SOURCE :- BBC NEWS
குளித்த பின்னர் துடைப்பதற்காக நாம் அதிகம் பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். அப்படியென்றால், அதை துவைப்பதற்கு முன் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும்?
இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே ஒரு துண்டின் மூலம் உங்கள் உடலை துடைத்திருப்பீர்கள். ஆனால், அந்த துண்டு உண்மையில் எவ்வளவு சுத்தமாக உள்ளது? நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை துண்டை வாஷிங் மெஷினில் துவைப்போம். ஒரு ஆய்வில் பங்குபெற்ற 100 பேரில், மூன்றில் ஒருபங்கு மக்கள், மாதத்திற்கு ஒருமுறை தங்களது துண்டுகளை துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், சிலர் ஆண்டுக்கு ஒருமுறை துவைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
துண்டுகளில் உள்ள மென்மையான இழைகள், அதில் அழுக்கு இருப்பதற்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்காது. ஆனால், பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வளர்வதற்கான இடமாக அது இருக்கும். நம்முடைய துண்டுகள், மனித குடல் மற்றும் தோலில் பொதுவாகக் காணப்படும் பாக்டீரியாக்களால் மாசடைகிறது என பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
நாம் குளித்த பின்னர் கூட நமது உடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கும். நமது உடலை துடைக்கும்போது அந்த நுண்ணுயிரிகள் துண்டுக்கு இடம்பெயர்ந்துவிடும். ஆனால், நமது துண்டில் காணப்படும் நுண்ணுயிரிகள் வேறு ஆதாரங்களின் வழியே கூட வரும், அதாவது காற்றின் வழியாக பரவும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள்கூட துண்டின் இழையில் ஒட்டிக்கொள்ளும். மேலும், நாம் அந்த துண்டை துவைக்கப் பயன்படுத்தும் தண்ணீரிலிருந்தும் பாக்டீரியாக்கள் துண்டில் ஒட்டிக்கொள்ளும்.
பாக்டீரியாக்களின் ஆபத்து
ஜப்பானில் சில வீடுகளில் குளிப்பதற்கு பயன்படுத்தி மீதமுள்ள தண்ணீரையே அடுத்த நாள் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஜப்பானின் டொகுஷிமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இப்படிச் செய்வது தண்ணீரை சேமிப்பதற்கான வழி என்றாலும், அந்த தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் துண்டு மற்றும் ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் என தெரியவந்துள்ளது.
மேலும், கழிவறையிலேயே தங்களது துண்டை காய வைப்பவர்களுக்கு இன்னுமொரு அருவருப்பான செய்தி உள்ளது. அதாவது, நீங்கள் கழிவறையை உபயோகித்த பின்னர் ஒவ்வொருமுறை ஃபிளஷ்ஷை அழுத்தும்போதும் அங்கு காயவைக்கப்பட்டிருக்கும் துண்டில், உங்கள் குடும்பத்தினரின் உடலின் கழிவுகளின் எச்சங்களுடன் நீங்கள் பாக்டீரியாக்களை பரவவிடுகிறீர்கள்.
காலப்போக்கில் இந்த நுண்ணுயிரிகள் பயோஃபிலிம்களை (biofilms ) உருவாக்கும். பயோஃபிலிம்கள் என்பது நுண்ணுயிரிகள் உருவாக்கும் மெல்லிய அடுக்கு. இது, உங்கள் துண்டின் தோற்றத்தையே மாற்றிவிடும். இரண்டு மாதங்களுக்குப் பின், நீங்கள் துண்டை தினமும் துவைத்தாலும் பருத்தி துண்டுகளின் இழைகளில் உள்ள பாக்டீரியாக்களால், அந்த துண்டின் தோற்றம் மங்கிவிடும். நாம் வீட்டில் துண்டை எப்படி துவைக்கிறோம் என்பதைப் பொறுத்து, பாக்டீரியாக்கள் எந்தளவுக்கு இருக்கும், என்ன வகையான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பது மாறுபடும். உங்கள் துண்டுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் குறித்து நீங்கள் எந்தளவுக்குக் கவலைப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி.
துண்டை துவைப்பது குறித்து விவாதிப்பது அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள சிமோன்ஸ் பல்கலைக்கழகத்தின் உடல்நல இயல் மற்றும் சுகாதார மையத்தின் இணை இயக்குநர் எலிசபெத் ஸ்காட், துண்டில் உள்ள நுண்ணுயிரிகள் எப்படி வீடு முழுவதும் பரவுகின்றன என்பது குறித்த ஆய்வில் ஆர்வமாக உள்ளார்.
“நம்முடைய துண்டுகளில் அந்த நுண்ணுயிரிகள் வெறுமனே இருப்பதில்லை,” என்கிறார் அவர். “அந்த துண்டிலிருந்து நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுகிறதென்றால், அது மனிதர்கள் மூலமாகவே ஏற்பட்டிருக்கும்.”
நம்முடைய தோலில் ஏராளமான வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் தவிர்த்து ஆயிரக்கணக்கிலான வெவ்வேறு இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் இருக்கும். அதில் பெரும்பாலானவை நமக்கு நன்மையையே பயக்கும். அவை, நம்மை மற்ற தீமை பயக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கு உதவிபுரியும். மேலும், அவை நம் நோயெதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தீங்கு ஏற்படுத்துமா?
நம்முடைய துண்டுகளில் காணப்படும் பெரும்பாலான பாக்டீரியாக்கள், நம் தோலில் காணப்படும் பாக்டீரியாக்கள்தான். எனினும், அவை நம்முடைய சுற்றுபுறத்திலும் பொதுவாகக் காணப்படுகின்றன. இவற்றுள் ஸ்டாஃபைலோகோக்கஸ் பாக்டீரியா (Staphylococcus) மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எஸ்செரிஷியா கோலி (Escherichia coli இ. கோலி) ஆகியவையும் அடங்கும். மேலும், உணவால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள் மற்றும் வயிற்றுப்போக்குக்குக் காரணமான சால்மோனெல்லா (Salmonella) மற்றும் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியாக்களும் துண்டுகளில் காணப்படுகின்றன.
இவை சில சமயங்களில் தீங்கை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளாக உள்ளன. அதாவது, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளுக்குள் அவை நுழையாதவரை தீங்கற்றதாக உள்ளன. உதாரணமாக, நம் உடலில் ஏதேனும் வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதற்குள் இந்த பாக்டீரியாக்கள் நுழைந்து சில நச்சுகளை உற்பத்தி செய்கின்றன அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன.
நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்கும் அமைப்பாக நமது தோலும் செயல்படுகின்றது. பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து நம்மை காக்கும் முதல் தடுப்பு அரணாக தோல் செயல்படுகின்றது. எனவே, துண்டிலிருந்து பாக்டீரியாக்கள் நம்முடைய தோலுக்கு இடம்பெயர்வது குறித்து நாம் அவ்வளவு கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், அந்த துண்டின் மூலம் நம் உடலை துடைப்பது, நோய்க்கிருமிகளை தடுக்கும் தோலின் திறனில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
துண்டை காயவைக்கும்போது, அதிலிருக்கும் நுண்ணுயிரிகளை நம் வாய், மூக்கு மற்றும் கண்களுக்குள் செல்லும்போதுதான் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. எனவே, நாம் அடிக்கடி கைகளால் கையாளும் துண்டுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பாத்திரங்களை துடைக்க, கைகள் மற்றும் தரைகளைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகள், உணவுப்பொருளால் ஏற்படும் நோய்க்கிருமிகளை பரப்பும் ஆதாரங்களாக உள்ளன.
இரைப்பை குடல் தொற்றுகளை ஏற்படுத்தும் சால்மோனெல்லா, நோரோவைரஸ் (Norovirus) மற்றும் இ.கோலி ஆகியவை, “துண்டுகளின் வாயிலாக தொற்றக்கூடியவை” என்கிறார் ஸ்காட். நோய்த்தொற்று இருந்த இடங்களை தொடுவது கோவிட்-19 போன்ற வைரஸ்கள் பரவுவதற்கான முதன்மையான வழி என்பது பெரும்பாலும் நம்பப்படவில்லை என்றாலும், பருத்தித் துணியில் அந்த வைரஸ் 24 மணிநேரம் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மேலும் எம்பாக்ஸ் வைரஸும் ஆபத்தான ஒன்றாக உள்ளது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் துண்டுகளை பரிமாறிக்கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
மருக்கள் போன்றவற்றுக்கு பொதுவான காரணமாக கருதப்படும் பாபில்லோமாவைரசஸ் (papillomaviruses), மற்றவர்களுடன் துண்டுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் பரவலாம்.
துண்டுகள் மூலம் தொற்றுகள் பரவுகிறது என்பதால்தான் மருத்துவமனைகள் மற்றும் பொதுக் கழிவறைகளில் தற்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் காகிதத் துண்டுகளும் ஏர் டிரையர்களும் பயன்படுத்தப்படுகின்றன, எனினும், எது சிறந்தது என்பதில் உறுதியற்ற ஆதாரங்களே உள்ளன.
என்ன செய்ய வேண்டும்?
நாம் எவ்வளவு நேரம் துண்டுகளை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, அவை எவ்வளவு நேரம் ஈரமாக இருக்கும் என்பது மாறுபடும், அதனடிப்படையில் மருத்துவமனைகளின் சூழலைப் பொறுத்து, ஆபத்து விளைவிக்கும் நுண்ணுயிரிகள் துண்டுகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
துண்டுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது உலகளவில் இன்று சந்திக்கும் முக்கிய சுகாதாரப் பிரச்னைகளை தடுப்பதற்கு உதவலாம் என்கின்றனர் ஸ்காட்டும் அவருடைய சகாக்களும். எம்ஆர்எஸ்ஏ போன்ற ஆன்டிபயாடிக்குகளை எதிர்த்து வாழும் திறனுடைய பாக்டீரியாக்கள், இந்த நோய்க்கிருமி தாக்கிய இடங்களை தொடுவதன் மூலம் பரவுகிறது என்பதால், அதைத்தடுக்க துண்டுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழியாக அமையலாம்.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மருந்து நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஜூந்ய்வெஸ் மைல்லார்ட் கூறுகையில், தொடர்ந்து துண்டுகளை துவைத்து சுத்தமாக வைத்திருப்பது, பாக்டீரியா தொற்றுகளை குறைக்கும் என்றும் அதன்மூலம், ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு குறையும் என்றும் கூறுகிறார். “வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது தடுப்பு வழிமுறைகளுள் ஒன்று, தடுப்பு முறைதான் சிகிச்சையை விட சிறந்தது,” என்கிறார் மைல்லார்ட்.
எத்தனை முறை நாம் துண்டுகளை துவைக்க வேண்டும்?
வாரத்திற்கு ஒருமுறை துண்டுகளை துவைக்க வேண்டும் என ஸ்காட் பரிந்துரைக்கிறார். எனினும், இது ஒரே விதியல்ல.
“இதை அப்படியே அர்த்தம் கொள்ளக்கூடாது. வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால், அவர்களுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்,” என்கிறார் அவர். “அவர்கள் தனியே துண்டுகளை வைத்துக்கொள்ள வேண்டும், அந்த துண்டுகளை தினசரி துவைக்க வேண்டும்.”
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 20% பேர், தங்களது துண்டுகளை வாரத்திற்கு இருமுறை துவைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இப்படி குறிப்பாக மேற்கொள்ளப்படும் சுகாதார வழிமுறையை ‘டார்கெட்டட் ஹைஜீன்’ என்கின்றனர், இது சுகாதார துறையில் ஆபத்தைக் கையாளும் ஒருவழிமுறையாகும். இதனை உலக சுகாதார கழகம் மற்றும் சர்வதேச வீட்டு சுகாதாரத்திற்கான அறிவியல் மன்றத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். சுகாதாரம் என்பது எல்லா சமயங்களிலும் முக்கியம் எனும்போதிலும், இப்படி குறிப்பாக சில சமயங்கள் அல்லது சில இடங்களில் சுகாதாரத்தைக் கடைபிடிப்பது மிக முக்கியமாகும்.
துண்டை எப்படி துவைக்க வேண்டும்?
40-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலோ அல்லது வீட்டின் மற்ற துணிகளை விட நீண்ட நேரத்திற்கு நுண்ணுயிரிகளைத் தடுக்கும் டிடர்ஜென்ட்டுகள் சேர்த்துத் துவைக்கப்பட வேண்டும் என்கிறார் ஸ்காட். டிடர்ஜென்ட்டுகள் துணிகளில் பாக்டீரியாக்கள் புகாமல் செய்யும், சில வைரஸ்களை செயலிழக்கவும் செய்யும். அதிக வெப்பநிலையில் தொடர்ச்சியாக துவைப்பது, சூழலியல் ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
குறைவான வெப்பநிலையில் துவைக்கும்போது நொதிகள் சேர்த்தோ அல்லது பிளீச் செய்யும்போதோ துண்டுகளில் பாக்டீரியாக்கள் தங்காமல் சுத்தம் செய்ய முடியும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், டிடர்ஜென்ட் மற்றும் கிருமிநாசினி சேர்த்து சூரிய வெப்பத்தில் துண்டுகளை காய வைப்பது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை குறைப்பதில் மிகுந்த செயலாற்றுவதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் சுகாதாரத்தைக் கடைபிடிப்பது பல வழிகளில் நோய்த்தடுப்பு வழிமுறையாக உள்ளதாக ஸ்காட் கூறுகிறார். உங்களை பாதுகாக்கும்பொருட்டு நீங்கள் செய்யும் எவ்வித சிறிய முயற்சிகளும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் காக்கும்.
“இதை ஸ்விஸ் சீஸ் ( Swiss cheese) மாடல் என்கிறோம்,” என்கிறார் அவர். “ஸ்விஸ் சீஸின் ஒவ்வொரு துண்டைப் போல, ஒவ்வொரு சிறிய சுகாதார முயற்சிகளும் நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்கின்றன.
“அசுத்தமான துண்டுகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உள்ளன, அவற்றை நாம் சில சிறிய வழிமுறைகளை கையாள்வதன் மூலம் தடுக்க முடியும்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU