SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்பு காஷ்மீர் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள், பாகிஸ்தானின் ராணுவ நிலைப்பாடு மற்றும் காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்றத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டன.
ஜெனரல் அசிம் முனீர் பயன்படுத்திய வார்த்தைகளும், தொனியும், அவரது தலைமையின்கீழ் பாகிஸ்தான் ராணுவம் மோதலை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தான் அரசியலில் தலையிடும் அந்நாட்டு ராணுவம், நாட்டில் அரசை அமைப்பதிலும், அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, இதற்காக பாகிஸ்தான் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த அணு ஆயுதப் பிராந்தியத்தில் ஜெனரல் அசிம் முனீர் ஒரு முக்கிய நபராகக் காணப்படுகிறார்.

யார் இந்த அசிம் முனீர்?
அறுபது வயதை நெருங்கும் ஜெனரல் முனீர், பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் இஸ்லாமிய மத அறிஞரின் மகன். மங்களாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் ராணுவ பயிற்சியை முடித்துவிட்டு 1986இல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.
கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக ராணுவத்தில் பணியாற்றிவரும் ஜெனரல் முனீர், பாகிஸ்தானின் பதற்றம் மிகுந்த வடக்கு எல்லைகளில் ராணுவத்திற்கு தலைமை தாங்கினார். ராணுவத்தின் உளவுத்துறை சேவைகளையும் வழிநடத்தினார். செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக செளதி அரேபியாவில் பணியாற்றினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை மற்றும் உத்தி பாதுகாப்பு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஜெனரல் முனீர், ஜப்பான் மற்றும் மலேசியாவின் ராணுவ அமைப்புகளிலும் பயின்றவர்.
இம்ரான் கான்- முனீர் இடையிலான கருத்து வேறுபாடுகள்

பட மூலாதாரம், Getty Images
2022 நவம்பர் மாதம் பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக ஜெனரல் முனீர் பதவியேற்றார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்த நேரத்தில் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். அரசாங்கம் மற்றும் நாட்டின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு இருப்பதான குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தான் மக்கள் விரக்தியடைந்திருந்த நேரம் அது.
அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முனீருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளினால், பல மாத யோசனைக்கு பிறகே ராணுவத் தளபதியாக முனீர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐ.எஸ்.ஐ) தலைவராக பதவியேற்ற எட்டு மாதங்களில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்கான இம்ரான் கான் இந்த நடவடிக்கையை எடுத்தார் என பலர் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தை இரு தரப்பினரும் மறுத்தபோதிலும், ஐஎஸ்ஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, இம்ரான் கானுக்கும் ஜெனரல் முனீருக்கும் இடையிலான மோதலின் எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது.
இம்ரான் கான் இப்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் நிலையில், ஜெனரல் முனீர் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத் தளபதியாக பதவி வகிக்கிறார்.

பட மூலாதாரம், AFP
ஜெனரல் முனீர், தனது பாணியிலும், குணத்திலும், அவருக்கு முன்பு ராணுவத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் கமர் பாஜ்வாவிடம் இருந்து பல விதங்களில் மாறுபட்டவர் என பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
ஜெனரல் பாஜ்வா பொதுமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும், இந்தியாவுடன் சுமுகமான உறவை ஆதரிப்பவராகவும் அறியப்பட்டவர்.
2019இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்தபோது, நிலைமையை கவனமாகக் கையாண்டார். அவரது அணுகுமுறை “பாஜ்வா கோட்பாடு” (Bajwa Doctrine) என்றே அறியப்பட்டது. பாதுகாப்புக்கு முன்னுரிமை, பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் உலகப் பொருளாதாரத்தையும் ஜெனரல் பாஜ்வா வலியுறுத்தினார்.
2019ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியத் துருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்திய விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்தியாவின் தாக்குதல்களுக்கு ஜெனரல் பாஜ்வா பதிலடி கொடுத்தாலும், பதற்றம் அதிகரிப்பதை அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தவிர்க்கப்பட்டது.
“ஜெனரல் பாஜ்வா தெளிவாக இருந்தார்” என்று சிங்கப்பூரின் எஸ் ராஜரத்னம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் மூத்த அறிஞர் அப்துல் பாசித் கூறுகிறார். இவர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஆணையராக இருந்தவர்.
“அவர் ராஜதந்திர வழிகளைத் திறந்து வைத்திருந்தார், காஷ்மீர் பிரச்னையை தாண்டி, ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பிச் செல்வதிலும் பல முக்கியமான விஷயங்களை சாதுரியமாக கையாண்டார்,” என்று கூறும் அப்துல் பாசித், “ஜெனரல் முனீர், கடுமையான அழுத்தத்தில் துரிதமாக செயல்பட வேண்டியிருந்தது” என்றும் கூறினார்.
“பாதுகாப்பு நிலைமையை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கும் சமயத்தில், முனீரின் வேலை மிகவும் சவாலானது. அதிகரித்து வரும் ஆயுத குழு தாக்குதல், நாட்டில் நிலவும் அசாதாரணமான அரசியல் நிலைமை, பொருளாதார நெருக்கடி, பிராந்திய பதற்றங்கள் என அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உடனடியாக முடிக்க வேண்டியவை, அவற்றை துரிதமாக சீர்செய்ய வேண்டும். அவருக்கு முன் ராணுவத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பாஜ்வாவைப் போல நீண்டகால உத்திகளை உருவாக்க அவருக்கு நேரமில்லை” என அப்துல் பாசித் கூறுகிறார்.

பட மூலாதாரம், ISPR/X
அதிகாரத்தின் வெளிப்பாடா?
காஷ்மீர் பிரச்னையில், எந்த பாகிஸ்தான் ராணுவத் தலைவரும் மென்மையான நிலைப்பாட்டை எடுப்பதை விரும்பமாட்டார்கள் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு நலன் என்று பாகிஸ்தான் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு எந்த சலுகையையும் கொடுக்கக்கூடாது என்பது அந்நாட்டில் நிலவும் பொதுவான கருத்தாக உள்ளது” என்று அரசியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் அமீர் ஜியா பிபிசியிடம் கூறினார்.
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், இரண்டு தசாப்தங்களில் ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதலாகும். தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தாலும், ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது
ஜெனரல் முனீர் ராணுவத் தளபதியாகப்பொறுப்பேற்ற பிறகு, பொதுநிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பேசவில்லை என்ற போதிலும், ஏப்ரல் 17 அன்று, இஸ்லாமாபாத்தில் அவர் ஆற்றிய உரை பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெற்ற வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அவர், “மதம் முதல் வாழ்க்கை முறை வரை அனைத்து அம்சங்களிலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்” என்று கூறினார்.
காஷ்மீரை பாகிஸ்தானின் ‘தொண்டைக் குருதிக்குழாய்’ (Jugular vein) என்று அழைத்த அவர், காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் ஒருபோதும் கைவிடாது” என்றார்.
பாகிஸ்தான் தலைவர்கள் பலரும் கடந்த காலங்களில் இதுபோன்ற உரைகளை நிகழ்த்தியுள்ள நிலையில், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்காவிட்டால் ஜெனரல் முனீரின் உரையும் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்களில் ஒன்றாகவே பார்க்கப்பட்டிருக்கும்.
ஜெனரல் முனீர் உரையாற்றிய ஐந்தே நாட்களில் அதாவது, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதால், “இது சாதாரணமான கருத்தல்ல” என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிபுணர் ஜோசுவா டி வைட் கூறுகிறார்.
“பஹல்காம் தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்பு ஜெனரல் முனீர் வெளியிட்ட கருத்து, பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறது என்றும், திரைக்குப் பின்னால் ராஜீய ரீதியில் நிலைமையை சீர்செய்ய முயற்சிப்பதாகவும் கூறுவதை கேள்விக்குள்ளாக்குகிறது” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
‘பொதுவில் தெரிவித்த கருத்து…’
ராணுவத் தளபதியின் உரை பற்றிக் கூறும் பசீத், “ஜெனரல் முனீர் பொது நிகழ்ச்சியில் இல்லாமல் ஒரு தனிப்பட்ட சூழலில் இதே கருத்தை சொல்லியிருந்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒரு பொது மேடையில், ராணுவத் தலைவராக அவர் தெரிவித்தக் கருத்துகள் வெளிப்படையான மோதலாகத் தோன்றின” என்று சொல்கிறார்.
“இந்த கருத்து அதிகாரத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படலாம்,” என்று கூறும் பசீத், “எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாகிஸ்தானின் அதிகாரம் மீண்டும் ராணுவத்தின் கைகளில் இருப்பதாகவும் அவர் அறிவிப்பது போல் தோன்றுகிறது” என்றும் அப்துல் பாசித் கூறுகிறார்.
ஜெனரல் முனீர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆற்றிய மற்றொரு உரையைத் தொடர்ந்து, அவர் தனக்கு முன் இருந்த ராணுவத் தளபதிகளை விட கடுமையான நிலைப்பாட்டை எடுப்பர் என்றும் சிலர் கருத இடமளித்தது.
பிப்ரவரி 5ஆம் தேதியன்று காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு முசாபராபாத்தில் பேசிய அவர், “காஷ்மீருக்காக பாகிஸ்தான் ஏற்கனவே மூன்று போர்களை நடத்தியுள்ளது, தேவைப்பட்டால் மேலும் 10 போர்களை நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதலுக்கும் ஜெனரல் அசிம் முனிரின் உரைக்கும் இடையிலான தொடர்பை இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே இருக்கும் அவநம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
கவனிக்கப்படும் அசிம் முனீரின் அணுகுமுறை

பட மூலாதாரம், YouTube/@ISPR
2023 மே மாதம் ஒன்பதாம் தேதியன்று இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டன. அப்போது ஜெனரல் முனீர், இதுவரையில்லாத வகையில் இம்ரானின் ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
அப்போது, ராணுவச் சட்டங்களின் கீழ் பொதுமக்கள் விசாரிக்கப்பட்டனர், ஒரு உயர் ஜெனரல் முன்கூட்டியே ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டார். இம்ரான் கானுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் கைது செய்யப்பட்டார்.
இதை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறை என்று விமர்சகர்கள் வர்ணித்தனர். ஆனால், குலைந்துபோன ராணுவ ஒழுங்கை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப்பட்டன.
ஜெனரல் அசிம் முனீர் தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் தனது நோக்கங்களை செயல்படுத்தும் முயற்சிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.
இந்தியாவுடனான தற்போதைய பதற்றம் ராணுவ மோதலாக மாறலாம் அல்லது ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஜெனரல் முனீர் எந்த திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே, பாகிஸ்தானுடனான இந்திய உறவுகள் மாறும்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலைமை எப்படி மாறும் என்பதை அடுத்த சில வாரங்கள்தான் தீர்மானிக்கும் என்று பாசித் கருதுகிறார்.
“இந்த நெருக்கடியை ஜெனரல் முனீர் எவ்வாறு கையாள்கிறார் என்பது அவரை ஒரு ராணுவ வீரராகவும், அதிகாரத் தரகராகவும் முன்னிறுத்தும் என்பதுடன், பிராந்தியத்தில் பாகிஸ்தானின் பங்கையும் வரையறுக்கும். தற்போது, எதை தேர்வு செய்வது என்பது அவரது கைகளில்தான் உள்ளது” என்று அப்துல் பாசித் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC