SOURCE :- BBC NEWS

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்

“தீண்டாமையைவிட மோசமான அணுகுமுறையை சாம்சங் இந்தியா கடைபிடிக்கிறது. கீழே உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் தங்கள் எதிரில் அமர்ந்து கேள்வி கேட்பதாக நிர்வாகம் கூறுகிறது. தொழிலாளர் நலத்துறையும் கண்டுகொள்ளவில்லை” எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துகுமார்.

போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பியவர்களைப் பல்வேறு வகைகளில் நிர்வாகம் பழிவாங்குவதாகக் கூறி அடுத்தகட்ட போராட்டத்தை சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.

ஆனால், சி.ஐ.டி.யு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை சாம்சங் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் என்ன நடக்கிறது? ஏழு மாதங்கள் கடந்தும் போராட்டத்திற்கு முடிவு கிடைக்காதது ஏன்?

கடந்த ஜனவரி 27 ஆம் தேதியன்று தொழிற்சங்கத்தை அரசின் தொழிலாளர்  நலத்துறை பதிவு செய்தது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் தொழிற்சங்கப் பதிவு, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்கள் கைது, வழக்குகள் என நீண்டு, ஒரு கட்டத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சி.ஐ.டி.யு-வை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு வழக்கு தொடர்ந்தது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடவே, கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று தொழிற்சங்கத்தை அரசின் தொழிலாளர் நலத்துறை பதிவு செய்தது.

போராட்டம் நீடிப்பது ஏன்?

சி.ஐ.டி.யு.

அதேநேரம், பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களைப் பல்வேறு வகைகளில் நிர்வாகம் பழிவாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. ‘இதற்கான காரணத்தை சாம்சங் இந்தியா நிர்வாகம் கூறவில்லை’ என சி.ஐ.டி.யு தெரிவித்தது.

நிர்வாகத்தின் ஆதரவில் இயங்கும் தொழிலாளர் குழு (workers committee) ஒன்று பணியில் உள்ள தொழிலாளர்களிடம் வெற்று பேப்பரில் மிரட்டி கையெழுத்து வாங்குவதாக சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துகுமார் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களை, அவர்களுக்குத் தொடர்பில்லாத வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்வதாகக் கூறி தொழிலாளர் நலத்துறையில் சி.ஐ.டி.யு புகார் அளித்தது.

அடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் வெளிநபர்கள் மூலமாக சட்டவிரோத உற்பத்தியில் நிர்வாகம் ஈடுபடுவதாகக் கூறி ஆலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதை ஏற்காத சாம்சங் இந்தியா நிர்வாகம், பணிநேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 23 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்தது.

இதைக் கண்டித்து கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சுமார் 11 முறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், “எந்த சமரச முடிவையும் ஏற்காமல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் சாம்சங் நிர்வாகம், போராட்டம் நீடிக்கவும் தொழிற்சங்கத்தை இல்லாமல் ஆக்கவும் தேவையான அனைத்து தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறது” என்று குற்றம் சாட்டுகிறார் முத்துகுமார்.

சாம்சங் இந்தியா சொன்னது என்ன?

சாம்சங் தொழிலாளர்கள்

அதேநேரம், தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த சாம்சங் இந்தியா, “சட்டவிரோத போராட்டத்தை ஆலையின் உள்புறம் நடத்தி அசாதாரண சூழலை சில தொழிலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மீண்டும் பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியும் சிலரின் தவறான வழிகாட்டுதலால் ஏற்க மறுத்துவிட்டனர்” என்று முன்பு கூறியது.

மேலும், ஊழியர்கள் போராட்டத்தால் நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி தொழிலாளர்களின் குடும்ப நலமும் பாதிக்கப்படுவதாகக் கூறிய சாம்சங் இந்தியா நிர்வாகம், “தங்கள் தவறைத் திருத்திக் கொண்டு மீண்டும் பணியில் சேர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.

மீண்டும் பிரச்னை உருவானது ஏன்?

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் 6 மாதங்களாக தொடர்வது ஏன்? 5 கேள்வி பதில்கள்

ஆனால், தொழிற்சங்கத்துக்கு எதிராக ஊழியர்களைப் பல்வேறு வகைகளில் நிர்வாகம் அச்சுறுத்துவதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார்.

மார்ச் 7ஆம் தேதியன்று இரண்டாம் கட்ட போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பிய ஊழியர்களிடம் புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கொடுத்து அதில் கையெழுத்திடுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகக் கூறுகிறார் முத்துகுமார்.

ஒவ்வோர் ஆண்டும் அடிப்படை சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஊக்கத் தொகையாக நிர்வாகம் கொடுப்பதாகக் கூறும் முத்துகுமார், “ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத சி.ஐ.டி.யு ஆட்களுக்கு இல்லை எனக் கூறிவிட்டனர். அந்த வகையில் ஒவ்வொரு நபருக்கும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வர வேண்டியுள்ளது” என்கிறார்.

“தொழிலாளர் நலத்துறையில் புகார் கொடுத்தும் கடந்த மூன்று மாதங்களாக தொழிலாளர் நலத்துறை சார்பாக, தொழிற்சாலையில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை” எனவும் முத்துகுமார் குறிப்பிட்டார்.

முத்துகுமார்

தொடர்ந்து பேசிய அவர், “பணியிட மாறுதல் என்ற பெயரில் 15 ஆண்டுகளாக டெக்னீஷியனாக இருக்கும் ஊழியரை ஃபோர்க் லிஃப்ட் (Fork Lift) ஓட்டுமாறு கூறுகின்றனர். தரக் கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்த ஊழியர்களை உற்பத்திப் பிரிவில் பணியமர்த்துகின்றனர்” எனக் கூறுகிறார்.

மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த எளிதான பணிகளுக்கு மாற்றாக, கடினமான பணிகள் தரப்படுவதாகவும் முத்துகுமார் தெரிவித்தார்.

ஊழியர்களின் பெற்றோருக்கு காப்பீடு தருவதற்கு நிர்வாகம் மறுத்து வருவதாகக் கூறும் முத்துகுமார், “காப்பீடு வேண்டுமெனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை வேலை தெரியவில்லை என அவமதிக்கின்றனர்,” என்கிறார் அவர்.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

இதுதொடர்பாக, கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சாம்சங் இந்தியா நிறுவனப் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“பணி நீக்கம் செய்யப்பட்ட 23 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதால் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினோம். அதை நிர்வாகம் ஏற்கவில்லை. மாறாக, ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டனர்” எனக் கூறுகிறார்.

தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் யாஷின் பேகம் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையில், சாம்சங் இந்தியாவின் உற்பத்திப் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

“அப்போது சி.ஐ.டி.யு நிர்வாகிகளைப் பார்த்துப் பேசிய சாம்சங் இந்தியா நிர்வாகி ஒருவர், ‘இவ்வளவு நாள் கீழே உட்கார்ந்திருந்தனர். இப்போது எங்கள் எதிரில் அமர்ந்து பேசுகின்றனர்’ எனக் கூறினார். சாதி தீண்டாமையைவிட இது மோசமானது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இதை அதிகாரிகள்கூட கண்டு கொள்ளவில்லை” என்கிறார் முத்துகுமார்.

மேலும் பேசிய அவர், “நிர்வாகத்துடன் உடன்பாடு ஏற்படுத்துமாறு தொழிலாளர் நலத்துறை கூறுகிறது. ‘சங்கம் என்ற ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என சாம்சங் இந்தியா எதிர்பார்க்கிறது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வந்துவிட்டோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் யாஷின் பேகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. 'என்ன விவகாரம்?' எனக் கேட்டு பதில் அனுப்பினார். சி.ஐ.டி.யு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விளக்கம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தற்போது மூன்றாவது முறையாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகக் கூறும் முத்துகுமார், “சாம்சங் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போராட்டங்களிலும் பாடம் கற்றுவிட்டோம். அவர்கள் நியாயமாகச் செயல்பட மறுப்பதால் எங்களாலும் நியாயமாக நடந்து கொள்ள முடியாது” என்றார்.

“தொழிற்சாலைக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதன் நகலை தொழிலாளர் நலத்துறை, காவல்துறை ஆகியவற்றுக்கு அனுப்ப உள்ளோம். ஓரிரு நாட்களில் இந்தப் பணிகள் நிறைவடையும். போராட்டம் தொடர்வதை நிறுத்த முடியாது,” என்றும் தெரிவித்தார் முத்துகுமார்.

இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை.

தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் யாஷின் பேகத்தை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேள்விகளை எழுப்பியபோது இதுகுறித்துப் பேச மறுத்துவிட்டார்.

பிபிசி தமிழுக்கு சாம்சங் இந்தியா அளித்த விளக்கம் என்ன?

சாம்சங் இந்தியா

இதுதொடர்பாக சாம்சங் இந்தியா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு இமெயில் மூலம் பிபிசி தமிழ் கேள்விகளை அனுப்பியது. அதற்கு சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறுவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்துள்ள அவர், “சாம்சங் இந்தியா நிறுவனத்தில் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஊதியம் மற்றும் சலுகைகளை மேம்படுத்துவதற்கு தொழிலாளர்களுடன் நியாயமான ஓர் ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

“இது முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது” எனக் கூறியுள்ள சாம்சங் இந்தியா, “தற்போது சென்னை ஆலையில் பணிபுரியும் முழுநேர தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியமானது, அப்பகுதியில் உள்ள இதர தொழிற்சாலைகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம்” எனக் கூறியுள்ளது.

தொழிலாளர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சாம்சங் இந்தியா, உற்பத்தித் தேவைகளின் அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் அவமதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சாம்சங் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. அதுகுறித்த பதிலில், “சென்னை ஆலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் மரியாதையுடன் நடத்துகிறோம். இதற்கு மாறாகக் கூறப்படும் தவறான தகவல்களை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஆதரவான பணியிடச் சூழல் மற்றும் தொழில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU