SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியின் மூலம் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்த 3 ஓவர்களில் என்ன நடந்தது?
கோலி அதிவேக அரைசதம்
ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்தாலும், சால்ட் களத்தில் இல்லாத குறை தெரியாமல் ரசிகர்களை கோலி கவனித்துக்கொண்டார். பும்ரா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி, வில் ஜேக்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மும்பை பந்துவீச்சை தெறிக்கவிட்ட கோலி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, அடுத்த 11 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆட்டத்தில்தான் கோலி அதிக வேகமாக 30 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பட்டிதார், ஜிதேஷ் பங்களிப்பு
ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்ததில் ஜிதேஷ் சர்மா, கேப்டன் பட்டிதாரின் பங்களிப்பு முக்கியமானது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். 19 பந்துகளைச் சந்தித்த ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பட்டிதார் மும்பை பந்துவீச்சாளர்களில் ஜேக்ஸ், ஹர்திக், போல்ட், தீபக் சஹர் பந்துவீச்சை உரித்தெடுத்துவிட்டார். இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என பட்டிதார் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்தார். இருவரின் ஆட்டம் ஆர்சிபி பெரிய ஸ்கோரை எட்டகாரணமாக இருந்தது.
ஏனென்றால் இதற்கு முந்தைய 6 ஆட்டங்களிலும் 190வரை ஸ்கோர் செய்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பதால், 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்கோர் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா வருகை தாக்கம் ஏற்படுத்தியதா?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு, கிங் கோலி என்பதை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்த பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை,

பட மூலாதாரம், Getty Images
திக் திக் ஆட்டம்
ஐபிஎல் டி20 போட்டியில் “ரைவலரி வாரம்” என்று அடையாளப்படுத்தப்பட்டு போட்டிகள் நடக்கைகயில் முதல் ஆட்டமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன்திர் களத்தில் இருக்கும்வரை வெற்றி யாருக்கு என்பது உறுதியில்லாமல் இருந்தது, ஆட்டம் மும்பை அணி பக்கமோ அல்லது ஆர்சிபி பக்கமோ சாயலாம் என்ற ரீதியில் இருந்தது.
ஆனால், புவனேஷ்வர் வீசிய 18வது ஓவர், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர், குர்னல் பாண்டியா வீசிய 20-வது ஓவர் ஆகியவை வெற்றியை ஆர்சிபி பக்கம் மாற்றியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆர்சிபிஅணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறின.
மும்பை அணியின் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. வெற்றிக்கு 8 ஓவர்களில் 122 ரன்கள் தேவைப்பட்டது.
ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, 34 பந்துகளில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர். 4வது விககெட்டுக்கு188 ரன்களுடன் மும்பை வலுவாகஇருந்தது, ஆனால், கடைசி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது, அதிலும் க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி.

பட மூலாதாரம், Getty Images
போராடிய மும்பை அணி
மும்பை அணியின் கரங்களில் இருந்த வெற்றியை ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வர், க்ருணால் பாண்டியா சேர்ந்து பறித்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா களத்தில் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும்.
ஏனென்றால், நேற்று ஹர்திக் பாண்டியா “வின்டேஜ் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள்” போல் விளாசினார், அவரின் பேட்டிலிருந்து சிதறிய ஷாட்கள் ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் பவுண்டரி, சிக்ஸரை அடைந்தன, ராட்சதனைப் போல் பேட் செய்த ஹர்திக் கண்களில் வெற்றி தீப்பொறி பறந்தது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 42 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
கிரிக்இன்போ கணிப்பின்படி, 47 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 123 ரன்கள் தேவை என்றபோது அதன் வெற்றி சதவீதம் 1.89 என இருந்தது. ஆனால், திலக் வர்மா 18-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது மும்பை வெற்றி சதவீதம் 48.42 சதவீதமாக உயர்திருந்து வெற்றிக்கு அருகேதான் இருந்தது.
கடந்த ஆட்டத்தில் ரிட்டயர் அவுட் மூலம் திலக் வர்மாவை மும்பை அணி அழைத்துக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் திலக் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 4 சிக்ஸர், 4பவுண்டரி என 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக், திலக் வர்மா கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஸ்வரஸ்யத்தைச் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
ஹேசல்வுட், சூயஷ் கட்டுக்கோப்பு
மும்பை அணியின் வெற்றியை பறித்ததில் ஹேசல்வுட்டின் துல்லியமான லென்த் பந்துவீச்சும், சூயஷ் சர்மாவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணம். சூயஷ் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் 4 ஓவர்களில் மும்பை பேட்டர்கள் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹேசல்வுட் பந்துவீச்சில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
சூர்யகுமார் அடித்த ஷாட்களில் இரு கேட்சுகளை நேற்று ஆர்சிபி அணியினர் தவறவிட்டனர். முதல் கேட்சை சூயஷ் சர்மாவும், 2வது கேட்சை யாஷ்தயாலும், விக்கெட் கீப்பர் சர்மாவும் பிடிக்க முயன்று மோதிக்கொண்டு கேட்சைவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தாத சூர்யகுமார் 12வது ஓவரில் யாஷ் தயாலிடம் விக்கெட்டை இழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வெற்றியைத் தீர்மானித்த கடைசி 3 ஓவர்கள்
கடைசி 18 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருந்தனர். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் புவுண்டரி அடிக்கவே, அதே ஓவரில் திலக் வர்மா ஆப்சைடில் சென்ற பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று சால்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த நமன்திர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பதற்றத்தைக் குறைத்தார்
19-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். மும்பை வெற்றிக்கு 12 பந்துகளி்ல் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை லிவிங்ஸ்டோன் கேட்ச் பிடிக்கவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்துவந்த சான்ட்னர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்ட சென்றார்.
கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. குர்னல் பாண்டியா பந்துவீசினார். களத்தில் சான்ட்னர், நமன்திர் இருவரும் இருந்தனர். க்ருணால் வீசிய முதல் பந்து சிக்ஸருக்கு செல்லும் என எதி்பார்த்தபோது, லாங் ஆப் திசையில் உயரமான பீல்டர் டிம் டேவிட் அற்புதமான கேட்சைப் பிடித்தார்.
அடுத்துவந்த தீபக் சஹர் வந்தவுடன் சிக்ஸருக்கு பந்தை விரட்டமுயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்த சால்ட், பவுண்டரி கோட்டுக்குள் செல்ல முயன்றபோது டிம் டேவிட்டிடம் பந்தை தூக்கிவீசினார். தொடர்ந்து இருவிக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதன்பின் நமன்திர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 5வது பந்தில் நமன்திர் லெக்திசையில் யாஷ் தயாலிடம் கேட்ச் கொடுக்கவே மும்பையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த 3 ஓவர்கள்தான் வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானித்தது.

பட மூலாதாரம், Getty Images
வேற லெவலில் ஆர்சிபி
கடைசியாக 2015ம் ஆண்டு வான்ஹடே மைதானத்தில் மும்பை அணியை 39 ரன்களில் ஆர்சிபி வென்றிருந்தது. அதன்பின் சரியாக 10 ஆண்டுகளுக்குப்பின் இதே வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 6 முறை மும்பையுடன் மோதியும் ஒருமுறைகூட ஆர்சிபி வெல்லவில்லை. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சேர்த்த ஸ்கோரும் மும்பை அணிக்கு எதிராகச் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.
ஏற்கெனவே சென்னையில் சிஎஸ்கே அணியை 17ஆண்டுகளுக்குப்பின் வெற்றி கண்டு வரலாறு படைத்த ஆர்சிபி, இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.
ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத்பட்டிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இது தவிர விராட் கோலியின் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த அற்புதமான ஆட்டம், தேவ்தத் படிக்கலின் (37) கேமியோ, கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சை வெளுத்துவாங்கி 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாகும்.

பட மூலாதாரம், Getty Images
“பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டநாயகர்கள்”
வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் ” அற்புதமான ஆட்டம், வெற்றிக்கு கடினமாக உழைத்தோம். பந்துவீச்சாளர்கள்தான் உண்மையான ஆட்டநாயகர்கள், அவர்களுக்கு என் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தி கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றினர். இந்த மைதானத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, அதைசெய்துள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தினர். க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தை திருப்பியது. சூயஷ் சர்மா எங்களின் துருப்புச்சீட்டு,விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர். அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்குரியது” எனத் தெரிவித்தார்.
ரோஹித்தை துரத்தும் துயரம்
முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தாலும் அவரது ஆட்டத்தில் பழைய வேகத்தை காண முடியவில்லை. ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் மோசமாகவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பவர் பிளே ஓவர்களில் (குறைந்தது 200 பந்துகளை சந்தித்த பேட்டர்கள்) ரோஹித்தின் சராசரி ரன் 24.59 ஆக இருக்கிறது.
அந்த வகையில் விரித்திமான் சாஹா மட்டுமே ரோஹித்தை விட குறைந்த சராசரியை வைத்திருக்கிறார். அதுவே, 2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் குறைந்தது 180 பந்துகளை சந்தித்த பேட்டர்களில் ரோஹித்தின் 27.90 என்ற சராசரியே மிகவும் குறைவாகும்.

பட மூலாதாரம், Getty Images
புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். டி20 ஃபார்மெட்டில்13 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். 386 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய 2வது வீரராக கோலி இருக்கிறார். கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU