SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், BBC/Jamie Niblock
சமீபத்தில், பிரிட்டனின் சஃப்பக் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மோசமான கொலைக்காக தூக்கிலிடப்பட்ட ஒருவரின் தோலைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.
1827ஆம் ஆண்டு ஒரு பெண்ணைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வில்லியம் கோர்டர், ஜார்ஜியன் பிரிட்டனை (நான்கு ஜார்ஜ் மன்னர்களால் பிரிட்டன் ஆளப்பட்ட காலம்) பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அந்தச் சம்பவம் பின்னாளில் “ரெட் பார்ன் கொலை” (Red Barn Murder) என்ற பெயரில் அறியப்பட்டது.
மோய்ஸ் ஹால் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள், ஒரு புத்தக அலமாரியில் இருந்த அந்த புத்தகம் இதுவரை கவனத்திற்கு வராததை உணர்ந்தனர். ஆனால் தற்போது அது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோர்டரின் உடலை உடற்கூறியல் செய்த அறுவை சிகிச்சை நிபுணருடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்தினர், பல தசாப்தங்களுக்கு முன்னர் இதைப் புத்தகத்தை அருங்காட்சியகத்துக்கு தானமாக வழங்கினர்.
வில்லியம் கோர்டர் குறித்தும், இன்றுவரை மக்களை ஆச்சரியப்படுத்தும் அந்த கொலை சம்பவம் குறித்தும் நாம் அறிந்தவை என்ன?
வில்லியமும் அவரால் பாதிக்கப்பட்ட மரியாவும் யார்?

பட மூலாதாரம், Getty Images
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போஸ்டெட் என்ற கிராமத்தில், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்த ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் வில்லியம் கோர்டர்.
22 வயதான வில்லியமும் மரியா மார்ட்டெனும் காதலிக்கத் தொடங்கியபோது, அவர் கோர்டர் குடும்பத்தின் தலைவராக இருந்தார்.
பெண்களின் கவனத்தைப் பெற்றவராகவும் இருந்தார். 24 வயதான மரியா, விவசாய நிலங்களில் பூச்சிகளைப் பிடிக்கும் வேலையில் இருந்த தந்தை, ஒரு மாற்றாந்தாய், சகோதரி மற்றும் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். வில்லியம் உடனான காதலை அங்கிருந்து தப்பிச்செல்லும் வாய்ப்பாக அவர் கருதியிருக்கக் கூடும்.
1827ஆம் ஆண்டில், வீட்டை விட்டு தப்பி ஓட, வில்லியம் ஒரு திட்டம் வகுத்தார்.
மரியாவை கோர்டர்ஸ் பண்ணையில் உள்ள ரெட் பார்னில் சந்திக்க வரச்சொல்லி சொல்லி, பிறகு இப்ஸ்விச் எனும் சிறு நகரத்துக்கு சென்று திருமணம் செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அதன் பிறகு மரியாவை காணவில்லை, வில்லியமும் அந்தப் பகுதியில் இருந்து மறைந்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்து என்ன நடந்தது?
தான் மரியாவுடன் வைட் தீவுக்கு (Isle of Wight) ஓடிப்போய்விட்டதாக மார்ட்டென் குடும்பத்திற்கு கடிதம் எழுதிவிட்டு, வில்லியம் இறுதியில் சஃப்பக்கை விட்டு வெளியேறினார்.
ஆனால் உண்மையில், வில்லியம் லண்டன் புறநகரில் மறைந்திருந்தார்.
மரியா கழுத்தில் சுடப்பட்டு, அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடமான ரெட் பார்னில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அங்கு பொதுவாகக் கூறப்படும் கதையின்படி, ஆன் மார்டன் தனது வளர்ப்பு மகள் இறந்து ரெட் பார்னில் இருப்பதாக கனவு கண்டார்.
அதனையடுத்து, மரியாவின் தந்தை தனது “மோல் ஸ்பட்” (விவசாய நிலங்களில், பூச்சிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது) மண்வெட்டியால் தோண்டி, அடக்கம் செய்யப்பட்டிருந்த தனது மகளின் எச்சங்களைக் கண்டுபிடித்தார்.
பின்னர் வில்லியமைத் தேடும் பணி தொடர்ந்தபோது, ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் தனக்கு வில்லியம் கோர்டர் குறித்து தெரியும் என்று கூறினார்.
“அவர் தப்பி ஓடிக்கொண்டிருந்தார். மேலும் தனிமையில் வாடியுள்ளார் என்று சொல்லப்படுகின்றது. அதற்காக, திருமணம் செய்வதற்கு ஒரு பெண் வேண்டும் என அவர் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது,” என மோய்ஸ் ஹால் அருங்காட்சியகத்தின் அதிகாரி டான் கிளார்க் கூறுகிறார்.
அருங்காட்சியகத்தில் ரெட் பார்ன் கொலை சம்பவம் தொடர்பான பல அரிய கலைப்பொருட்கள் உள்ளன.
அதில் கோர்டரின் தோலை பயன்படுத்தி பைண்டிங் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு புத்தகங்களும் அடங்கும்.
பின்னர் அதிகாரிகள் கோர்டரைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், மரியாவைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாது என்று அவர் மறுத்தார். ஆனால், மரியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக போஸ்டெட்டிலிருந்து வந்திருந்த ஒரு கடிதம் அவரிடம் இருந்தது.
பொது மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை

பட மூலாதாரம், Getty Images
மரியாவின் மரணத்தைப் பற்றி கூறப்படும் வெவ்வேறு கூற்றுகளின் அடிப்படையில், 10 கொலைக் குற்றச்சாட்டுகளுடன் வில்லியம் கோர்டர் பரி செயிண்ட் எட்மண்ட்ஸுக்கு அழைத்து வரப்பட்டார்.
தனது பாதுகாப்புக்காக, மரியா தன்னைத்தானே கொலை செய்துகொண்டதாகக் கூறிய வில்லியம், இதன் மூலம் இறந்த பெண்ணையே குற்றவாளி என குற்றம் சாட்டினார்.
இரண்டு நாட்கள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேலும் இறுதி வாக்குமூலத்தில், ஒரு வாக்குவாதத்தின் போது தவறுதலாக மரியாவைச் சுட்டுவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
1828ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறைச்சாலைக்கு வெளியே வில்லியம் கோர்டர் தூக்கிலிடப்பட்டதைக் காண, சுமார் 7,000 முதல் 10,000 பேர் வரை கூடியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நாள் மாலை, நகரத்தின் ஷைர் ஹாலில் அவரது உடலை பார்வையிட மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
“அன்று இவ்வளவு பேர் கூடியிருந்தார்கள் என்பதால், அவரை நேரடியாக சிறைக்கு வெளியே கொண்டு வர முடியவில்லை என்று சொல்லப்படுகின்றது. அதனால் அவர்கள் கட்டடத்தின் ஓரத்தில் ஒரு துளையிட்டு , ஒரு தற்காலிக மரப்பலகை அமைக்க வேண்டியிருந்தது,” என்று கிளார்க் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்போது பாட்டும் நடனமும் நடந்திருக்கும். பின்னர் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்திய கயிற்றின் ஒரு துண்டை மக்களால் வாங்க முடியும்” என்று கூறினார்.
பின்னர் போஸ்டெட் ஒரு சுற்றுலா தலமாக மாறியது. மக்கள் ரெட் பார்ன் மற்றும் மரியாவின் கல்லறை இருந்த இடங்களில் இருந்து நினைவு சின்னங்களாக சில பொருட்களை எடுத்துச் சென்றனர்.

கோர்டரின் மரபு
பொதுமக்களின் ஆர்வம் ரெட் பார்ன் கொலையைப் பற்றி கதைகள், நாடகங்கள் மற்றும் பாடல்கள் உருவாவதை ஊக்குவித்தது. இன்றைய குற்றவியல் கலாச்சாரத்திலும் அதன் தாக்கம் உள்ளது.
இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, ரெட் பார்ன் கொலை ஒரு சுவாரஸ்யமான கதையாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையான தகவல்கள் காலப்போக்கில் கற்பனைக் கதைகளால் மறைக்கப்பட்டு விட்டன.
கண்கள் மூடியும், நாசித் துவாரங்கள் விரிந்தும் உள்ள கோர்டரின் உருவப்படத்தை நேருக்கு நேர் பார்த்த அனுபவத்தின் மூலம் மக்களின் ஆர்வம் அதிகரித்திருக்கலாம்.
மரண தண்டனையின்போது அவர் அணிந்திருந்த முகமூடி மோய்ஸின் ஹால் மற்றும் நார்விச் கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இறுதியில் உடைந்து விழத் தொடங்கும் வரை, அவரது எலும்புக்கூடு வெஸ்ட் சஃப்பக் மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கப் பயன்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், BBC/Jamie Niblock
வில்லியம் கார்டரின் மரணத்திற்குப் பிறகு, அவரது தோல் இரண்டு புத்தகங்களை மூடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரது உச்சந்தலையின் ஒரு பகுதி, காது உட்பட அவரது பாகங்கள் திகிலுட்டும் நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த பொருட்கள் இப்போது மோயிஸ் ஹால் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Horrible Histories எனும் திகில் வரலாறுகளை உருவாக்கிய டெர்ரி டியரி, கோர்டருக்கு தவறாக “பழி சுமத்தப்பட்டதாக” நம்புகிறார். அதே சமயம் மரியா ஒரு அப்பாவி இளம் பெண்ணாக தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறுகிறார்.
கோர்டர் மீது குவிந்திருக்கும் கவனத்தை மாற்றி, மரியா மார்டன் உட்பட சஃப்பக்கின் வரலாற்றில் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக மோய்ஸ் ஹால் எதிர்கால கண்காட்சிக்கான திட்டங்களை அறிவித்தது.
அந்த அருங்காட்சியகத்தின் 80 சதவிகித பார்வையாளர்கள் ரெட் பார்ன் கொலை பற்றி அறிய “ஆவலுடன்” இருந்தனர் என அதன் உதவியாளர் அப்பி ஸ்மித் கூறுகிறார்.
“இது ஒரு கொடூரமான, அருவருப்பான ஒன்று, அதனால் மக்கள் அதை விரும்புவதை அறியும்போது, கவலையளிக்கிறது” என்கிறார் ஸ்மித்.

கொலையாளியின் தோலால் புத்தகங்கள் செய்யப்பட்டதா ?
அந்த அருங்காட்சியகத்தில் உள்ள இரண்டு புத்தகங்களில் ஒரு புத்தகம் இச்சம்பவத்தின் விசாரணையைப் பற்றியது.
இது பத்திரிகையாளர் ஜே கர்டிஸால் எழுதப்பட்டது. ‘டபிள்யூ. கோர்டரின் வழக்கு விசாரணை’ என்று அதன் பின்பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
வில்லியம் கோர்டரின் உடற்கூராய்வைச் செய்த அறுவை சிகிச்சை நிபுணர் ஜார்ஜ் க்ரீட் எழுதிய ஒரு குறிப்பும் அதன் உள்ளே உள்ளது. 1838ஆம் ஆண்டில், வில்லியம் கோர்டரின் தோலைப் பதனிட்டு புத்தகத்தை கட்டியதும் அறுவை சிகிச்சை நிபுணர்தான் என்றும் அது கூறுகிறது.
இரண்டாவது புத்தகமும் அதே பதிப்பாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் பின்புறத்தில் “போஸ்டெட் – வில்லியம் கோர்டர்” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம், ஜார்ஜ் க்ரீட்டுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு குடும்பத்தினரால் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அவர் தனது பல உடைமைகளை அந்தக் குடும்பத்திடம் விட்டுச் சென்றுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU