SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்திலுள்ள உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கோடை சீசன் துவங்கிவிட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வரும் நபர்களில் பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் வரும்போது, மலைப்பகுதிகளில் இயக்கத் தெரியாமலும், வாகனப் பராமரிப்பு குறைபாட்டாலும் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மலைப்பகுதிகளுக்குச் செல்லும்போது, வாகனத்தை முறையான பராமரிப்பில் வைத்திருப்பதும், மலைப்பகுதிகளில் வாகனம் இயக்கும் வழிமுறைகளை அறிவதும் அவசியம் என்று ஓட்டுநர் பயிற்றுநர்கள் மற்றும் மெக்கானிக்குகள் வலியுறுத்துகின்றனர்.
முதல் முறை மலைக்கு வண்டியை ஓட்டிச்சென்றால்…
மலைப்பகுதிக்கு சொந்த வாகனங்களை இயக்கிச் செல்வோரில் பலருக்கு சமவெளிகளில் கார்களை இயக்குவதில் நீடித்த அனுபவம் இருப்பினும் மலைப்பகுதிகளில் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
மலைப்பகுதிகளுக்கு வரும் முன் வாகனத்தைப் பராமரிப்பதில் கவனக்குறைவாக இருப்பதால் வாகனங்கள் பழுதாகி நிற்பதாகவும் மலைப்பகுதிகளில் அனுபவமுள்ள வாகன ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள் தெரிவிக்கின்றனர்.
எனவே மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா வரும் முன் வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு மற்றும் வாகனத்தை இயக்கும் முறையை அறிவது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர். சமவெளிகளிலிருந்து மலைப்பகுதிக்கு கார்களை இயக்கிச் செல்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்களை பிபிசி தமிழிடம் விளக்கினார், கோவையிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் முதுநிலை பயிற்றுநர் சுர்ஜித் மருதாசலம்.
* சமவெளிகளில் வாகனம் இயக்குவதில் அனுபவம் பெற்றவர்கள், மலைப்பாதையில் காரை இயக்கும்போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?
சமவெளியில் காரை இயக்குவதில் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், மலைப்பகுதியில் காரை இயக்கும்போது, மலைகளில் காரை இயக்கி அனுபவமுள்ள ஒரு ஓட்டுநரை அல்லது நண்பரை அருகில் வைத்துக் கொண்டு, அவருடைய அறிவுறுத்தல்படி இயக்குவது அவசியம்.
சமவெளியைப் போலன்றி, மலைப்பகுதியில் வேறு விதமாக ஸ்டியரிங்கைக் கையாள வேண்டும். எங்கே எந்த கியரைப் பயன்படுத்துவது? எந்த இடத்தில் பிரேக் போடுவது என்பதை அறிந்து அதன்படி இயக்குவதற்கு மலையில் வாகனம் ஓட்டுவதிலும் அனுபவமுள்ள ஒருவர் அருகில் இருந்தால் நல்லது.
* சமவெளிகளைச் சேர்ந்தவர்கள், மலைப்பாதையில் வாகனத்தை இயக்கும் போது செய்யும் பிரதானத் தவறு என்ன…அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?
மலைப்பாதையில் வளைந்து வளைந்து செல்லும்போது, சிலருக்கு ஸ்டியரிங்கை முழுவதுமாக திருப்பத் தெரியாது. ஒன்று ஒரேயடியாக இடது புறம் இயக்கிவிடுவார்கள் அல்லது வலது புறத்தில் ஏறிவிடுவார்கள். இரண்டுமே விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும். ஸ்டியரிங்கை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* மலைப்பாதையில் ஏறும்போதும் அதே பாதையில் இறங்கும்போதும் எந்தெந்த கியர்களில் வாகனத்தை இயக்குவது பாதுகாப்பானது?
ஒவ்வொரு மலையின் உயரத்தையும், சரிவையும் பொறுத்து, கியர்களைப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் உதகை, கொடைக்கானல் செல்லும் பிரதான சாலைகளில் முதல் கியரில் செல்லும் அளவுக்கு மேடான இடங்கள் இருப்பதில்லை. சில சுற்றுலாத்தலங்களுக்கும், ஒரு சில வனப்பகுதிகளிலும் செல்லும் பாதைகளில் முதல் கியரில் செல்ல வேண்டியிருக்கலாம்.
மற்றபடி மலைப்பாதையில் ஏறும்போதும் இறங்கும்போதும் பெரும்பாலும் 2 அல்லது 3 வது கியர்களில் வாகனத்தை இயக்குவது பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகுக்கும். சில இடங்களில் சமமாக இருந்தால் 4-வது கியரைப் பயன்படுத்தலாம். ஒரு மலைப்பாதையில் ஏறுகிற அதே கியரில் இறங்கினால் இன்ஜினுக்கு ஒரு சமநிலை கிடைக்கும். வண்டி கட்டுப்பாடுடன் இறங்க 2 அல்லது 3 வது கியர்களில் செல்வதே சிறந்தது.
* கொண்டை ஊசி வளைவுகளில் மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் வாகனத்தை எந்தப் பக்கத்தில் (இடது புறம் அல்லது வலது புறம்) இயக்க வேண்டும்?
கொண்டை ஊசி வளைவுகளில் பஸ், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள், முழுவதுமாக சாலையின் வலது புறம் சென்றே திருப்ப முடியும். ஆனால் கார்கள் போன்ற இலகு ரக வாகனங்களை இடது புறத்தில்தான் இயக்க வேண்டும். அத்தகைய வளைவுகளில் மிகவும் குறுகலாகவும் மேடாகவும் இருக்கும்போது, கியரைக் குறைத்து மெதுவாக ஏறிக் கொள்ள வேண்டும்.
சிலர் 3 வது கியரில் வேகமாக வந்து திரும்பப் பார்ப்பார்கள். ஆனால் எதிரில் வாகனம் வந்து குறுகலான மேட்டில் ஏற்றப்பார்த்தால் ஏறாது. வாகனம் பின்னால் இறங்கும் வாய்ப்புண்டு. அந்த நேரத்தில் கியரை மாற்றுவதும் கஷ்டம். அதனால் கொண்டை ஊசி வளைவுகளில் 2வது கியரைப் பயன்படுத்தினால் பிரச்னையின்றி ஏறிவிடலாம்.
* மலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், சரிவான இடங்களில் வாகனங்களை மெதுவாக இயக்கத் தெரியாதவர்களால் வாகனங்கள் பின்னோக்கி வருவது வழக்கம்…இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
சமவெளிகளில் இயக்குவோர், சிறிய மேடான பகுதிகளிலும், பாலங்களிலும் செல்லும்போது பயன்படுத்தும் அதே வழிமுறையை அந்த இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். பாதிக்கும் குறைவாக கிளட்ச்சை அழுத்தி, தேவையான அளவுக்கு ரிலீஸ் செய்தால் வாகனம் மெதுவாக நகரும். தேவைப்படும் அளவுக்கு பிரேக் போட வேண்டும். ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தக்கூடாது. ஆட்டோ கியர் வாகனங்களில் இந்த பிரச்னை வர வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Ganesh Babu
பிரேக் டிரம் சூடானால் தண்ணீர் ஊற்றக்கூடாது!
மொத்தம் 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட உதகை–கல்லட்டி–முதுமலை மலைப்பாதையில், சமவெளி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். அதற்குக் காரணம் அந்தப் பாதையில் சமவெளிப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவதுதான்.
இந்த விபத்துக்கான காரணங்கள் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி?இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கினார், உதகையில் 30 ஆண்டு கால அனுபவமுள்ள ஓட்டுநரும், டிராவல்ஸ் நடத்துபவருமான பாஸ்கர்.
- சமவெளிகளில் இருந்து சொந்த வாகனங்களில் வருவோரில் பலரும், எரிபொருள் செலவைக் குறைக்க நினைத்து, மலையிலிருந்து இறங்குமிடங்களில் 4 வது கியரில் இறங்குகிறார்கள். இறங்கும்போது, வாகனத்தில் எடைக்கேற்ப அதன் வேகம் தானாகவே அதிகரிக்கும். அப்போது பிரேக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள். இதனால் பிரேக் டிரம் சூடாகிவிடும். பிரேக் பிடித்தாலும் நிற்காது. வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விடும்.
- பிரேக் டிரம் சூடாகிவிட்டால், சிலர் பச்சைத்தண்ணீர் ஊற்றுகின்றனர். அது மிகவும் தவறானது. அரை மணி நேரம் சூடு ஆறிய பின்பு வண்டியை எடுக்க வேண்டும். டிரம் சூடாவது புகை வாசனையில் தெரிந்துவிடும். அதே போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, கிளட்ச்சை அதிகம் பயன்படுத்தக் கூடாது. அதனால் கிளட்ச் செயலிழக்க நேரிடும். அந்த நேரங்களிலும் வாகனத்தில் கருகும் வாசனை வரும். அப்போது வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
மலைப்பாதையில் மழை பெய்யும் போது உள்ளே ஏ.சி. போடலாமா?
ஏசி போடாவிட்டால் கண்ணாடியில் காற்றுப் படலம் பரவி, எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படும். அப்போது ஏசியை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏசி ரெகுலேட்டரில் நீலம், பச்சை மற்றும் சிகப்பு என 3 நிறங்களில் வரும். அதில் பச்சையில் வைத்தால் கண்ணாடிகளில் பனிப்படலம் படர்வது தவிர்க்கப்படும். நீலகிரியில் வெவ்வேறு பகுதிகளில் 2 அல்லது 3 தட்பவெப்பநிலைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், அதற்கேற்ப ஏசியை பயன்படுத்துவதை உரிய மெக்கானிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
* பொதுவாக மலைக்கு எந்த வகை வாகனங்களில் வருவது சிறந்தது?
பெட்ரோல் வாகனமே பெஸ்ட். அதிகத் திறனுள்ள டீசல் வாகனங்களிலும் எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால் கல்லட்டி மலைப்பாதையில் அதிக வேகத்தில் கிளட்ச்சை அதிகம் பயன்படுத்தி இயக்கிய 3 டீசல் கார்கள் எரிந்துள்ளன. அந்த வாகனத்தில் பிரச்னையில்லை. இயக்கும் முறையால்தான் அந்த தவறு நடந்துள்ளது.
மலைகளில் சிஎன்ஜி கேஸ் கடினமாகிவிடும் என்பதால், வாகனத்துக்கான எரிசக்தி குறைவாகவே செல்லும் என்பதால் வாகனம் வேகமாக இயங்காது. அதனால் கியரைக் குறைத்து வேகப்படுத்த முயற்சி செய்வார்கள். அது வாகனத்துக்கு வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
* மலைகளுக்குச் செல்லும்போது டயர்களில் எவ்வளவு காற்று அழுத்தம் வைப்பது நல்லது?
அது ஒவ்வொரு வாகனத்தின் டயர் திறனைப் பொறுத்தது. ஆனால் மலைகளுக்கு வரும்போது, முன் பகுதியில் உள்ள சக்கரங்கள் நன்றாக வைத்திருப்பது மிகமிக முக்கியம். ஏனென்றால் இப்போது வரும் வாகனங்கள் பெரும்பாலும் முன் சக்கரத்தின் அடிப்படையில்தான் இயங்குவதால் (Front Wheel Moving) அந்த இரண்டும் நன்றாக இருந்தால் மட்டுமே மலைகளுக்கு காரை எடுத்துவரவேண்டும்.
* பனி மூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கார்களில் எந்த வகையான விளக்கைப் பயன்படுத்த வேண்டும்…அதற்கென்று சிறப்பு விளக்குகள் இருக்கின்றனவா? அதை எல்லா கார்களிலும் பொருத்த வேண்டியது அவசியமா?
இதற்கென்று சிறப்பு விளக்குகள் (Fog Light for car) இருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் இதைப் பொருத்துவது நல்லது. மலைகளுக்குச் செல்லும்போது, பனி மூட்டமாக இருந்தால் அதைப் போட்டுக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும். அது இல்லாவிட்டால் வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட்டால் பாதுகாப்பானது.
ஓட்டுநர் உட்பட அனைவரும் சீட் பெல்ட் கட்டாயமாக அணிய வேண்டும். இப்போது வரும் வாகனங்களில் குழந்தைகளுக்கும் சீட் பெல்ட் இருப்பதால் மலைகளில் பயணிக்கும்போது அதை அணிந்து கொள்வது நல்லது.

பட மூலாதாரம், Getty Images
எரிபொருள் கசிவு இருந்தால் வண்டியை எடுக்கவே கூடாது
கார்களில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டுமென்பதை பிபிசி தமிழிடம் விளக்குகிறார் உதகையைச் சேர்ந்த கார் மெக்கானிக் கணேஷ் பாபு.
- முதலில் கார்களை எடுக்கும் முன் எரிபொருள் கசிவு (Fuel Leakage), இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எரிபொருள் அல்லது எண்ணெய் கசிவுடன் மலைக்கு வரும் வாகனங்கள் எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
- அடுத்தது ஏசி வேலை செய்யாமல் இருப்பது, முகப்பு விளக்கு அல்லது Fog Lamp திடீரென எரியாமல் இருப்பது, ஆடியோ பழுதாகி பாடாமலிருப்பது போன்ற எலக்ட்ரிக் பழுது இருந்தால் அதைச் சரி செய்ய வேண்டும். உள்ளே மின்னியல் பழுதுள்ள நிலையில், வாகனத்தை இயக்கினால் மலைப்பாதையில் மிக அதிகமாக இன்ஜின் சூடாகும்போது, வயர் எரிந்து அதனால் வாகனம் எரியவும் வாய்ப்புண்டு.
- மலைக்கு வரும் போது ஏசியை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.மலைக்கு வரும்போது ஏற்கெனவே இன்ஜின் சூடு அதிகமாகும் என்பதால், ஏசியை பயன்படுத்துவது, வாகனத்தில் கூடுதலாக இரண்டு ஆட்கள் இருக்கின்ற அளவுக்கு பலுவை ஏற்படுத்தும்.
- வாகன தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைப்பதைத் தவிர்த்து, கூடுதலாக எல்இடி நியோ விளக்கு, கூடுதல் ஸ்பீக்கர் போன்ற கூடுதல் பொருட்களைப் பொருத்தும்போது, வயரிங் மிகச்சரியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வயரிங்கில் இன்சுலேஷன், டேப் எதுவும் இருக்காது. இப்போதுள்ள பெரும்பாலான வாகனங்களில் சைலன்சர் முன்புறத்தில் இருக்கும்.
- கூடுதல் பொருட்களுக்கு முன்பகுதியிலிருந்து வயரிங் செய்யும்போது, சைலன்சர் சூட்டில் வயர் சூடாகி, வாகனத்தில் ஷார்ட் ஆகும். அதற்கு முறையாக பியூஸ் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் உரசும்போது தீப்பிடித்து விடும்.

பட மூலாதாரம், Getty Images
எலக்ட்ரிக் கார்களில் சீக்கிரமாக சார்ஜ் இறங்கும்!
- பொதுவாக வாகனத்தை எடுக்கும்போது இன்ஜின் சூடு பூஜ்யமாக இருக்கும். 98 டிகிரி வரும்போதுதான் முன்பகுதியிலுள்ள மின்விசிறி சுழலும். அதற்குப் பின் வாகனம் மேலும் சூடாகும்போது, வயர்கள் உரசாமலிருப்பது அவசியம். அதற்கு தரமான வயர் பொருத்துவதுடன். இன்சுலேஷன் கொடுக்க வேண்டும். அதற்கும் மேல் ஸ்லீவ் என்ற பாதுகாப்பு கவசத்ததைப் பொருத்தலாம். ஒரு வேளை வாகன இயக்கத்தின் அதிர்வில் ஸ்லீவ் துண்டானாலும் இன்சுலேஷன் காப்பாற்றிவிடும். வயரிங் தரமாக இருப்பது மிக முக்கியம்.
- சமவெளிகளில் இருந்து வருவோர், மலையிறக்கங்களில் டாப் கியர்களிலும் அல்லது நியூட்ரலிலும் வாகனத்தை இயக்குவது அதிகம் நடக்கும். உதாரணமாக கல்லட்டி மலைப்பாதையில், கியர்களில் வாகனத்தை இயக்காமல் வேகமாகச் செல்லும்போது ஒரு வளைவில் 20 இடங்களில் பிரேக் தகட்டை மிதிப்பார்கள். அப்படி பிரேக் அடிக்கும்போது, ட்ரம் சூடாகும். முன்புறத்திலுள்ள டிஸ்க் மெட்டல் பிளேட் சூடாகும். குளிரூட்டியும் சூடாகி விடும் என்பதால் பிரேக் வேலை செய்யாது வண்டி விபத்துக்குள்ளாகும். மலையிறங்கும்போது சரியான கியர்களைப் பயன்படுத்துவதுதான் முக்கியமானது.
- எலக்ட்ரிக் கார்களில் லித்தியம் பேட்டரி அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதுவரை மலைக்கு வந்துள்ள எலக்ட்ரிக் கார்கள் எதுவும் எரிந்ததாகத் தகவல் இல்லை. ஆனால் சமவெளியை விட மலைப்பாதையில் ஆக்ஸிலேட்டர் பயன்பாடு 30 சதவீதம் அதிகம் என்பதால், இந்த வகை பேட்டரி சட்டென்று சார்ஜ் இறங்கிவிடும். அவற்றை அதற்குரிய சார்ஜிங் உபகரணத்தில் மட்டுமே சார்ஜ் ஏற்ற வேண்டும். அதனால் துாரத்தைக் கணக்கிட்டு, எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவது அவசியம்.
- சமவெளியில் பயன்பாடின்றி இருந்த வாகனங்களை திடீரென பழுதுபார்த்து மலைகளுக்குக் கொண்டு வருவதை முற்றிலும் தவிர்ப்பது கட்டாயம். அத்தகைய வாகனங்களில் எந்த நேரத்தில் எந்தவிதமான பழுது ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது என்பதால் மலைகளுக்கு அவற்றை எடுத்து வரவே கூடாது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU