SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பை அமெரிக்கா தேர்வு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தமது பதவிக்காலம் முடியும் போது அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரியில், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்புக்கான தனது திட்டங்களை அறிவித்தார்.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்ற “அதி நவீன” வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
ஆரம்ப கட்டமாக, இந்த திட்டத்துக்கு 25 பில்லியன் டாலர் (18.7 பில்லியன் யூரோ) புதிய பட்ஜெட் மசோதாவில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் எதிர்காலத்தில், இதற்கான மொத்தச் செலவு இதைவிட கணிசமாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எதிரிகளிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களை எதிர்க்கும் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவார் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெனரல் குட்லின் தற்போது விண்வெளிப் படையில் விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராக உள்ளார்.
டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஏழு நாட்களுக்குள், வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உதவும் ஒரு அமைப்புக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
இது அமெரிக்கா எதிர்கொள்ளும் “மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களில் ஒன்று” என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், இந்த அமைப்பு நிலம், கடல் மற்றும் விண்வெளி முழுவதும் “அதி நவீன” தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.
இதில் விண்வெளி அடிப்படையிலான சென்சார்கள் மற்றும் தடுப்புக் கருவிகளும் அடங்கும் என்றார்.
மேலும் இந்த அமைப்பில் சேர கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில்,அப்போதைய கனட பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் வாஷிங்டனுக்கு பயணம் செய்தபோது, இந்த ‘டோம்’ திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
அது “அர்த்தமுள்ளதாக” இருப்பதாகவும், “தேசிய நலனுக்காக” இருக்கும் என்றும் கூறிய அவர்,
“பிராந்தியத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கனடா அறிந்திருக்க வேண்டும்” என்றும், ஆர்க்டிக் பகுதிகளில் வரவிருக்கும் அச்சுறுத்தல்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த அமைப்பு “உலகின் மறுபக்கத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ அல்லது விண்வெளியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அமைப்பு 2011 முதல் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை தடுக்கும் இஸ்ரேலின் இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோல்டன் டோம் அதை விட பல மடங்கு பெரியது.
ஒலியின் வேகத்தை கடந்து இயங்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் விண்வெளியிலிருந்து ஏவுகணை குண்டுகளை வீசக்கூடிய சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்புகள் (ஃபோப்ஸ் என அழைக்கப்படுவது) போன்ற பரவலான அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.
“அவை அனைத்தும் வான்வெளியில் இருந்து அகற்றப்படும்,” என்று கூறிய டிரம்ப், அதன் “வெற்றி விகிதம் 100% க்கு மிக அருகில் உள்ளது.” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன், அல்லது அவை வானில் பறக்கும் தருணத்தில் என பல்வேறு கட்டங்களில் அவற்றைத் தடுக்கும் திறனை அமெரிக்காவுக்கு அளிப்பதே, கோல்டன் டோம் அமைப்பின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
இந்த அமைப்பின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் ஒரே மைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று, இந்தத் திட்டத்திற்கு ஆரம்பகட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும், மொத்தமாக 175 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஆரம்பகட்ட முதலீடான 25 பில்லியன் டாலர் என்பது, வரிகளுக்கான அவரது ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் மசோதாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் (Congressional Budget Office) தெரிவித்துள்ளபடி, அந்த அமைப்பில் விண்வெளி சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் 20 ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு 542 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கிய புதிய ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள் மேம்படவில்லை என்று பென்டகன்(அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை) அதிகாரிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
“உண்மையில், தற்போது முழுமையான அமைப்பு எதுவும் இல்லை,” என்று டிரம்ப் செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் கூறினார்.
“சில வகையான ஏவுகணைகள், சில பாதுகாப்பு அமைப்புகள் மட்டும் தான் உள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பு எதுவும் இல்லை… இதுபோன்ற திட்டம் இதுவரை எப்போதும் இருந்ததில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் “அளவிலும் , நுட்பத்திலும் அதிகரிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள “இடைவெளிகளை பயன்படுத்த” புதிய ஏவுகணை அமைப்புகளை தீவிரமாக வடிவமைத்து வருகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU