SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Handout
கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களை நாயைப் போல கழுத்தில் கயிறு கட்டி, தரையில் மண்டியிட்டு வரச் செய்ததாக வைரலாகப் பரவிய காணொளி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பரப்பிய நபர் மீது அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பிபிசி தமிழிடம் பெரும்பாவூர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம், அங்கு பணியாற்றும் ஊழியர்களில் தினசரி விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்களை நாயைப் போல கயிறு கட்டி தண்டனை தருவதாக அங்குள்ள உள்ளூர் காட்சி ஊடகங்களில் ஒரு காணொளி வெளியானது.
அதில் இளைஞர் ஒருவரை நாய்க்கு கழுத்தில் கயிறு கட்டுவது போல கயிறு கட்டி தவழ வைத்து இழுத்துச் செல்வதுடன், நாயைப் போல குரைக்க வைத்ததுடன், ஒரு தட்டில் நாணயங்களைப் போட்டு அதை நக்க வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் வேறு சில ஊழியர்களும் உடனிருக்கின்றனர்.
பரவிய காணொளி
அடுத்தடுத்து இந்த காணொளி, கேரளாவின் முக்கிய காட்சி ஊடகங்களில் வெளியானதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக பல லட்சம் பேரைச் சென்றடைந்தது.
கேரள மாநிலத்தின் மனித உரிமை ஆணையம் மற்றும் கேரள மாநில இளைஞர் ஆணையம் ஆகியவை தாமாக முன் வந்து, இதனை வழக்காகப் பதிவு செய்துள்ளன.
கேரள மாநில இளைஞர் ஆணையத்தின் தலைவர் ஷாஜர், ”நாகரிக சமுதாயத்தில் இத்தகைய செயல்பாடுகளை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. இதற்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ள கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி தருவதாக கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பு நடவடிக்கை குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

பட மூலாதாரம், Handout
4 மாதங்களுக்கு முன்பு பயிற்சியின்போது நடந்தது!
காணொளியில் நாய் போல கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்ட நபர், ”நான் இன்னும் அந்த நிறுவனத்தில்தான் வேலை செய்து வருகிறேன். இந்தக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ஒருவரால் எடுக்கப்பட்டவை. பின்னர் நிர்வாகத்தால் அவர் ராஜினாமா செய்யக் கேட்கப்பட்டார், இப்போது அவர் அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உரிமையாளரை களங்கப்படுத்துகிறார்,” என்று கூறியுள்ளதாகவும், அதே கருத்தை வாக்குமூலமாகக் கொடுத்துள்ளதாகவும் பிடிஐ நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய எர்ணாகுளம் மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் வினோத் குமார், கடந்த நவம்பரில் எடுக்கப்பட்ட அந்த காணொளி போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தன்னிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
”இந்த காணொளியை வெளியிட்ட நபர், இப்போது அங்கு பணியாற்றவில்லை. அவர் பணியாற்றிய போது, பல மாதங்களுக்கு முன்பு எடுத்த காணொளியை, தற்போது பழிவாங்கும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஊழியர், இப்போதும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அங்குள்ள எல்லா ஊழியர்களிடமும் விசாரித்து, தொழிலாளர் நல ஆணையத்துக்கு நான் அறிக்கை அனுப்பியுள்ளேன். அங்கிருந்து கேரள அரசுக்கு இந்த அறிக்கை அனுப்பப்படும்.” என்றார்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரியின் கருத்துப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியில் வீடு வீடாகச் சென்று, வீட்டு உபயோகத்துக்கான சில பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். விற்பனைக்கேற்ப இவர்களுக்கு கமிஷன் மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் ”விற்பனை இலக்கை எட்டாததால் தண்டனை என்பதே தவறான தகவல்” என்று கூறியுள்ளனர்.
காணொளியை வெளியிட்டவர் மீது எஃப்ஐஆர் பதிவு!
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெரும்பாவூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சூபி, ”வைரலான அந்த காணொளி, கேலிக்காக எடுக்கப்பட்டது. அங்கு முன்பு பணியாற்றிய மேலாளர் திட்டமிட்டு இந்த வீடியோவை எடுத்துப் பழிவாங்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பரவ விட்டுள்ளார். அவர் இந்த நிறுவனத்தில் இருக்கும்போதே, அவருக்கும் நிறுவன நிர்வாகத்துக்கும் இடையில் பிரச்னை இருந்துள்ளது. இந்த காணொளியை தவறான தகவல்களுடன் வெளியில் பரவ வைத்துள்ளார்.” என்றார்.
காணொளியில் உள்ள நபரும், தனக்கு அப்படி எந்தவொரு தண்டனையும் வழங்கப்படவில்லை என்று வாக்குமூலம் தெரிவித்துள்ளதாகக் கூறிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர், விளையாட்டு போல செய்த ஒரு காரியத்தை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாக கூறினார்.
இந்த காணொளியை வெளியிட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த முன்னாள் மேலாளர் மீது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் ஏற்கெனவே புகார் அளித்துள்ளதாகவும், நாயை போல நடத்திய விவகாரம் குறித்து யாரும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
”அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், முன்னாள் மேலாளர் மீது பிஎன்எஸ் 74 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்து, பல மாதங்களாகிவிட்டதால் உடனடியாக கைது நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுக்கவில்லை. இதுபற்றி சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சூபி.
இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் நிர்வாகியும், வழக்கறிஞருமான பாலமுருகன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ”இந்த சம்பவம் தொழிலாளர் நலனுக்கு எதிரானது மட்டுமின்றி, மனித உரிமைக்கும் எதிரானது. மனித கண்ணியத்துக்கு எதிரான செயல்பாடு என்பதால், காவல்துறையே இதில் வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து விதங்களிலும் முகாந்திரம் உண்டு” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU