SOURCE :- INDIAN EXPRESS
மதுரை மாநகரில் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளால் குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகரை குற்றச்செயல்கள் இல்லாத நகரமாக மாற்ற மாநகரக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த 2023-யைவிட 2024-இல் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, மதுரை நகரில் சாலை விபத்துகள் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 253 மரணங்கள் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதால், இது 2024- இல் 227-ஆகக் குறைந்தது.
கடந்த 2023-இல் 14 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-இல் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 85 சதவீதம் குறைந்தது. கடந்த 2023-இல் 104 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-இல் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 வழக்குகள் கூடுதலாகின. கொலை வழக்குகளைப் பொருத்தவரை, கடந்த 2023- ஆம் ஆண்டு 35 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-லிலும் 35 வழக்குகளே பதிவாகின.
கஞ்சா வழக்குகளைப் பொருத்தவரை, 2024-இல் 530 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 794 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக 434 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.32 லட்சத்திலான 3,564 கிலோ புகையிலைப் பொருள்கள் பறி முதல்செய்யப்பட்டன. 189 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல, நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு வழக்குகள் கடந்த ஆண்டில் 35 சதவீதம் குறைந்தன. அடிதடி வழக்குகளும் கடந்த ஆண்டில் 14 சதவீதம் குறைந்தன.
வரதட்சணை கொடுமை வழக்குகளும் கடந்த ஆண்டில் 59 சதவீதம் குறைந்தன.
இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறுகையில், மதுரை மாநகரக் காவல் துறையின் செயல்பாட்டால் குற்ற வழக்குகள் வெகுவாக குறைந்தன. மதுரை நகரில் 63 இருசக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் நநகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது போன்ற தொடர் பணிகளால் நகை பறிப்பு சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. போக்சோ வழக்குகளைப் பொருத்தவரை, காவல் துறையின் விழிப்புணர்வுப் பிரசாரங்களால் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளிக்க முன்வருகின்றனர். இதனால், கடந்த ஆண்டில் போக்சோ வழக்குகள் அதிகரித்தன. மாநகரக் காவல் துறை சார்பில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு உள்பட 685 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளில் 1.31 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
அடிதடி மோதல் உள்ளிட்ட வழக்குகளைப் பொருத்தவரை, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைககளால் மதுரை நகரில் குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS