தான் இன்சாட் – 2இ செயற்கைக்கோளின் 10 டிரான்ஸ்பாண்டர்களை இன்டெல்சாட்டுக்கு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு குத்தகைக்குவிடும் வர்த்தக முயற்சியில் 1999லேயே இஸ்ரோவால் ஈடுபட முடிந்தது. இந்த முயற்சியால்தான் இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் பரவின.
டாக்டர் கஸ்தூரிரங்கனின் காலகட்டத்தில்தான் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்றவை வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்து, இஸ்ரோ ஒரு வெற்றிகரமான விண்வெளி ஆய்வு நிறுவனமாக உருவெடுத்தது. 1998ல் தேசிய தொழில்நுட்ப தினத்தில் ஒருவர உரையாற்றும்போது, இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் பயன்படுத்தியே சந்திரனைச் சுற்றிவரச் செய்யும் செயற்கைக்கோள் ஒன்றை ஏவ முடியும் எனக் குறிப்பிட்டார். அவருடைய இந்த யோசனையே பிறகு 2003ல் சந்திரயான் திட்டமாக அறிவிக்கப்பட்டது” என்கிறார் இஸ்ரோவில் சந்திரயானின் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.

பட மூலாதாரம், Getty Images
சுயச்சார்புக்கு முக்கியத்துவம்
“டாக்டர் கஸ்தூரிரங்கன் இஸ்ரோவில் பணியாற்றிய காலகட்டத்தில், இஸ்ரோ மிக முக்கியமான பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த முயற்சிகளில் அவரது பங்களிப்பு மிக மிக தேவையானதாகவும் முக்கியமானதாகவும் இருந்தது. நான் அவருடன் பிஎஸ்எல்வி திட்டம் உட்பட பல திட்டங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவற்றில் அவருடைய அறிவுரைகள் மிக முக்கியமானவை. அதேபோல, நான் இஸ்ரோவின் தலைவரான பிறகும் பல முறை டாக்டர் கஸ்தூரிரங்கனைத் தொடர்புகொண்டு, பல தருணங்களில் அவருடைய ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். அவருடைய இழப்பு, மிகப் பெரிய இழப்பு” என பிபிசியிடம் தெரிவித்தார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் சிவன்.
கஸ்தூரிரங்கன் இஸ்ரோவில் இருந்த காலகட்டத்தில் சுயச்சார்பு தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் என்கிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் த.வி. வெங்கடேஸ்வரன்.
“சுயசார்போடு இருப்பதை வளர்ச்சிக்கான முக்கியமான விஷயமாக கஸ்தூரிரங்கன் கருதினார். ஒரு தொழில்நுட்பத்தை நாம் உருவாக்காமல், வெளியில் இருந்துதான் வாங்குகிறோம் என்றாலும்கூட, அந்தத் தொழில்நுட்பம் குறித்து சொந்தமாக அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர். அதற்கென ஒரு உதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா தன்னுடைய ஏவுவாகனங்களுக்கு க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பியது. அப்போது இந்தியாவில் க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் இல்லை. வெளியில் இருந்து அதனை வாங்க முடிவுசெய்யப்பட்டது. இருந்தபோதும் ஒரு டன் எடையுள்ள க்ரையோஜெனிக் எஞ்சினை தயாரிக்கும்படி சதீஷ் தவான் உத்தரவிட்டார். அவ்வளவு சிறிய க்ரையோஜெனிக் எஞ்சினை வைத்து எதையும் சாதிக்க முடியாது; அப்படியிருக்கையில் அதை ஏன் செய்யச் சொன்னார் என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவுடன் க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் அதற்கான காரணம் புரிந்தது. எங்களுக்கு என்ன தேவை, எவ்விதம் தேவை என்பதை எங்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது என கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டுள்ளார்.” என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்
”ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு செயற்கைக்கோள்களை அளிக்க பல நாடுகள் முன்வந்தபோதும் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை இந்தியா தொடர்ந்து தயாரித்தது. அதனால்தான், பிற்காலத்தில் இந்தியாவால் பெரிய அளவிலான செயற்கைக்கோள்களைத் தயாரிக்க முடிந்தது. இதை சதீஷ் தவானிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன் என்றார் கஸ்தூரிரங்கன். சதீஷ் தவானிடமிருந்து அவர் முன்னெடுத்துச் சென்ற இந்தப் பார்வை மிக முக்கியமானது” என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

பட மூலாதாரம், Getty Images
டாக்டர் கஸ்தூரிரங்கனைப் பொறுத்தவரை காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் என்கிறார் நீண்டகாலமாக இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்து செய்தி சேகரித்துவரும் மூத்த பத்திரிகையாளரான டி.எஸ். சுப்பிரமணியன்.
“ஆர்யபட்டா, பாஸ்கரா, ஐஆர்எஸ் செயற்கைக்கோள்களில் இவரது பங்களிப்பின் முக்கியத்துவம் ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புறங்களுக்கு கல்வி அளிப்பதற்காக Edusat என்ற திட்டத்தை இவர் முன்னெடுத்தார். அந்த காலகட்டத்தில் ‘எடுசாட்’ போன்ற மிக அதிநவீன திட்டத்துக்கு இந்தியா தயாராக இருக்கவில்லை. இருந்தாலும், விண்வெளித் தொழில்நுட்பத்தை கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற அவருடைய பார்வை கவனிக்கத்தக்கது. மேலும், நிலவை ஆராயும் சந்திரயான் திட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தவர் டாக்டர் கஸ்தூரிரங்கன்தான். அவருடைய உத்வேகத்தினால்தான் அது சாத்தியமானது. அந்த வகையில் இஸ்ரோவுக்கு மகத்தான பங்களிப்பை டாக்டர் கஸ்தூரிரங்கன் வழங்கியிருக்கிறார்” என்கிறார் டி.எஸ். சுப்பிரமணியன்.
முன்னேற்றத்துக்கு சமத்துவமான சூழல் மிக முக்கியம் என்பதை அவர் உணர்ந்து, அதனை இஸ்ரோவில் முன்னெடுத்துச் சென்றார் கஸ்தூரிரங்கன் என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.
“1960களின் பிற்பகுதியில் ஆமதாபாத்தில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லேபரட்டரியில் ஆய்வுப் படிப்புக்காக சேர்ந்தார் கஸ்தூரிரங்கன். அங்கே அவருக்கு மிகப் பெரிய வியப்பு காத்திருந்தது. எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவதற்கு அங்கே சுதந்திரம் இருந்தது. பேராசிரியர் – மாணவர் என்ற வித்தியாசம் இல்லை. அதன் தலைவராக இருந்த விக்ரம் சாராபாயை எல்லோரும் ‘விக்ரம் பாய்’ என பெயர் சொல்லி அழைத்தார்கள்.
இப்படிப்பட்ட சமத்துவமான கலாசாரம்தான் சுதந்திர சிந்தனையை வளர்க்கும் என்பதைப் புரிந்துகொண்டு இஸ்ரோவில் அத்தகைய சூழலை உருவாக்கினோம் என்று குறிப்பிடுகிறார் கஸ்தூரிரங்கன். கஸ்தூரிரங்கன் மிக எளிய குடும்பத்திலிருந்து மேலே வந்தவர். இந்தியாவில் இருந்த படிநிலைச் சமூகம் தன்னுடைய காலத்தில் சமத்துவச் சமூகமாக மாறத் துவங்கியதுதான் தன்னைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம் என அவர் கருதினார். அவருடைய இந்தப் பார்வை மிக முக்கியமானது” என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

பட மூலாதாரம், Getty Images
விமர்சனத்துக்கு உள்ளான பரிந்துரை
இஸ்ரோவின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, 2003 முதல் 2009வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடீஸின் இயக்குநராகவும் கஸ்தூரிரங்கன் செயல்பட்டார். 2009 முதல் 2014வரை இந்தியாவின் திட்டக் குழுவின் உறுப்பினராகவும் கஸ்தூரிரங்கன் இருந்தார். விண்வெளித் துறை தவிர, சுற்றுச்சூழல், கல்வி ஆகிய துறைகளின் மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை குறித்து ஆராய்ந்த கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டக் குழு, 2013ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றை அளித்தது.
இந்தக் குழுவின் அறிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இருந்தபோதும் அதில் இருந்த சில பரிந்துரைகள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ. சுந்தர்ராஜன்.
“மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 64 சதவிகிதம் சூழல்ரீதியாக மிக முக்கியமானவை என மாதவ் காட்கில் அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கை இதனை 37 சதவிகிதமாக குறைத்தது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பரப்பின் அளவை இவரது குழு குறைத்தது குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் குவாரிகளோ, பெரிய நீர் மின் திட்டங்களோ கூடாது என்பதையும் கே. கஸ்தூரிரங்கன் அறிக்கை குறிப்பிட்டது.
இதற்காக மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழல் ஆணையம் ஒன்றையும் அவர் அமைக்க பரிந்துரைத்தார். அந்த விதத்தில் அவரது பரிந்துரைகள் மிக முக்கியமானவை” என்கிறார் கோ. சுந்தர்ராஜன்.
2020ல் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுக் குழுவின் தலைவராகவும் கே. கஸ்தூரிரங்கன் செயல்பட்டார்.
சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஏப்ரல் 25ஆம் தேதி காலை 10.43 மணியளவில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏப்ரல் 27ஆம் தேதி காலை பத்து மணி முதல் 12 மணிவரை பெங்களூருவில் உள்ள ராமன் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட்டில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU