SOURCE :- BBC NEWS

காஸா

பட மூலாதாரம், Getty Images

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் அதற்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

இதற்காக இஸ்ரேல் பல ஆயுதங்களை வைத்திருந்தது.

அந்த ஆயுதங்களில் பலவும் அமெரிக்காவால் வழங்கப்பட்டவை, அல்லது அமெரிக்கா வழங்கிய நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை.

இந்த நெருக்கடியான நேரத்தில் இஸ்ரேலின் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அதனுடன் நின்றன.

2023 அக்டோபர் 7 அன்று 1,200 பேர் உயிரிழந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு பிற நாடுகள் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தின.

பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு, ஹமாஸ் 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து, காஸா பகுதிக்குள் இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகின.

அந்த படங்கள் உலகளாவிய அளவில் இஸ்ரேலுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தின.

ஆனால் இப்போது இஸ்ரேல் மீதான அந்த அனுதாபம் மெல்ல குறைந்து வருவது போல தோன்றுகிறது.

குறிப்பாக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை கருத்தில் கொள்ளும்போது, இவ்வாறு கூறலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கருத்து என்ன?

காஸா

பட மூலாதாரம், Reuters

காஸாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மூன்று நாடுகளும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் “புதிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்று அந்த நாடுகள் கூறுகின்றன.

அதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அத்தகைய தாக்குதல்கள் மட்டுமே “ஹமாஸை அழித்து மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும்” என்று கூறுகிறார்.

‘இதற்குப் பிறகு முழு காஸாவும் இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்’ என்று நெதன்யாகு கூறுகிறார்.

மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டு, போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன.

மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து “காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதை கடுமையாக எதிர்ப்பதாக” கூறியுள்ளன.

மேலும் “காஸாவில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு தாங்க முடியாதது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு மூன்று நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.

அக்டோபர் 7 அன்று நடந்த “கொடூரமான தாக்குதலைத்” தொடர்ந்து, இஸ்ரேலுக்கு “பயங்கரவாதத்திலிருந்து தனது குடிமக்களைப் பாதுகாக்க உரிமை உண்டு” என்று அவர்கள் நம்பினர், ஆனால் “இப்போது தாக்குதல்களைத் தொடர்வது முற்றிலும் தேவையற்றது” என்று நம்புகின்றனர்.

“நெதன்யாகு காஸாவிற்கு அனுப்ப அனுமதிக்கும் உணவின் அளவும், அவர் குறைந்தபட்ச தேவையான உணவு என்று அழைக்கும் அளவும் போதுமானதாக இல்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவிற்கு உதவி கிடைக்கவில்லை என்றால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்தார்.

“அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறேன்” என்றும் அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்- ஐக்கிய நாடுகள் சபை

காஸா

பட மூலாதாரம், Getty Images

பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய டாம் பிளெட்சர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா வெளியிட்ட கூட்டு அறிக்கையைப் பாராட்டினார்.

காஸாவுக்குள் அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் உலக நாடுகள் “எங்களுடன் இணைய வேண்டும்” என்று உலக நாடுகளை ஐ.நா. அழைப்பதாக டாம் பிளெட்சர் கூறினார்.

திங்களன்று உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற ஐந்து லாரிகள் காஸாவிற்கு வந்ததாக கூறிய பிளெட்சர், அந்த உதவி “கடலில் ஒரு துளி மட்டுமே” என்று விவரித்தார்.

10 வார மனிதாபிமான முற்றுகைக்குப் பிறகு, திங்களன்று காஸாவிற்கு “அத்தியாவசியப் பொருட்கள்” கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் அனுமதித்தது.

பதிலடி கொடுக்கும் நெதன்யாகு

 பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவை கடுமையாக சாடியுள்ளார்.

“ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பி, ஆயுதங்களை ஒப்படைத்து, அதன் தலைவர்களை நாடுகடத்த ஒப்புக்கொண்டு, தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் போர் முடிவுக்கு வரக்கூடும்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் எந்த நாடும் இதை விடக் குறைவானதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், இஸ்ரேல் நிச்சயமாக அவ்வாறு செய்யாது என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்ட வாரண்டின் கீழ் நெதன்யாகு தேடப்படுகிறார், ஆனால் அதை “யூத எதிர்ப்பு” என்று நிராகரித்துள்ளார் நெதன்யாகு .

காஸா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு கடும் சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார், ஏனெனில் ஒரு சர்வதேச கணக்கெடுப்பு அங்கு பஞ்சம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான லண்டன் உச்சிமாநாட்டில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை “சர்வதேச சட்டம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. காஸா மக்கள் முழுவதும் ராணுவ பலத்தினால் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று விவரித்தார்.

“மக்கள் மனிதாபிமான உதவிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும், தடையின்றியும் அணுக வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் காஸாவிற்குள் அத்தியாவசிய பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே அனுமதிப்பது தொடர்பான நெதன்யாகுவின் முடிவை அவரது கடுமையான தேசியவாத கூட்டணியின் கூட்டாளிகளும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், “நெதன்யாகுவின் இந்த முடிவு ஹமாஸுக்கு தைரியமும் ஊக்கமும் அளிக்கும். அதே சமயம் நமது பணயக்கைதிகள் சுரங்கங்களில் அழுகிக் கொண்டே இருப்பார்கள்” எனக் கூறினார்.

2007ஆம் ஆண்டு பென்-க்விர் இனவெறியை ஊக்குவித்ததாகவும், இஸ்ரேல் ஒரு “பயங்கரவாத” அமைப்பாகக் கருதும் ஒரு தீவிரவாத யூதக் குழுவை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

காஸாவின் சமீபத்திய நிலை

காஸா

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்தபோது, திங்களன்று மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் மட்டுமே காஸாவுக்குள் நுழைந்தன.

அவர்கள் மேற்கொண்ட வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களில் பல இளம் குழந்தைகள் உட்பட ஏராளமான பாலத்தீனப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்தும் அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டதுக்கு எதிரானவர்கள், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா அரசுகள் மிகவும் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறுவார்கள்.

அவர்களில் பலர் காஸாவில் ஏற்பட்ட மரணம், அழிவு மற்றும் பாலத்தீன பொதுமக்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்த்து பல மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாலத்தீன பிரதேசத்தின் மறுபுறத்தில் உள்ள மேற்குக் கரையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நேரங்களில் போர் அரசியலில் ஒரு நிகழ்வு அந்த சூழ்நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகுந்த குறியீட்டு முக்கியத்துவம் பெற்றிருப்பதால், அது அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

மார்ச் 23 அன்று காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 15 துணை மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதும் அத்தகைய ஒரு சம்பவமாக உள்ளது.

இரண்டு மாத கால போர் நிறுத்தம் முறிந்த பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது.

இஸ்ரேல் மீதான அணுகுமுறை மாறியதற்கு என்ன காரணம்?

காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 துணை மருத்துவர்களும் உதவிப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Video Grab

போர் நிறுத்தத்திற்குப் பிறகு, போர் மீண்டும் தொடங்கிய ஐந்து நாட்கள் கழித்து, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு ஒன்று மருத்துவ வாகனங்களைத் தாக்கியது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களும், குண்டு துளைத்த அவர்களின் வாகனங்களும் மணலில் புதைந்தன.

இந்தப் புதைகுழியில் ஒரு சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு மொபைல் போன் வீடியோ, இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்று பொய்யானது என்பதை நிரூபித்தது.

அந்த வாகனங்கள் முகப்பு விளக்குகள் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் “சந்தேகத்திற்கிடமான முறையில்” நகர்ந்ததால், இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று இஸ்ரேல் முன்னர் கூறியது.

இந்த வாகனங்கள் நகர்வதற்கு முன்னர், ராணுவத்திற்கு அவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை அல்லது அதற்கு ராணுவத்தால் முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

கொல்லப்பட்ட துணை மருத்துவர்களில் ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், காயமடைந்தவர்களுக்கு உதவி கோரி வாகனங்களின் விளக்குகள் எரிந்திருப்பதைக் காட்டியது.

பின்னர், இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கொல்லப்பட்டவர்கள் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டது.

அப்போதிருந்து, இஸ்ரேலின் வழக்கமான எதிரிகளிடையே கவலை வேகமாக வளர்ந்துள்ளது மட்டுமல்லாமல், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தலைமையிலான அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி, “நெதன்யாகு அரசாங்கம் இந்த கொடூரமான செயல்களை தொடரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை அகற்றாவிட்டால், பதிலுக்கு நாங்கள் இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அந்த அறிக்கை கூறுவது தான் இஸ்ரேலுக்கு இன்னும் முக்கியமான விஷயம்.

அவை எந்த மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்பதை அந்த அறிக்கை விரிவாகக் கூறவில்லை. இந்த நாடுகள் இஸ்ரேல் மீது சிலவகையான தடைகளை விதிக்க வாய்ப்பு இருக்கலாம்.

பாலத்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய நகர்வாக இருக்கலாம்.

ஏனெனில் ஜூன் தொடக்கத்தில் நியூயார்க்கில் சௌதி அரேபியாவுடன் இணைந்து நடைபெற உள்ள ஒரு மாநாட்டில், 148 நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது.

அதே நேரத்தில், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து பிரிட்டன் பிரான்சுடனும் பேசியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த நாடுகள் ஹமாஸுக்கு வெற்றியைத் தரும் என்று கூறியுள்ளது.

ஆனால் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவின் அறிக்கைகளில் வெளிப்படும் தொனி, இஸ்ரேல் அவற்றின் மீது அழுத்தம் செலுத்தும் திறனை இழந்து வருவதைக் காட்டுகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU