SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது.
இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது 2020 க்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை சந்தித்துள்ள மிக மோசமான வாரமாகும்.
பிரிட்டனில், ஃஎப்டிஎஸ்ஈ 100 (FTSE) கிட்டத்தட்ட 5 சதவிகிதம் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில், ஆசிய சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
மேலும், ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள பங்குச் சந்தைகளும் இதேபோன்ற கடுமையான சரிவை எதிர்கொண்டன .
பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளை நிராகரித்த டிரம்ப், அமெரிக்க தொழிலாளர் சந்தை வலுவாக இருக்கிறது என்றார்.
மேலும், “துணிவுடன் இருங்கள்,” என்றும், “நாம் தோற்க முடியாது” என்றும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 10% புதிய வரியை டிரம்ப் விதித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்னும் அதிக அளவிலான வரியை எதிர்கொள்கின்றன. இதனால் உலக பங்குச்சந்தை பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளில் சில சனிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், 1968க்குப் பிறகு அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள மிகப்பெரிய வரி உயர்வு இது என்றும் கூறுகின்றனர் .
இந்த நடவடிக்கைகள் வர்த்தகத்தை குறைக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவை பல்வேறு நாடுகளை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமையன்று சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவிகித இறக்குமதி வரி விதித்ததுடன், முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியது. சில அமெரிக்க நிறுவனங்களை தனது வணிகத் தடை பட்டியலில் சேர்த்து, டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்தது.
மேலும் டிரம்பின் நடவடிக்கைகள், “அழுத்தம் கொடுப்பதாகவும்”, சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும் சீனா விவரித்தது.
அதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கான ஆர்வம் குறித்து அமெரிக்க அரசு முரண்பட்ட சமிக்ஞைகளை வழங்கியிருந்தாலும், மற்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு உடன்பாடுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதற்காக நம்பிக்கையுடன் இருக்கின்றன.
பதிலடி வழங்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஷ் செஃப்கோவிச், வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் “வெளிப்படையான” பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.
“ஐரோப்பிய ஒன்றியம் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்த உறுதியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எங்களது நலன்களை பாதுகாக்கவும் தயாராக உள்ளது, நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு அவர் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் அவை சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட மிக மோசமான வாரமாக இது அமைந்துள்ளது.
ஆசியாவில் உள்ள விநியோகஸ்தர்களை பெரிதும் நம்பியிருந்த ஆப்பிள் மற்றும் நைக் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
ஆனால், பொதுவாக இறக்குமதி வரிகளின் நேரடி தாக்கத்தை எதிர்கொள்ளாத துறைகளாகக் கருதப்படும், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் மின்சாரம், தண்ணீர், எரிவாயு, இணையம் போன்ற துறைகளும் வெள்ளிக்கிழமையன்று சரிவை எதிர்கொண்டன.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளின் பாதிப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகலாம் என்று எச்சரித்த அமெரிக்காவின் ஹாரிசன் இன்வெஸ்ட்மென்ட்ஸில் ஆராய்ச்சி மற்றும் அளவியல் உத்திகள் பிரிவின் தலைவராக உள்ள மைக் டிக்சன், “வெளிப்படையாகக் கூறினால், வர்த்தகர்களின் தற்போதைய மனநிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறினார்.
“நாங்கள் இப்போது உண்மையிலேயே கவலைப்படுவது காலை 6 மணியளவில் [சீனா பதிலடி கொடுத்தபோது] நடந்ததைக் குறித்துதான். அப்படிப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் எத்தனை உள்ளன? என்பதே கேள்வியாக உள்ளது” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஜேபி மோர்கன் முதலீட்டாளர்களுக்காக வெளியிட்ட குறிப்பில், இந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சில முதலீட்டாளர்கள் இழப்புகளைக் குறைத்து மதிப்பிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இப்போதைய சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
“சந்தையில் நாம் காணும் இந்த மாற்றங்கள் கடுமையானவை. ஏனென்றால் ஒரு விஷயம் மேலே செல்லும் வேகத்தைவிட, அது கீழே சரிவது மிக விரைவாக நடக்கிறது,” என்று கேப்வெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் பக்லியாரா கூறினார்.
உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்கா ஒரு “பெரிய மறுசீரமைப்பு” நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், ஆனால் அந்த முயற்சி அவசியமானது என்றும் அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல், மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் வலுவான வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதை பிரதிபலிக்கும் சமீபத்திய தரவுகளை மேற்கோள்காட்டி, பொருளாதாரம் “உறுதியாக” இருப்பதாக தான் கருதுவதாகக் கூறினார்.
ஆனால் அதிக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“எதிர்பார்த்ததை விட வரிகள் அதிகமாக உள்ளன, கிட்டத்தட்ட அனைத்து முன்னறிவிப்பாளர்களும் கணித்ததை விட அதிகமாக உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்,” என்று பவல் கூறினார்.
வளர்ச்சி மெதுவாக நடைபெறும், மறுபுறம் விலைகள் உயரும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் எச்சரித்தார்.

நியூ ஜெர்சியில், சிறு வணிக உரிமையாளராக உள்ள பாட் மஸ்கரிடோலோ, இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது உபகரணக் கடையான ஜேக்கப்சன் அப்ளையன்ஸை மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறினார்.
தேவையான பொருட்களை இப்போது வாங்கிக் கொள்ளுமாறு அவர் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மேலும், “மாத இறுதியில் விலை என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது,” என்றும் அவர் கூறினார்.
குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் விலைகள் 30 சதவிகிதம் அல்லது 40 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
வியாழக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்த நைக் மற்றும் பிற சில்லறை ஆடை விற்பனையாளர்களின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று ஓரளவு மீண்டன.
வியட்நாம் அதிபருடம் “மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பு” நடந்ததாக டிரம்ப் கூறியதையடுத்து, உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இந்த பங்குகளுக்கு ஊக்கமளித்தது.
ஆனால் சந்தையின் பிற பகுதிகள் தொடர்ந்து மந்தமாக இருந்தன. உற்பத்திக்காக சீனாவைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 7 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்தன.
புதன்கிழமையிலிருந்து இதுவரை, ஐபோன் தயாரிப்பாளர்களின் சந்தை மதிப்பு சுமார் 15 சதவிகிதம் குறைந்துள்ளது.
இழப்புகள் தொடர்ந்த நிலையில், சில வெள்ளை மாளிகை ஆதரவாளர்கள் கூட இந்த நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினர்.
வரிகள் தொடர்பான ஒரு பாட்காஸ்டில், குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு நன்மை கிடைக்க வழிவகுத்தாலும், அதே நேரத்தில் “மிகுந்த அபாயங்கள்” உள்ளதாகவும் எச்சரித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC